வியாழன், 31 ஜூலை, 2025

நானிருப்பேன் அன்றும்! - கலைமகன் பைரூஸ்

நானிருப்பேன் அன்றும்!

இன்னும் ஒரு தலைமுறையாகும் போது இவன் யாரோ? என்று என் படத்தைப் பார்த்து என் தலைமுறை கேட்க முயலும்? அப்போது இவன் அவன்தான் என எனது உயிர்மூச்சுச் சொற்கள் என்னைச் சொல்லும்... இவர்களுக்காக நான் எழுதும் வரிகள் எனது வலிகள் அவர்களுக்கு அக்கணம் சூடேற்றும்.... சில நொடிகளில் சில்லறைக் காசுகளாக சிலருக்குள் வீசப்படலாம்... ஏதேனும் ஒரு பிள்ளையேனும் என் எழுத்துகளை சிரமேற் கொண்டு என் அப்பனின் அப்பனப்பின் சொற்கள் இவை என்று என் தமிழை ஏத்தும்... அக்கணத்தில் என் தமிழ் வாழும்... என் தமிழ்ப்பாலை அருந்திய மாணாக்கரின் தலைமுறைகள் இவர் அவர்தான் இவரது தமிழ்தான் என என் தமிழை ஏத்தி நிற்பர் என்பதில் எல்லையிலா நம்பிக்கை எனக்குள் சூரிய கிரணங்களாய்... வாழத் தமிழ் வளர்ப்பேன்... எனக்கான எனைக்காண என் பாணியில் நான் என்றும்... என் சாயல் தடங்களாய் ஒளிரும் வதைத்தோர் இகழ்ந்தோர் நம்மவர்தான் என புகழும் நாள் அன்று வரும்.... அக்கணத்தில் நானில்லை என் தமிழ் வாழும் ‘என் சுயத்துடன்...’ சூரியக் கிரணங்களாய் சூன்யமாயும் - ஒளியீந்தும் வெல்லத் தமிழன்றும் வெல்லும் பார்க்க நானில்லை பார்ப்பதில் நானிருப்பேன் தமிழுடன்தான்...

- தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்
31/01/2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக