அப்பாவி மாந்தர்கள் இருப்பதை உண்டு
அன்றாடம் வாழ்க்கை ஓட்டியதுகண்டும்
தப்பாகவே எண்ணும் தரங்கெட்டார்கள்
தலைகாலது தெரியாது செய்கின்றார் பாவம்!
பாவம் செய்வதிலே என்றும் தலையாய
பாவிமனிதர்கள் நிறை சாத்தானியவேதம்
தேவையேது மிலாமல் செயும் கருமங்கள்
தெரிந்து சொல்லினும் கண்பார் எவரோ?
எவரெவரோ ஒன்றுசேர்ந்து சாதிகள்செய்து
ஏதுமறியா பாலகரையும் கொன்றுகுவித்து
குவலயமே எறிந்திடும் அராஜகம்செய்து
குதிக்கின்றார் நல்லோர் நாமென்று!
நாமெல்லாம் நல்லோர் எனச்சொல்லி
நலினமாய் கத்திவாள் கரங்கொண்டு
ஊமையாய் இருப்பவரையும் வெட்டிச்சாய்த்து
ஊரெங்கும் உரைக்கின்றார் நல்லோ ரென்று!
நல்லவராம் இவர் நற்போதனைகளாம்
நிம்மதி குலைப்பது போதிமரநிழலினின்றாம்
சொல்லவியாலத் துன்பங்கள் விளைப்பவரே
சொர்க்க மிதுவென்று துள்ளுகிறீரோ?
துள்ளிதுள்ளித் மனமெங்கனும் தீமூட்டுகின்றார்
தெரியாத பாவங்கள் கோக்கின்றார் - இவர்
எள்ளிநகையாடுகின்றார் மாற்றாரை நிதம்
ஏற்றமாய் தத்துவங்கள் சொல்லுகின்றார்!
ஏற்றமாய் சொல்லுவதாய் கொல்லுகின்றார்
ஏணிப்படிகளின்றி யிருப்பதால் கருவறுக்கின்றார்
நாற்றம்மிகு அங்கிக்குள்ளிருந்தே இவர்
நாணுகின்ற கருமம் ஆற்றுகின்றார் -சரியோ?
சரியோ பிழையோ காண்பதற்கிலை நயனங்கள்
சங்கிலித் தொடரென சுத்திகரிப்புச் செய்கின்றார்
பேரிடிவந்து கவ்வுங்கால் செய்வர் அநியாயம்
போலிவேசம் கலையுங்காலம் என்றுவருமோ?
வரும்வரை பார்த்திருப்பதி லேதுபயன்?
வருமுன்னே காத்திடுதலல்லோ - ஞானம்
ஊர்களின்னும் எரியாதிருந்திட நாமும்
உரத்தே குரல்கொடுப்போம் உலகெங்கும்!
-கலைமகன் பைரூஸ்
நன்றி - (2012-07-26) இலண்டன் வானொலி வியாழன் கவிதை நேரம்
ஒலிவடிவம் - ஷைபா மலிக்
--கருத்துரைகள்--
“அழகான அர்த்தங்கள் பொதிந்த சந்தம்நிறை கவி....வாழ்த்துக்கள்.......... வரும்வரை பார்த்திருப்பதி லேதுபயன்?
வருமுன்னே காத்திடுதலல்லோ - ஞானம்
ஊர்களின்னும் எரியாதிருந்திட நாமும்
உரத்தே குரல்கொடுப்போம் உலகெங்கும்!!“
“நல்லவராம் இவர் நற்போதனைகளாம்
நிம்மதி குலைப்பது போதிமரநிழலினின்றாம்
சொல்லவியாலத் துன்பங்கள் விளைப்பவரே
சொர்க்க மிதுவென்று துள்ளுகிறீரோ?”
-Begum Sbegum - London 26/07/2012
'சகோதரா..! உங்கள் கவிதை உண்மையில் அர்த்தமுள்ளது.. நீங்கள் மென் மேலும் வளர இந்த இளையவளின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.'
-Suraiya Buhary - England 26/07/2012
'நாமெல்லாம் நல்லோர் எனச்சொல்லி
நலினமாய் கத்திவாள் கரங்கொண்டு
ஊமையாய் இருப்பவரையும் வெட்டிச்சாய்த்து
ஊரெங்கும் உரைக்கின்றார் நல்லோ ரென்று!
அழகான அர்த்தங்கள் ......வாழ்த்துக்கள்!'
-Farveen Mohamed - Anuradhapura, Sri Lanka. 26/07/2012
'egalukum peruma than egada machan ippadi ellam seiwadu. melum melum munnera kalai ulahil enathu thua. thanks good job keep it up'
- Aakif Mohamad (Aslam Junaideen) - Saudi Arabia. 26/07/2012
'ஒரு சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளோ நாட்டில் நடக்கும் பிரச்சனைகளோ ஏன் உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளோ எதுவாக இருந்தாலும் எழுத்துக்கள் மூலம் வெளிக்கொணர்ந்து அந்த எழுத்துக்களின் பக்க பலத்துடன் தீர்வுகள் பெறலாம் இது ஊடகவியலாளர்களால் மட்டுமின்றி இலக்கிய வாதிகளாலும் முடியும் இன்று மியன்மார் நாட்டில் நடக்கும் வன்முறைகள் தொடர்பாக அனைத்து எழுத்தாளர்களின் பேனாக்களும் மரணித்து போய் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் பேனா விழித்திருப்பது ஆறுதலும் மனதுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கிறது உங்களை சார்ந்து ஏனைய எழுத்தாளர்களும் விழித்துக்கொண்டால் அந்த பேனாக்களின் மூலம் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம்...வன்முறையாளர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் உங்கள் கவிதை வரிகளுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் சகோதரா எல்லா வரிகளுமே தீப்பொறி போல் உள்ளது இன்னுமின்னும் தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள் அநியாயகாரர்களுக்கெதிராகவும் அப்பாவி மக்களுக்கு ஆதரவாகவும்...!!
"நாட்டில உள்ள கவிஞனுக்கெல்லாம் வணக்கங்க ஏழை வீட்டில நடக்கும் விஷயத்தை பாட்டில் எழுதுங்க நாலு பேர்க்கு தெரியனுங்க நன்றி கெட்ட மக்கள் கதை நெஞ்சில் போயி தைக்கும்படி சொல்லவேனும் நீங்க அத சூடு போடணுங்க சுயநலமுள்ள மனிதனுக்கு போட்டால் சத்தியமா புன்னியமுண்டு உங்களுக்கு..."
ஒரு கவிஞன் சொல்லி விட்டு சென்றது இப்படி.'
- Razana Manaf Pottuvil 28/07/2012
உன் எழுதுகோல்
வாள்என்று நிரூபித்திருக்கிறாய்!
அதர்மத்தை
வேட்டையாடி
உன் பேனா புனிதம் அடைந்திருக்கு!
உன் மொழி நடை
உன் சொல் வளம்
அன்னத்தை பொறாமை கொள்ளச் செய்யும்!
இஸ்லாத்தை
அழிக்க மனிதனால் முடியாது!
அது
எல்லா உலகங்களின் உயிர்!
உன் பேனா
இன்று புனிதம் அடைந்திருக்கு!
வாழ்த்துக்கள் !
- Rajakavi Rahil 29/07/2012