It கலைமகன் கவிதைகள்

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இன்று (01.10.2017) இடம்பெற்ற, பட்டயக் கற்கைநெறி மாணாக்கருக்கான பட்டமளிப்பு விழாவின்போது, என்னால் எழுதி வாசிக்கப்பட்ட, பல்லோரினதும் வாழ்த்துக்களைப் பெற்ற கவிதை இது. 


தமிழ் வணக்கம்
--------------------
உளத்திலொன்றாய் உதிரத்திலொன்றாய் உண்மைவடிவாய்
உயர்செம்மொழியாய் தேவாமிர்தமாய் சிறந்திடும் தமிழே
வளம்பெறுமொழியே வாகையாய் எங்ஙனும் வளர்மொழியே
வணக்கம் சொன்னோமுனக்கு தமிழ்ப்பட்டய மாணாக்கர்நாம்! 

தலைவர் வணக்கம்
--------------------
புலவோர் பலரும்பாங்காய் அமர்ந்துள செந்தமிழ் அவைக்கண்
புலவோர் பலருமேத்திடும் பண்புடைப் பேராசான்  தகைகொள்
புலமைக்குழுவின் தலைவரே பேராசிரியர் சபாஜெயராசாவே
புகழ்ந்தேயேத்தி பணிந்தே சொன்னோம் நல்வணக்கம் உங்கட்கு!

பன்னூல் தந்திந்திட்ட பத்தியெழுத்துக்களின் தகையே எங்கள்
பாரோர் போற்றிடும் நற்றமிழ்ச் சங்கத்துத் தலைவரே உயர்ந்திடும் கன்னல்தமிழின் தகையே உயர்திரு தம்புசிவ சுப்ரமணியமையா கனிவாய் நோக்கி நல்வணக்கம் சொன்னோம் உங்கட்கும்!

சபை வணக்கம்
----------------------
மதுரத்தமிழ் நாளும் நயந்திடும் சொந்தங்களனைவர்க்கும்
மதுரமாய்த் தமிழுரைதந்து தமிழையேத்திய தகையேயெம்
மதுவெனவுன்னி மாணாக்கர்  மொய்த்திடும் பேராசானே
மாணாக்கர்நாம் பணிந்தே நவின்றோம் நல்வணக்கம்!

தமிழ்க்கென வாழும் நற்றமிழ்க் கவிதைதரும் கவியே
தமிழால் புகழ்பெரும் பாவலனே தாமரைத்தீவனே
தமிழ்ச்சங்கந்தனில் இவண் குழுமியிருக்கும் புலவர்காள்
தமிழ்ப்பட்டயச் சான்றிதழ் பெற்றிட்டவெம் சகபாடிகளே
தமிழின் பேரால் நல்வணக்கம் சொன்னோம் நாம்!
  
தலைப்பு - ஏத்தினோம் யாம்!
-----------------------------------------
எண்ணத்தமிழ் எடுப்பாய்த்தமிழ் ஏற்றத்தமிழ் எமக்குத்தமிழ்
எடுத்துத்தமிழ் பாங்காய்த் தந்த பெரும்புலவ - சைவப்புலவ
கன்னித்தமிழ் சுவையாய்த்தமிழ் கன்னலெனவீந்த பெரும்புலவ
கருத்தினிலுரை ஆசானே செல்லத்துரை ஐயா ஏத்தினோமுமை!

வண்ணத்தமிழ் வாகைத்தமிழ் செய்யுட்டமிழ் எமக்களித்த
வண்ணக் கவிவாணர் எங்கள் காப்பியக்கோவே - ஜின்னாஹ்
எண்ணத்திலுமை வைத்தோம் - தொடர்பாடல் கல்வியினான்
எங்கட்கு தகையாக வித்தைகள் சொல்லிய  நல்லாசானே
ஏற்றங்கொள் சோ.முரளியாசானே உமையும் ஏத்தினோம்!

திறனாய்வுத் துறையினிலே எமையெலாம் ஏத்தியேத்தி
திறம்படக் கல்விப்பாலீந்த பேராசானே சபாஜெயராசா
சிறப்பான தமிழ்க்கல்வி பற்றிச்சீராய் எமக்கெல்லாம்
சிந்தையினினோதிய பேராசான் செ. யோகராசாவே
சிந்தைமகிழ்ந்தே ஏத்தினோம் உங்களையெலாம்யாமே!

இலக்கிய வரலாற்றைச் சுவைபடவே தந்திட்ட
இயற்றமிழை நாளும் இதமாகச் சொல்லிட்ட
சொல்லேறுழவ திருமிகு கேசவனாசானே நாங்கள்
சொன்னோ முங்கட்கும் மதுசூதனாசான்கும் நன்றி!
சொன்னோம் நன்றி பேராசான் வ. மகேசுவனாசான்கும்!

மடைதிறந்த வெள்ளமென தமிழர் பண்பாட்டை
மங்களமாய்ச் சொன்ன மனோகரனாசானே நற்றமிழ்
மடைதிறந்து வருதற்கு தமிழ்தந்த நல்லாசரியைகள்
மாணாக்கரெம் வானதி காண்டீபன் - கே. சிவகுமார்
மழலைத் தமிழ்கொண்டு ஏத்தினோம் போற்றினோம்!
  
காவ்யத்தமிழ் சீராய்ச் சொல்லி காவ்யங்கட்குள் ஈர்த்த
காவலரே தமிழின் பேராசானே வ. மகேசுவரனாசானே
பவ்வியமாய் கல்வியின் உயர்வைச் சொன்ன எங்கள்
பேராசான் சந்திரசேகரனாசானே - ஊடகவியலீந்த
பத்திராதிபரே  ஏத்தினோம் எலோரையும்!

 நன்றியுரை
--------------
எங்கள் பட்டமளிப்பு விழாவினிலே சமரிலா கவிதைகேட்டு
எங்கட்கும் கைகள்தட்டி ஏத்தியே போற்றிட்ட
தங்கத்தமிழாசான்கள் அன்பர்கள் அனைவர்க்கும்
தந்தோம் நன்றிப்பூத்தூவல்கள் தமிழ்வாழ்கவென்றும்!

- கலைமகன் பைரூஸ்

01.10.2017 ஞாயிற்றுக்கிழமை
கொழும்புத் தமிழ்ச் சங்கம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக