செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

என்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது

 “என்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் ஆற்றல்களில் நான் உயர்ந்து நிற்கிறேன். இன்னுமின்னும் சாதிப்பேன்.”

இந்தத் தன்னம்பிக்கைச் சொற்களை வாழ்வியல் நெறியாகக் கொண்டு, நாடளாவிய ரீதியில் வரலாற்றுக் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றார் எனது மாணாக்கரில் ஒருவரும், தற்போது ஹம்பாந்தோட்டை – பதகிரிய முஸ்லிம் வித்தியாலத்தின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்ற திரு. ரிபாஸ் பதுர்தீன் அவர்கள்.
அவர் ஏற்கனவே பணியாற்றிய கல்வி நிலையங்களிலும் — குறிப்பாக மாறை / அஸ்ஸபா மகா வித்தியாலயத்தில் — பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள், மாணவர்களின் ஒழுக்க விழுமிய மேம்பாடு, கல்வி மற்றும் குணநல வளர்ச்சி போன்ற துறைகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். அவரது சேவை பலரது கைதட்டல்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
விழாக்களில் நேர்முக வர்ணனைகள் வழங்குதல், நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுதல், மாணவர்களை ஊக்குவிக்கும் பயிற்சிகள் நடத்துதல் என பல்வேறு துறைகளிலும் அவர் தன்னலம் பாராது பங்களித்து வருகின்றார். மாணாக்கனாக இருந்த காலத்திலேயே வெளிநாட்டு ஒலிபரப்புச் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு, தான் கற்ற பாடசாலைக்கும் தனது பிறந்தகமான மதுராப்புரைக்கும் புகழ் சேர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலைப்பட்டதாரியும் உளவியல் டிப்ளோமாதாரியுமான ரிபாஸ் அவர்கள், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி வருவது உண்மையில் மனநிறைவை அளிக்கிறது. அவரது பங்களிப்பால் மேலும் பல பாடசாலைகள் பயன்பெற வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம். அவரது எதிர்காலம் மேலும் சிறக்க இறைவனை வேண்டி நிற்கிறேன்.
இந்தச் சிறிய ஆக்கத்தை எழுதத் தூண்டியது — அவரது தெளிவான தமிழ் உச்சரிப்பு, ஆரோகண-அவரோகண பேச்சு நடை, மற்றும் தன்மீது தான்கொண்டுள்ள அதீத நம்பிக்கைதான்.
– தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக