கலைமகன் பைரூஸ்
பேரும் புகழும் கிடைப்பதற் காய்
பேராம் மரபை யழிக் கின்றார்
சீரிளமை யறியாது மமதைக் காய்
தளைதட்ட திரிசொலை யாள் கின்றார்
நேரிலாத கானல் நீரன்ன தாய்
நயமேயிலாத ஆக்கங்கள் புனை கின்றார்
கார்மேகக் கவிபுனையும் வல்லாள ருண்டு
கயமையினால் வீசுகின்றார் மடமை யன்றோ!
இதனை யிதனால் இவன்செய்வா னென்று
அறியா தின்று பேருக்குப் பணியீவார்
முதன்மை யாவர் அந்தமாய் சென்றிடவே
மமதை யாளரைத் தேர்கின் றார்
இதமான இயற்றமிழொடு சமர் செய்தே
இங்கவர் படைத்திடும் பா நயப்பே!
பேதமையால் கருவிலா கவி புனைந்தே
பைந்தமிழ்க் கிவர் செய்வதுதான் பணியோ?
எழுத்தசை சீர் அடிதொடை எலாம்
எழுத்தெண்ணிக் கற்றிடின் நலமே - இவர்
முழுமையும் பேருக்காய் செய்வ ரிங்கே
மூழ்குவரே இலக்கியத்துள் மறைந் தழிவர்
பழுதிலாக் காவியங்கள் படைத் திடுக
பைந்தமிழ்க்கு பணிசெய்க என்றிடுவீர் நீரும்
வீழாத நற்றமிழின் மேன்மை யுன்னி
விடாக்கொண்டர்க் கீயாதீர் நற்றமிழ் பணியே!