It கலைமகன் கவிதைகள்: அக்டோபர் 2011

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

பேருக்கே எல்லாம்!


கலைமகன் பைரூஸ்

பேரும் புகழும் கிடைப்பதற் காய்
பேராம் மரபை யழிக் கின்றார்
சீரிளமை யறியாது மமதைக் காய்
தளைதட்ட திரிசொலை யாள் கின்றார்
நேரிலாத கானல் நீரன்ன தாய்
நயமேயிலாத ஆக்கங்கள் புனை கின்றார்
கார்மேகக் கவிபுனையும் வல்லாள ருண்டு
கயமையினால் வீசுகின்றார் மடமை யன்றோ!

இதனை யிதனால் இவன்செய்வா னென்று
அறியா தின்று பேருக்குப் பணியீவார்
முதன்மை யாவர் அந்தமாய் சென்றிடவே
மமதை யாளரைத் தேர்கின் றார்
இதமான இயற்றமிழொடு சமர் செய்தே
இங்கவர் படைத்திடும் பா நயப்பே!
பேதமையால் கருவிலா கவி புனைந்தே
பைந்தமிழ்க் கிவர் செய்வதுதான் பணியோ?

எழுத்தசை சீர் அடிதொடை எலாம்
எழுத்தெண்ணிக் கற்றிடின் நலமே - இவர்
முழுமையும் பேருக்காய் செய்வ ரிங்கே
மூழ்குவரே இலக்கியத்துள் மறைந் தழிவர்
பழுதிலாக் காவியங்கள் படைத் திடுக
பைந்தமிழ்க்கு பணிசெய்க என்றிடுவீர் நீரும்
வீழாத நற்றமிழின் மேன்மை யுன்னி
விடாக்கொண்டர்க் கீயாதீர் நற்றமிழ் பணியே!

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

வாக்கு வேட்டைக்காரர்

- ஜின்னாஹ் ஷரிபுத்தீன் -


வழமைபோல் தேர்தல் வரவு கொண்டோம் நாடே
இளமைகொண்ட தாமோ எனுமாப்போல்- துள்ளியெழும்
உற்சாக மேலீட்டால் ஓடுகின்றார் வீடுவீடாய்
பெற்றிடத்தான் வாக்குகளைப் பார்

தேர்தல் களத்தில் தகுதியற்றோர் போட்டியிட்டால்
சார்ந்துநீர் வாக்களித்தல் சாலதே- நேர்மையொடு
நாட்டுக் குழைக்கின்ற நல்லவர்க்கே கைதருவீர்
“ஓட்டின்” பலமறிக ஓர்ந்து

வாக்களிப்பார் எல்லா வகையும் நாம் செய்வோமென்பார்
சோக்காய்க் கதையளப்பார் சொல்லும்பொய்- காக்கும்
திறனற்றோர் நாற்காலி தன்பாலே தேடும்
குறியன்றி வேறொன் றிலை

தந்தையென்பார் தாயென்பார் தம்பி தமக்கையென்பார்
சொந்தம் நீர் செங்குருதிச் சார்பென்பார்- விந்தையிலை
தேர்தல் முடிந்தபின்னர் தேராரே சென்றால் நீ
யாரப்பா என்பார் இகழ்ந்து

ஊருக் குழைக்கின்ற உத்தமர்கள் உண்டாம்பொய்ப்
பேருக்குப் பொன்வீசும் பேருமுண்டு- சீரற்றுப்
போனதின்று முற்றும் தெரிந்து முகம் கொள்வீர்
ஞானருக்கே வாக்களிப்போம் நாம்