வெள்ளி, 6 மார்ச், 2026

உன் உதவி எனக்குள்! | இன்ன மஇய ரப்பீ!

'Inna Maiya Rabbi'

முன் கடல் கொந்தளித்தாலும்,
பின் எதிரி நெருங்கினாலும்,
மனித கண்கள் பயம் கண்டாலும்
இறைநம்பிக்கை தளராது.
ஒற்றைக் கணமும்
“இறைவா!” என்ற உறுதிக் குரல்,
இருள் மத்தியில் ஒளி போல எழுந்தது;
“என் இறைவன் என்னுடன் இருக்கிறான்”
என்ற நம்பிக்கை அலைகளை
அமைதிப்படுத்தியது.
பாதை இல்லாத வெளியில்
பாதை பிறந்தது;
அசாத்தியம் என்று நினைத்த இடத்தில்
அற்புதம் நிகழ்ந்தது.
அச்சம் சொன்னது: “நாம் அழிவோம்.”
நம்பிக்கை சொன்னது: “அவர் வழி காட்டுவார்.”
மனித பலம் முடிந்த இடத்தில்
இறை அருள் ஆரம்பமானது.
இன்று
உன் வாழ்க்கையிலும்
கடல்கள் எழும்பலாம்,
எதிரிகள் சூழலாம்.
ஆனால் மனம்
மெதுவாக சொல்லட்டும்:
“Inna Maiya Rabbi…”
(இன்ன மஇய ரப்பீ)
அப்போது
பயம் அமைதியாகும்,
குழப்பம் தெளிவாகும்,
இருள் ஒளியாகும்.
காணாத கை ஒன்று
காத்து நடத்துகிறது...
அது நம்பிக்கையின் கை,
அது இறைவனின் அருள்.
எத்தனை அயோக்கியத்தனங்கள்
அலைகளாகக் கோத்து வந்தாலும்
கடலைப் பிளந்து
காத்த இறைவன்
தூக்கியே எறிவான்
கடல் காணாத எல்லைக்குள்
இன்றைய 'பிர்அவ்ன்'களை
வானைப் பிளந்து
வாகாக ஔிப்பிளம்பு கிளம்பி
வாட்டியே எடுக்கும்
இறை மறுப்பாளர்களை நிச்சயம்!
மிகத் தூரமே உறவு ஆனாலும்
உனக்குள் ஒன்றேனும் ஒத்துப்போக
பாகமாகவேனும் உறவாய்க் கொள்
பாங்காக படைத்தவன் ஓரிறை
என்றே பலமாகச் சொல்வதனால்!
- தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக