புதன், 10 டிசம்பர், 2025

அல்ஹாஜ் ரமீஸ் மௌலவி அவர்களின் நெகிழ்ச்சிமிகு வாழ்வு!

இன்று (10/12/2025) எனது மகன் முஹம்மத் ஹாலித் , முகநூலில் எழுதிய மௌலவி முஹம்மத் ரமீஸ் (கபூரி, மதனி) அவர்கள் பற்றிய கட்டுரையின் ஆழ - அகலம் கருதி எனது வலைப்பூவில் அதனை இற்றைப்படுத்துகிறேன். 

நான் எழுத நினைத்ததை விடவும் மிகவும் சிறப்பாக அவரது கட்டுரை அவரைப் பற்றி எழுதப்பட்டிருந்ததைக் கோடிட்டுக் காட்டுவதோடு, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து, அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ இரக்குமாறு அனைவரையும்

விநயமாகக் கேட்டுக் கொள்கிறேன். 

வானமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்துவதுபோல், வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் ஒரு பெரிய பள்ளிவாசலில் குவியும் கூட்டத்தையும் விஞ்சும் அளவுக்கு மக்கள் வெள்ளம் ஒரு ஜனாஸாவுக்காகத் திரண்டிருந்தது என்றால், அந்த மகத்தான மனிதரின் வாழ்வும், அவர் விதைத்த நன்மைகளும் எத்தகைய உயரியவை என்பதை நாம் உணர்ந்திடலாம். ஆம்! நீர்கொழும்பைத் தனது வசிப்பிடமாகக் கொண்டிருந்த, வெலிகாமம் மதுராப்புரியின் மைந்தர், அல்ஹாஜ் ஷாருக் ஹாஜியார் அவர்களின் அன்புப் புதல்வர், அறிஞரும் கொடையாளருமான அல்ஹாஜ் ரமீஸ் மௌலவி அவர்களின் புனித ஜனாஸா தொழுகையில் கண்ட அந்த மக்கள் திரட்சி, அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு இறைவன் வழங்கிய மிகப்பெரும் அங்கீகாரம்; அல்ஹம்துலில்லாஹ்.


வறுமையின் பிடியில் பிறந்து, இலங்கையின் மத்ரஸா ஒன்றில் இஸ்லாமியக் கல்வியைத் தொடர்ந்த ரமீஸ் மௌலவி அவர்கள், தனது தீராத அறிவுத் தாகத்தால் மகத்தானதொரு சிகரத்தைத் தொட்டார். அவருக்கு மதீனா பல்கலைக்கழகத்தில் (University of Madinah) புலமைப் பரிசில் கிடைத்தது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை. அங்கே இளங்கலைப் (B.A) பட்டப்படிப்பை நிறைவு செய்து, தாயகம் திரும்பி இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் (M.A) பட்டத்தைப் பெற்றார். மேலும், அவர் புனித ஹரம் ஷரீபின் தலைமை இமாம்களில் ஒருவரான இமாம் ஸுதைஸ் அவர்களின் சீடராகவும் இருந்திருக்கிறார் என்பது அன்னாரின் கல்விச் சிறப்பையும் இறை நெருக்கத்தையும் பறைசாற்றுகிறது.

சவூதி அரேபியாவில் பல ஆண்டுகள் தங்கி, இலங்கை முஸ்லிம்களுக்கு உம்ரா வழிகாட்டியாகவும், மார்க்கப் பேருரை நிகழ்த்துபவராகவும் தனது வாழ்க்கையை இறை நெருக்கத்துடனேயே துவக்கினார். பின்னர், சொந்தமாக ஏஜென்ஸி மற்றும் மருந்தகம் நடத்தித் தொழிலில் இறங்கினார். சில ஆண்டுகளிலேயே வறுமை நீங்கி செல்வச் செழிப்பை அடைந்த ரமீஸ் மௌலவி அவர்களின் வாழ்வு, வெறும் பொருளீட்டுவதற்கானதாக இருக்கவில்லை; அது முழுவதுமாகப் பிறருக்கு வழங்குவதற்காகவே அமைந்திருந்தது.

அன்னாரின் மறைவுக்குப் பின்னரே, அவர் செய்த மகா தானதருமங்கள் உலகின் வெளிச்சத்துக்கு வந்தன. ஜனாஸா தொழுகையின்போது அன்னாரின் உஸ்தாத் ஒருவர் பேசிய வார்த்தைகள், அங்குக் கூடியிருந்த அனைவரின் மனங்களையும் நெகிழ வைத்தது.

மௌலவியின் மற்றொரு செய்தி எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.


அதாவது, அவர் மிகவும் சுகவீனமுற்றிருந்த நிலையில் அடிக்கடி இருவர் தன்னிடம் வருவதாகவும், அவர்கள் தன்னை அழைப்பதாகவும் அவர் தனக்கு இயலுமான முறைகளில், சைகை ரீதியாக குறிப்பிட்டிருக்கிறார். அதாவது அவர் தனக்கு மரணத் தருவாய் நெருங்கிவிட்டதை உணர்ந்திருக்கிறார்.

'வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது' என்ற உயர்ந்த நபிமொழியின் உயிரோட்டமான உதாரணமாய் வாழ்ந்தவர் ரமீஸ் மௌலவி.
அவர் தன் செல்வத்தால் செய்த சேவைப் பணிகள் பல. அவற்றில் சில,

  • நீர்கொழும்பில் மட்டும் சுமார் 4000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதியைப் பெற்றுக் கொடுத்து, அதற்கான நீர் மோட்டர்களையும் சொந்த செலவில் வழங்கியிருக்கிறார்.
  • வருடா வருடம் ரமழானில் தனது சொந்த ஊரில் மட்டுமல்லாது, பிற ஊர்களிலும் உள்ள விதவைப் பெண்களுக்குப் பண உதவி அளித்து அவர்களின் கண்ணீரைத் துடைத்திருக்கிறார்.
  • தனது சொந்தப் பணத்தில் ஒரு இறைப் பள்ளியைக் கட்டி, அதை இறைவழியில் நிலைநிறுத்தினார்.
  • மத்ரஸா மாணவர்களைப் பெருநாளுக்குத் தனது சொந்த செலவில் அழைத்துச் சென்று, அவர்களின் விருப்பமான ஆடைகளை வாங்கிக் கொடுத்து அவர்கள் முகத்தில் புன்னகையைப் பூக்கச் செய்தார்.
  • தனது சொந்த ஊரான வெலிகாமத்திலும் குடிநீர் வழங்கல் மற்றும் மின்சார உதவிகள் உட்படப் பல அரிய உதவிகளைச் செய்திருக்கிறார்.
  • பள்ளிவாசல்கள், பாடசாலைகள் எனத் தனது பணத்தை வாரி வழங்கிய இந்தக் கொடை வள்ளலின் வள்ளல் தன்மை, அவரது மரணத்தின் பின்னரே சமுதாயத்தால் முழுமையாக உணரப்பட்டது.
கொள்கை ரீதியான முரண்பாடுகளுக்கு இடம்கொடுக்காமல், அனைவருடனும் சிரித்த முகத்துடன் இனிமையாகப் பழகி வந்த அவரது சமூக நல்லிணக்கமும் அனைவராலும் போற்றப்பட்டது.
அன்னாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம், அவரது ஈமானின் உறுதியை உலகிற்கு உணர்த்துகிறது.

கடும் உடல் நலக்குறைவால் மிகவும் பரிதாபகரமான நிலையில் அவர் வீட்டில் இருந்தபோது, நலம் விசாரிக்கச் சென்றவர்களுள் நானும் ஒருவன். எங்களுக்கு எங்களது கண்களையே நம்ப முடியவில்லை. உடல் மெலிந்து, மிகவும் தளர்வாகக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அவர், வருகை தந்தவர்கள் அங்கே வந்த சிறிது நேரத்தில், தள்ளாடித் தள்ளாடி கட்டிலிலிருந்து இறங்கிக் வுழூ செய்யச் சென்றார். 'எங்கே செல்கிறீர்?' என்று கேட்டதற்கு, வாயால் பதிலளிக்கும் அளவுக்கு உடலில் சக்தி இல்லை. ஆனால், சைகையால் தெளிவாகக் கூறினார்: "தொழப் போகிறேன்!"

மரணம் நெருங்கும் தருவாயிலும், உடல் வலிமை குன்றிய நிலையிலும் தொழுகையின் மீது அவர் கொண்டிருந்த அந்த ஈடுபாடு, அவரது ஆழ்ந்த இறையச்சத்திற்கும், ஈமானின் உறுதிக்கும் ஆகச் சிறந்த சாட்சியம் ஆகும்.

அன்னாரின் வாழ்வை விட, அன்னாரின் மரணத்தில் ஒரு நெகிழ்ச்சிமிகு இறைநியதி மறைந்திருக்கிறது.

மதீனா பல்கலைக்கழகத்தில் அவருடன் இணைந்து படித்த இந்திய நண்பர் ஒருவர் இருந்தார். இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். என்ன ஆச்சரியம் என்றால், அந்த நண்பருக்குக் குழந்தை பிறந்த அதே நாளில் இவருக்கும் குழந்தை பிறந்தது. இரு குழந்தைகளுக்கும் ஒரே பெயரையும் வைத்தனர். இது ஒரு இறை நியதி என்றால், அந்த விசித்திரம் இங்கே முடிவடையவில்லை. காலத்தின் விசித்திரமான திருப்பமாக, அந்த நண்பரும் அதே நாளில் (நேற்று) இவ்வுலகைத் துறந்திருக்கிறார். இருவரும் ஒரே நாளில் மண்ணறைக்குச் சென்றது, அவர்களின் நட்புக்கும், இறைவனின் நாடகத்திற்கும் ஒரு மகத்தான சான்று!

அல்ஹாஜ் ரமீஸ் மௌலவி அவர்களின் கப்ரை அல்லாஹ் சுவனத்துப் பூஞ்சோலையாக மாற்றி, அவரது தருமங்களையும் நற்செயல்களையும் நன்மைகளாக ஏற்றுக் கொண்டு, அருள் பாலிப்பானாக! ஆமீன்.





-முஹம்மத் ஹாலித்-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக