பொதிகைமலை
பிறந்திட்ட நற்றிமிழிது
பொய்ம்மைகள்
பலகாட்டி பரிதவிக்க
ஆதித்தமிழ்
மொழியை கங்கனம்கட்டி
ஆயுபோவ னாய்க்
காட்டலாமோ?
நல்வணக்கம்
நற்றமிழி லிருக்க
நாதியற்றதாய்
ஆக்க முனைந்தீரோ...?
அல்லும்பகலும் ஊன்றியே நிற்கும்
பலகோடி ஆண்டுகள்
பழைமைபுண்டு
படிப்போர் மனதை
இன்றுமாண்டு
நிலைபெற்றே
நிற்பதுகாண் தமிழ்மொழி
நிலைதடுமாறி
மறந்தீரோ வணக்கமதை!
தம்மொழி பரவிடப்
பாரிலன்றாநீர்
தாய்த்தமிழின்
வணக்கத்தை மாற்றினீர்
எம்மாத்திரம்
அடுத்து முயன்றாலும்
எம்மொழி செம்மொழி
அழியாதுகாண்!
சங்கங்கள்
கடல்கொண்டே மாண்டாளும்
சந்தம்மிகு
தமிழ்மொழிதான் மாய்ந்ததோ?
எங்கும் பீதிதந்த
ஆழிப்பேரலைவந்து
எடுப்பாம்
தமிழ்மொழி மறைந்ததுவோ?
சகோதர மொழியே
நம்நாட்டு மொழியே
சரித்திரத்தில்
நீவாழ ஆசிக்கிறேன்....
ஏகோபித்து
ஒருமித்து உனைஏற்கிறேன்
ஏற்றிடு
சத்தியத்தை தமிழாதிமொழியே!
மொழியால் இணைவோம்
என்றே கூறி
மொழிச்சங்கங்கள்
பலவாய்க் கூட்டி
அழியாத்
தமிழுக்குப் பணிசெய்வமென்று
அழித்தீரா
வணக்கத்தை – ஆ.. மறதியோ?
மம்மி டாடியால்
அழியாது நம்மொழி
மாளச் செய்திட
கங்கணம் கட்டினாலும்
எம்மில் ஆழக் குடிகொள்
நற்றமிழ்
என்றுமழியாது
காண்பீர் நிலத்துநின்று!
சோகமே நீர்செய்த மறதிதந்தது – பாரீர்
சேர்ந்திருப்பம்
என்பது வாய்ப் பேச்சிலன்றோ...
வேகம் உமக்கு
ஆகாது – பிறர்மனதை
வேகவைத்திடல்
நன்றாமோ தெளிவீர்!
எங்கெங்கு
தமிழுளதோ அழிக்க முயல்கின்றீர்
ஏற்றம் கண்டிட
காதல் சிங்களம் அலையுதே
பங்கொன்று
தமிழுக்கும் நீர்தருவீர் –உம்
புதுக்காலத்து
சிங்களம் வாழ வாழ்த்துவமே!
பண்டைய மொழியன்றோ
நற்றமிழ் ஐய
புதிதென முளைத்ததன்றோ
சிங்களம்
யாண்டும்
புகழ்ந்துரைப்பேன் நற்றமிழ்
யாதும் ஊரே
யாவரும் கேளிர்!
-“கவித்தீபம்“
இஸ்மாயில் எம். பைரூஸ்
28 – 11 – 2013 8
28
முகநூலார் கருத்துக்கள்
---------------------------------------------
தமிழைக் கொச்சைப்படுத்துவோருக்கு சாவடி கொடுத்திருக்கிறீர்கள்..அற்புதமான கவிவார்ப்பு...தங்களுக்கே உரிய பாணியை தங்கள் கவிதைகளில் காண்கிறோம்.. ரசிக்கிறோம். தங்கள் கவிதைகளுடன் தொடர்ந்து பயணிப்போம்... வாழ்த்துக்கள் கலைமகன்...
பதிலளிநீக்கு-ராசதுரை - சுவிஸ்