It கலைமகன் கவிதைகள்: 2011

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஈழத் திசை பரப்பு

ஈழத் திசை பரப்பு
- கலைமகன் பைரூஸ் -


ஈழவளநாடு இனிமைசேர்நாடு
இங்கெங்கும் அழகென்று பண்பாடு!
நீள்நதிகள் பாய்வன இங்குபாரு
நெஞ்சமதை பாசத்தால் நீநீட்டு!


வடக்கினை தெற்கினை ஒன்றாய்ப்பாரு
வடுக்களை மறந்து நீமாறு!
இடுக்கண் மறந்திட இங்குண்டு பூங்காடு
இதமெனவே நீஅதனைப் போய்ச்சேரு!


நீள்தெங்குகளும் பனைகளு முண்டிங்குபாரு!
நலமுண்டு அதிலெல்லாம் உனையும்நீ மாற்று!
புள்ளெனவே நீபறந் தெங்கும் செல்லு
புசிப்பதொடு இலங்கையென் நாடென் றோது!


மிக்குயர் மலைகளும் தேயிலையு முண்டு
மிதமான கல்விச் சாலைகளு முண்டு!
திக்கெல்லாம் உனைப்பாட கல்விப் பாலுண்டு
திசைபரப்பு ஈழமென் நாடென்று!


தமிழ் முஸ்லிம் சிங்களவர் நாமொன்றென்று
தரணியிலே நீ உரத்துப் பாடு!
தேமாங்கனியன்ன ஒற்றுமை ஒன்றேயேநீ
தெவிட்டாத சுவையென இங்கு பேணு!


செம்புலமெங்கும் செம்மையையே நீகாணு
சரித்திரம் புதுபடை நீஉயரு!
நம்மவர் புகழெங்கும் களிபேசு
நமதான நாட்டினையே உயர்த்திப்பேசு!


கோயில்பள்ளி தாகபைகள் நிறைநாடு
குனிந்து நிமிரச்செயும் விவசாயநாடு!
நோயில்லை எங்களுக்குள் ஒன்றாயின்பாரு
நீட்டிடலாம் சிந்தித்திட நிமிர்ந்துநீபாரு!


நன்றி: தினகரன் வாரமஞ்சரி
http://www.thinakaran.lk/Vaaramanjari/2011/12/11/?fn=d1112111
நன்றி சைபா பேகம் - இலண்டன் வானொலி (கவிதை நேரம்)

https://soundcloud.com/kalaimahan/aud-20180214-eelath-thishai-parappu-poet-kalaimahan-fairooz





ஞாயிறு, 30 அக்டோபர், 2011

பேருக்கே எல்லாம்!


கலைமகன் பைரூஸ்

பேரும் புகழும் கிடைப்பதற் காய்
பேராம் மரபை யழிக் கின்றார்
சீரிளமை யறியாது மமதைக் காய்
தளைதட்ட திரிசொலை யாள் கின்றார்
நேரிலாத கானல் நீரன்ன தாய்
நயமேயிலாத ஆக்கங்கள் புனை கின்றார்
கார்மேகக் கவிபுனையும் வல்லாள ருண்டு
கயமையினால் வீசுகின்றார் மடமை யன்றோ!

இதனை யிதனால் இவன்செய்வா னென்று
அறியா தின்று பேருக்குப் பணியீவார்
முதன்மை யாவர் அந்தமாய் சென்றிடவே
மமதை யாளரைத் தேர்கின் றார்
இதமான இயற்றமிழொடு சமர் செய்தே
இங்கவர் படைத்திடும் பா நயப்பே!
பேதமையால் கருவிலா கவி புனைந்தே
பைந்தமிழ்க் கிவர் செய்வதுதான் பணியோ?

எழுத்தசை சீர் அடிதொடை எலாம்
எழுத்தெண்ணிக் கற்றிடின் நலமே - இவர்
முழுமையும் பேருக்காய் செய்வ ரிங்கே
மூழ்குவரே இலக்கியத்துள் மறைந் தழிவர்
பழுதிலாக் காவியங்கள் படைத் திடுக
பைந்தமிழ்க்கு பணிசெய்க என்றிடுவீர் நீரும்
வீழாத நற்றமிழின் மேன்மை யுன்னி
விடாக்கொண்டர்க் கீயாதீர் நற்றமிழ் பணியே!

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

வாக்கு வேட்டைக்காரர்

- ஜின்னாஹ் ஷரிபுத்தீன் -


வழமைபோல் தேர்தல் வரவு கொண்டோம் நாடே
இளமைகொண்ட தாமோ எனுமாப்போல்- துள்ளியெழும்
உற்சாக மேலீட்டால் ஓடுகின்றார் வீடுவீடாய்
பெற்றிடத்தான் வாக்குகளைப் பார்

தேர்தல் களத்தில் தகுதியற்றோர் போட்டியிட்டால்
சார்ந்துநீர் வாக்களித்தல் சாலதே- நேர்மையொடு
நாட்டுக் குழைக்கின்ற நல்லவர்க்கே கைதருவீர்
“ஓட்டின்” பலமறிக ஓர்ந்து

வாக்களிப்பார் எல்லா வகையும் நாம் செய்வோமென்பார்
சோக்காய்க் கதையளப்பார் சொல்லும்பொய்- காக்கும்
திறனற்றோர் நாற்காலி தன்பாலே தேடும்
குறியன்றி வேறொன் றிலை

தந்தையென்பார் தாயென்பார் தம்பி தமக்கையென்பார்
சொந்தம் நீர் செங்குருதிச் சார்பென்பார்- விந்தையிலை
தேர்தல் முடிந்தபின்னர் தேராரே சென்றால் நீ
யாரப்பா என்பார் இகழ்ந்து

ஊருக் குழைக்கின்ற உத்தமர்கள் உண்டாம்பொய்ப்
பேருக்குப் பொன்வீசும் பேருமுண்டு- சீரற்றுப்
போனதின்று முற்றும் தெரிந்து முகம் கொள்வீர்
ஞானருக்கே வாக்களிப்போம் நாம்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

ஹிஜாப் !!!



















பத்திரமாயிருக்கிறேன்...
எனக்குள் - நான்
மிக மிகப்பத்திரமாய்....!!!

எச்சில் இலைமீதான
இலையான்களைப்போல
எவர் கண்ணும்
என்னை
அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!!
டீக்கடை தாண்டி
நடந்து போகையில்...
எல்லோர் கவனமும் பறித்து
என்னைப்பற்றியே
விமர்சித்துத் தொலைத்து
வங்களால் நிரம்பிவழிய...
வாய்ப்பளிப்பதில்லை- நான்...!!!

என்னைப்
பின்தொடர்ந்து வா...
விசிலடி..!!!!
கேலிசெய்....!!!
என யாரையும்...
என் உடைகளால்
சீண்டிவிடுவதில்லை நான்...!!!

வகுப்பறைகளிலும்...
பாடப்புத்தகம் மீதான
அடுத்தவர் கண்களை
ஒருபோதும்
கிழித்துப்போடுவதில்லை-நான்!!!


விழிகளால் ஊரே ரசித்து...
கழித்துப்போட்ட
எச்சில் பண்டமாய்
எப்போதும் இருந்ததில்லை - நான்!!!


அல்லாஹ்வின் கட்டளைகளில்;
கணவனின் கண்களில்;
நான் மிகப்பெரும்
அழகியாய்
உயர்ந்து நிற்கிறேன்...!!!

அறியாமையினால்;
இவர்கள்தான்
உரத்துக்கூவுகிறார்கள்....
ஹிஜாப்
அடக்குமுறையென்று!!!!!!!!!

பாவம் அவர்கள்....;
.......................
அநாவசிய பார்வைகளை....
அந்நியரின் விமர்சனங்களை ....
அனாச்சாரங்களை ....
அடக்கிவைக்கும்
அதிஉன்னத ஆயுதம்....
ஹிஜாப்
என்பதை அறியாமல்....!!!!

நன்றி : றஹீமா பைஷால்




புதன், 6 ஜூலை, 2011

நினைத்திடு நெஞ்சே நீ!

மதிதனம் விரும்பி மானுட னென்றும்
விதியிதுவென் றுழல்கின்றான் - பின்னே
மதிதனம் விரும்பி காசுகள்ளெனக் கண்டு
மதிமயங்கி வீழ்கின்றான்!

கதியிதுவேன பின்னே கதிகலங்கி நிற்கின்றான்
காலத்தை வீணே வைகின்றான் - இவன்
மதியின்மை நோக்கா னென்ஷம் - தீதுநின்று
மரண பயமின்றி வாழ்கின்றான்!

பதியினைப் போற்றாப் பெண்டிருட னிணைந்து
பொழுதை வீணே கழிக்கின்றான் - தும்பி
சுதிகோண்டு கள்விரும்பி வருவதுபோ லென்றும்
சுற்றியே தினம் அழைகின்றான்.

கருடன்வாய்கொண்ட சென்னிவிரி நாகமென
காதலனிவன் இருக்கின்றான் - பின்னே
பேரே யழிந்துவிடும் பெருமூச்சு விடுகின்றான்
பேதமை யென்னென்பேன் இவன்!

கொண்டவனை கொன்றுவிடும் விடநாக முண்டு
கொண்டவனை நாவாலே கொளும் விடமுண்டு
தீதொன்றறியா சீதேவிகளுமுளர் பாரில்
திருந்திவிடி னெல்லோரும் நலமே!

சீருடன் தரைமீது மேலெழலாம் - திருவிருக்க
சீதேவிதனம் கோளின் மேலுயரும் பேரு!
கருவினிலே தீக்கருவறுத்து - நற்
காரியங்கள் செய்திட நினைத்திடு நெஞ்சே நீ!

-கலைமகன் பைரூஸ்
இலங்கை.

நன்றி : ......................................


ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

இதுதாண்டா கவிதை!

2011 02 16 தினக்குரல் வாரவெளியீட்டில் (அதாவது இன்று) வெளிவந்துள்ள கவிதை. உள்ளத்தை ஈர்க்கும், காலத்தைப் படம்பிடித்துக்காட்டும் நல்ல, நான் நயந்த கவிதை. படைப்பாளி கவிஞர் கிண்ணியா கே.எம்.எம். இக்பாலுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நல்ல கவிதையைப் பிரசுரித்த தினக்குரல் பத்திரிகையையும் நன்றியுணர்வுடன் நோக்குகின்றேன். கவிதைத் தரம்கண்டு நான் அக்கவிதையை மிளிரச்செய்துள்ளேன்.
-அன்புடன் கலைமகன் பைரூஸ்



வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

இன்றும் தேடுகிறேன்!

இன்று 2011.02.04 இலங்கையின் 63ஆவது சுதந்திர தினம்

இன்றும் தேடுகிறேன்!

இன்றும் வந்ததோர் தினம்
இன்றும் தேடுகிறேன் இத்தினம்!
இதனைத் தேடி யோடுகீறேன்
இதயம் கனக்கிறதே!
இதயம் இமயமாய் அடிக்கிறதே!
இதயமுள்ளோர் இத்தரையில்
இணைந்திட்டால் கரங்கள் இணைத்தே
இன்பம் பொங்கும் இத்தரையில்!
இதயம் பூரிப்புரும் இத்தினத்தில்!
இன்றாவது மலருமா மெய்ச்சுதந்திரம்!

-கலைமகன் பைரூஸ்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

பத்திரிகை படித்திட வேண்டும்!


காலத்தின் தேவை இக்கவிதை!

பத்திரிகை படித்திட வேண்டும்!

நாட்டுநலம் அறியமலை நாட்டவ ரெல்லாம்
நாளாந்தம் தினத்தாள்கள் படித்திட வேண்டும்
வீட்டிலுள்ள மாதர்களும் வேலை செய்வோரும்
வசதிக்கேற்ற படிதினம் வாசிக்க வேண்டும்
ஏட்டறிவு இலாதோரும் எழுத்தறிந் தோறின்
இசைவுநாடி நிலைமைகளைக் கேட்டறிந் திடனும்
பூட்டிஇருள் சூழ்ந்தமனக் கோட்டைக ளெல்லாம்
புதியபுதிய சேதிகளால் துலங்கிட வேண்டும்


நமதுநாட்டில் நிகழுகின்ற சேதிகள் என்ன
நம்மைப்பற்றி நிகழ்காலக் கருத்துக்க ளென்ன
அமைதியற்ற புலன்களிலே நடப்பவை யென்ன
அரசஎதிர் கட்சிகளின் போக்குகள் என்ன
சமகால வாழ்வுமுறைப் பயண நெரிசலில்
தொழிலாளி நிலையென்ன பிறர்நிலை யென்ன
நமைநாமே அறிதலொடு பிறர்நிலை அறிய
நாளாந்தம் பத்திரிகை படித்திட வேண்டும்


ஆபிரிக்க நாட்டில்நடக்கும் அதிசய மென்ன
அமெரிக்கரின் வாழ்வில் தோன்றும் மாறுத லென்ன
தாபரிக்க யாருமற்று வறுமையின் பிடியில்
துயருரும் ‘ஏ தோப்பியரின்’கொடுமைதா னென்ன
சாபவிமோ சனமிலாத கேடென உலகின்
சரித்திரத்தில் கறைபடிக்கும் போர்வெறி யென்ன
கோபங்கொண்டு சீறும்இயற்கைக் கோரங்களாலே
குடிகள்படும் துயரினையும் அறிந்திட லாமே!


அரசியலை அறிந்திருக்க வேண்டுமே நம்மோர்
அன்றாட நிகழ்வுகளை புரிந்திட வேண்டும்
சரியான வேளைவரும் போதினில் எம்மோர்
சக்திதனைக் காட்டநமைத் தயார்ப டுத்தணும்
உரியவாறு அனைத்துமறிந்து வைத்திருந் தாலே
ஏற்றபோது ஏற்றதனைச் செய்தல் கூடுமே
அரிமாவும் மண்டியிடும் காலம் நம்பதம்
அரசியலில் உறுதியுற ஆவன செய்வோம்


சுற்றியுள்ளோர் சேர்ந்துதினம் ஒன்றென் ருயினும்
தரமான தினசரியைத் தெரிந்து வாங்கணும்
ஒற்றுமைக்குப் பங்கமின்றி ஒருவர்பின் ஒருவர்
உலகளாவுஞ் சேதிகளை ஓர்ந்த றிந்திடணும்
மற்றவரும் படித்தறியும் வாய்ப்பை அளிக்கணும்
மனத்திலுதிக்கும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளணும்
சொற்பமேதான் பணவிரயம் பலனை நோக்கிடில்
செலவினைப்போல் பலமடங்கு அதிக மாகுமே!


‘மருதம்’ நன்றி: காங்கிரஸ் 1995.09.01