ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

தமிழே! நீ வாழ்க – தாய்மொழிப் பெருமை கூறும் புதிய கவிதை

தமிழ் — ஒரு மொழி அல்ல; ஓர் உயிர். ஓர் மரபு. ஒரு மெய்ப்பொருள்.

உன்னொளி பரவட்டும் அகிலத்திலென்றும்!” எனத் தொடங்கும் இந்தக் கவிதை, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு மொழிப்பற்று நாதம். தாயின் துதிக்குரலாய் ஒலிக்கும் தமிழின் இனிமையையும், அதன் வரலாற்றுப் பெருமையையும், ஆன்மீக ஆழத்தையும், உலகளாவிய பரப்பையும் ஒரே பாவோசையில் இணைக்க முயன்ற, பன்னாட்டு / சர்வதேச தாய்மொழித்தினத்திற்கான சிறிய இலக்கிய அன்பளிப்பு இது. 

தாய்மொழித் தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட இந்தக் கவிதை, ஒரு சாதாரண பாராட்டுப் பாடல் அல்ல.
இது,

  • சங்க இலக்கியத்தின் செம்மையை நினைவூட்டும் ஒரு சிறு முயற்சி

  • ஆண்டாள், ஆரூரன் போன்ற ஆன்மீகச் சிகரங்களின் மொழிச்சுவடுகளை நினைவுகூரும் என்று நினைப்பு.

  • உலகெங்கும் பரவி வாழும் தமிழரின் அடையாள உணர்வை உறுதிப்படுத்தும் ஒரு அழைப்பு.

இன்றைய காலத்தில் பல மொழிகள் கலந்த உலக வாழ்விலும், தமிழின் நிலைபேறையும் அதன் பண்பாட்டு உயர்வையும் மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டும் என்ற எண்ணமே இந்தப் படைப்புக்குக் காரணம்.

“நிலைபேறு டைமொழியாள் நீயே என்பேன்” என்ற வரி —
தமிழின் நிரந்தரத் தன்மையைச் சுட்டும் என் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமையும் என்பது எனது எண்ணப்பாடு. 

என் கவிதைகள் உலகெங்கும் பறக்குமா,
இல்லை அமைதியாகத் திரும்புமா —
அதனை முடிவுசெய்வது வாசகர்களாகிய நீங்களே.


உன்னொளி பரவட்டும் அகிலத்திலென்றும்!

-------------------------------------------------------
தாய்த்தமிழே! உனைப்போல் சிறப்பெங்குளதோ?
தாயின் துதிக்குரல் தாளமிடும் நாதமே!
என்னுயிரினுள் கலந்து எழும் இனிமை நீயே;
இறையருள் பொழியும் இன்பமதும் நீயே!
செம்மைத் திருநாடு சிந்தைமணம் வீச,
சங்கக் கவியரசர் சாற்றிய மொழியே;
பல்லோரும் புகழ்ந்து நிற்கும் பரிசே,
பாரெலாம் போற்றும் பழம்பெரும் ஒளியே!
மூதூரின் மண்ணிலும் முத்தமிழ் மழையே,
முன்னோர் வழித்தந்த மெய்ப்பொருள் நீயே;
ஆரூரன் நாவிலும் அம்புயம் ஆனாய்,
ஆண்டாள் பாசுர மொழிகளில் நீயே!
வேதத்தின் ஒலியாய் விளங்கிய செல்வி,
வீரத்தின் உறுதியாய் விளக்கிய மொழி;
அறத்தின் அரும்பொன்னாய் ஆவியில் மலர்ந்து,
அன்பின் அழகாய் உயிரொடு விளங்குவதுநீயே!
பலமொழி பேசிடும் பல்லோரும் பண்பொடு
பழகுதமிழுன் பண்பை படைத்தனர் பாவாய்
நிலைபேறு டைமொழியாள் நீயே என்பேன்
நிலைக்குங் காலுலகு நிற்பாய் நீடு!
தாய்மொழித் தினத்தில் தலைமேற் கொண்டு,
தாழாத மொழியாள் தமிழே என்றின்று;
“தமிழே! நீ வாழ்க!” எனத் தலைநிமிர்ந்து,
தலைமுறைக் களிறென வாழ்வென்று புகழ்வோம்!
உலகெங்கும் ஒலிக்க உன் ஒளி பரவ,
உயிர்மூச்சாய் நீயிரு – உன்னில் நாமிருந்திட!
இறையருள் கொண்ட இனிய மொழியே
இனியுந்தா னுன்னொளி பரவட்டும் எங்கும்!
- கலைமகன் பைரூஸ்

இந்தப் பாடல் உங்கள் இதயத்தில் எவ்வாறு ஒலிக்கிறது? உங்கள் சிந்தனைகளை எழுதுங்கள். தமிழின் நிலைபேறுக்கும் உயர்ச்சிக்கும் நாமெல்லாம் ஒரு விளக்காக இருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக