சனி, 2 மே, 2026

எனதத்தியாயம் எந்த எழுத்துக்களால் ஆனதோ? | றபீக் மொஹிடீன்

அல்லாஹ்வின் ஏட்டில் 

எனதத்தியாயம்  எந்த எழுத்துக்களால்

எழுதப்பட்டதோ......?


வாழ்க்கை நெடுங்கணக்கில்

இன்னும் அரிச்சுவடியாய்..

விடை தெரியா வினாக்களோடு...

ஒவ்வொரு மணித்துளியும்

மழைத் துளியாய்... 

செல்திசை தெரியாமல்

சேமிக்கவும் முடியாமல்

விழுந்து கரைகிறது...


என் இருண்ட வானத்தை

மின்னல்களின் தீப் பொறிகள்

எரித்துக் கரிக்க

மேகங்களின் குமுறல்களோடு

இதயம் தேம்பித்தேம்பி அழுகிறது...


ஒக்ஸிஜனுக்குப் பதிலாக 

 என் சுவாச அறைகளையெல்லாம்

ஆக்கிரமித்துக்கொண்டது

காபனீரொக்சைட்டு...


இருண்ட இரவுக்குள்

முகம் புதைத்துக் கொண்டது

என் வெண்ணிலவு 


என் விழிகளுக்குள் 

சூனியம் வைத்த ஷைத்தான் 

எவனோ..?

 

என் சிந்தனைக்குப் புரியாமல்

உணர்வுக்கும் தெரியாமல்

ஓர் அயன் மகரந்தச் சேர்க்கையை

உண்டு பண்ணுபவன் எவனோ?


பிறரின் துருப்பிடித்த சிந்தனைகள்

காதுகளைத் துளைக்கும்போது

இறைவனிடம் குறையிரந்து

எனதீமான் தவிக்கிறது...


என்னை மீறி

எனக்குள் நிகழும் 

எந்தவொன்றுக்கும் 

என்னைப் பொறுப்பாளியாக்கும்

என் விதியை 

எழுதியவனே...!

எனதத்தியாயம்

எந்த எழுத்துக்களால்

எழுதப்பட்டது?


 றபீக் மொஹிடீன் 

களுத்துறை வலய தமிழ் மொழிப்பாட வளவாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக