It It கலைமகன் ஆக்கங்கள்: தனித்துத் தவிக்கும் தெல்தோட்டை! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 2 டிசம்பர், 2025

தனித்துத் தவிக்கும் தெல்தோட்டை!

 

தனித்து தவிக்கும் தெல்தோட்டை!

ஒரு தனித் தீவாய் மாறி நிற்கும் இந்த வூர் இன்னுமொரு அத்திப்பட்டியாக மாறிவிடுமோ?

(அவலத்தை புரிந்துகொள்ள பொறுமையாகவும் முழுமையாகவும் வாசியுங்கள்)

✍🏼 எஸ்.என்.எம்.சுஹைல்

மத்திய மலைநாட்டின் மிக உயரமான மலைகளைத் தன்னகத்தே கொண்ட அழகிய பிரதேசம் தெல்தோட்டை. கண்டி நகரில் இருந்து வெறும் 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இவ்வூரின் அழகும் அமைதியும் இயற்கையின் சீற்றத்தால் சிதைந்துவிட்டன. கடந்த வியாழக்கிழமை (27.11.2025) முதல், இந்தப் பகுதி அனைத்துவிதமான வெளிப்புறத் தொடர்புகளையும் முற்றாக இழந்துவிட்டது. இன்று தெல்தோட்டை ஒரு தனித் தீவுபோல் நிற்கிறது!

⚠️ முற்றாகத் தடைபட்ட வீதிப் போக்குவரத்து

கண்டி மற்றும் பிற நகரங்களுக்கான அத்தனை பிரதான சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருட்கள் தெல்தோட்டையைச் சென்றடைவது என்பது சாத்தியமற்றதாகியுள்ளது.

  • கலஹா வழிப்பாதை (B364 வீதி): பேராதனைப் பல்கலைக்கழகம் வழியாக கலஹாவை ஊடருத்துச் செல்லும் தெல்தோட்டைக்கான பிரதான வீதி (B364) பலத்த சேதமடைந்துள்ளது. பேராதனை, மஹகந்த, அப்லண்ட்ஸ், வாரியகல போன்ற இடங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுகளால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இந்தப் பாதை தற்போது பயணிக்க மிகவும் ஆபத்தானது.
  • (சிறு மாற்றுப் பாதை: வாரியகலை வழியாக தெலுவ வீதி மூலம் கம்பளை அல்லது கண்டி செல்ல ஒரு வழி உள்ளது. ஆனால், இது முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே ஓரளவு சாத்தியம். பொதுப் போக்குவரத்துக்கு இது பொருத்தமற்றது.)
  • ஹந்தானை வீதி: கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து ஹந்தானை மலை உச்சியை கடந்துசெல்லும் இந்த வீதி, பல இடங்களில் முற்றாக உடைந்து போயுள்ளது. இதனால், இந்த வீதியைப் பயன்படுத்த மிக நீண்ட காலம் ஆகும் என்ற அபாயகரமான நிலை உள்ளது.
  • மொறகொல்ல வீதி: பெல்வூட் மற்றும் மொறகொல்ல வழியாக கண்டிக்குச் செல்லும் வழியும் ஆரம்பத்திலேயே ஆரேக்கர் மற்றும் பெல்வூட் பகுதிகளில் மண்சரிவுகளால் மூடப்பட்டுள்ளது.
  • வாடியகொட - மாரஸ்ஸன வீதி: இந்த பாதையும் வாடியகொட மற்றும் மாரஸ்ஸன பகுதிகளில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுகளால் தடைபட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கான அவசரப் பயணங்களுக்கு மட்டும் முச்சக்கர வண்டிகள் அல்லது மோட்டார் சைக்கிள்கள் கந்த சந்தி வரை செல்ல முடியும்.
  • மற்ற பாதைகள்: போபிடிய வீதி, ரிகிலகஸ்கட வீதி, ஹேவாஹெட்ட வீதிகள் அனைத்தும் மண்சரிவு மற்றும் வீதி உடைப்புகளால் பிரதேசத்தின் உள்ளேயே துண்டிக்கப்பட்டுள்ளன.

தெல்தோட்டையிலிருந்து கண்டிக்கு அல்லது வேறு நகரங்களுக்குச் செல்லும் அத்தனை பிரதான போக்குவரத்துப் பாதைகளும் முற்றாகத் தடைபட்டுள்ளன.

💔 கிராமங்களில் நிகழ்ந்த சேதங்கள்

  • பள்ளேகம பள்ளிவாசல் மற்றும் வைத்தியசாலையை அண்டிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
  • முஸ்லிம் கொலனியில் மையவாடிக்கு அருகாமையில் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது.
  • கிரேட்வெலி தோட்டத்துக்கு செல்லும் வழியில் அனுரடெனியல் கமவிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
  • வாடியகொட பகுதியிலும் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
  • கோணங்கொட தக்யா பள்ளிவாசலுக்கு அருகாமையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு, சில வீடுகள் மண்ணால் மூடப்பட்டுள்ளன; இன்னும் சில அபாய நிலையில் உள்ளன.
  • வனஹபுவ, பீலிக்கர பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
  • பியசேன புற பகுதியில், வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மலையின் பின்புறம் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
  • நாரஹேங்கன, பட்டகம போட்டம், லூல்கந்துர, ஓப்வத்தை, போபிடிய, ஹேவாஹெட்ட உள்ளிட்ட கிராமங்களிலும் பாரியளவில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
  • உடுதெனிய மெடிகே கிராமத்திலும் மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.

அனர்த்தங்களின் முழுமையான விபரங்களை உத்தியோகபூர்வமாகவும் துள்ளியமாகவும் இன்னும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

🚨 தொலைத்தொடர்பு, மின்சாரம் துண்டிப்பு

கடந்த வியாழன் முதல் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. இதனால் தெல்தோட்டையில் என்ன நடந்தது, எத்தனை இழப்புகள் ஏற்பட்டன என்பது குறித்த முழுமையான தகவல்கள் வெளியில் உள்ள எவருக்கும் தெரியவில்லை. தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றிய கவலையில் உறவுகள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பகுதி முழுமையாக இருளில் மூழ்கியுள்ளது. கலஹா மற்றும் ஹைத்பிளேஸ் பகுதிகளில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள்கள் தீர்ந்துவிட்டன. உள்ளூர் போக்குவரத்தும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

🏘️ மக்கள் இடம்பெயர்வு

மண்சரிவு அபாயம் காரணமாக தெல்தோட்டை மற்றும் கலஹா பகுதிகளில் உள்ள பல கிராம மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

குறிப்பாக கோணங்கொட கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களே அதிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள், தெல்தோட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரி, மலைமகள் மத்தியக் கல்லூரி, பத்தாம்பள்ளி அல் மஸ்ஜிதுல் ஜென்னாஹ், ஹைத் பிளேஸ் தக்யா, ரலிமங்கொட மஸ்ஜிதுல் அக்பர், மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

உடதெல்தோடை, பேரவத்தை, பவுலான, கொலபிஸ்ஸ, வாடியகொட, சுதுவெல்ல மற்றும் கபடாகம உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதைவிடவும் இன்னும் அதிகமான பகுதிகளில் இடம்பெயர்வுகள் இடம்பெற்றிருக்கலாம். சரியான தகவல்கள் வெளிவரவில்லை.

புபுரஸ்ஸ, அக்சன, ஓப்வத்த, பவுலான உள்ளிட்ட மிக உயரமான மலைப்பிரதேசத்திலுள்ள தோட்டப் பகுதிகள் குறித்து எந்தத் தகவலும் தெரியாமல் உள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு என்ன நடந்தது என்ற தகவல் வெளிவராமல் இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரனத்திற்கு என்ன செய்வது?

ஒவ்வொரு கிராமத்திலும் மண்சரிவுகள் ஏற்பட்ட பின்னரும், இன்னும் அனர்த்தங்கள் நிகழுமோ என்ற அச்சம் நீடிக்கிறது. அங்கிருக்கும் இளைஞர்கள் முன்வந்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் மட்டத்தில் தெல்தோட்டை நகர், முஸ்லிம் குடியேற்றம், கலஹா உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களும் உணவு சமைத்துக் கொடுத்து உதவுகின்றன. தனிநபர்களின் உதவிகளும் இதற்கு கிடைக்கின்றன.

ஆனால், வியாபார நிலையங்களிலும் தனிநபர்களிடமும் கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தீர்ந்துவிடும் அபாயம் உள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளே செல்ல வீதிப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதால், இந்தத் தேவைகள் பூதாகரமான பிரச்சினையாக மாறவிருக்கின்றன.

❓ தகவல்கள் ஏதுமில்லை

சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் தெல்தோட்டை பிரதேச செயலகப் பிரிவின் பகுதியும், உடபலாத்த மற்றும் தலாத்துஓய பிரதேச செயலகப் பிரிவின் சில பகுதிகளும் உடுதெனிய மடிகே முஸ்லிம் கிராமமும் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அழிவு குறித்து அரசாங்க நிர்வாக இயந்திரம் அலட்டிக்கொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அங்கிருந்து எந்தத் தகவலும் வெளிவராமல் இருப்பதால், நிலைமையின் பாரதூரத்தை யாரும் அறியவில்லை.

இது இன்னொரு அத்திப்பட்டியா?

அஜித் நடித்த 'சிட்டிசன்' திரைப்படத்தில் ஒரு கிராமமே அழிந்துபோனது யாருக்கும் தெரியாமல் இருந்தது போல, தெல்தோட்டை பிரதேசத்தின் பாதிப்புகள் கவனிக்கப்படாமல் போனால், இது இன்னொரு 'அத்திப்பட்டி' கதைக்கு வழிவகுக்கும்!

தெல்தோட்டை போன்றே பெரு நகரங்களிலிருந்து அன்னியப்பட்டிருக்கும் அனைத்துக் கிராமங்களும் அடையாளம் காணப்பட வேண்டும்.

அரசு, அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள், மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் உதவிகள் இந்த மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படுகின்றன. மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மீள்கட்டுமானத்திற்கான உதவிகளை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

உடனடியாகப் போக்குவரத்துப் பாதைகளைத் திறக்க வேண்டும்! அத்தியாவசிய உதவிகளை உள்நுழைக்க வேண்டும்! தெல்தோட்டையைக் காக்க அனைவரும் கரம் கொடுக்க வேண்டும்.

✍🏼 எஸ்.என்.எம்.சுஹைல்

#Deltota #தெல்தோட்டை #உதவி_தேவை #மண்சரிவு_அபாயம் #அவசரநிவாரணம் #கண்டி #இலங்கை_அனர்த்தம் #DeltotaCrisis #SaveDeltota #SriLankaDisaster #LandslideAlert #KandyDistrict #IsolatedCommunity #UrgentAidSL #UnrealDeltota #CentralProvince #HelpNeededSL


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக