செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

தன்நம்பிக்கையின் சாயல்

தூரப் பாதை தூசியைத் தாங்கி
நம்பிக்கையை நெஞ்சில் நட்டுக் கொண்டு
“இன்று மாணவர்கள் நிரம்புவார்கள்” என
இதயம் முழுதும் கனவுகள் கட்டி
வகுப்பறை கதவைத் திறந்தார் ஆசிரியர்.
அங்கு இருந்தது
அமைதியும்…
ஒரே ஒரு சிறுவனும்…
ஆனால் உடைந்ததில்லை அவர் நம்பிக்கை—
குறையாத தீபம் போல இருந்தது உள்ளம்.
“ஒருவனே போதும்” என்றார் அவர்,
உலகை மாற்ற ஒரு எண்ணமே போதும்;
விஞ்ஞானம் என்பது எண்ணத்தின் தீப்பொறி,
அது ஒரே இதயத்தில் விழுந்தாலும்
நாளை ஆகாயமாக எரியும்.
கூட்டமல்ல கல்வியின் அளவு,
கற்றிடும் உள்ளத்தின் ஆழமே அளவு;
சிறுதுளி தண்ணீர் சேர்ந்து தான்
பெருவெள்ளம் ஆகாதோ?
ஒரு மாணவன் – ஒரு எதிர்காலம்!
அந்த நாள் வகுப்பில்
கரும்பலகை சாட்சியாக நின்றது;
ஒரு குரல், ஒரு கேள்வி, ஒரு பதில்—
அவை சேர்ந்து உருவாக்கியது
ஒரு புதிய உலகின் விதை.
ஆசிரியரின் நம்பிக்கை
முளைத்தது அந்த ஒரு உள்ளத்தில்;
நாளை நூறாக, ஆயிரமாக மாறும் என
அவர் அறிந்திருந்தார்—
“சிறுதுளி பெருவெள்ளம்” என்ற
நித்திய சத்தியம் போல. 

- கலைமகன் பைரூஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக