It It கலைமகன் கவிதைகள்: தலைப்புகள் இல்லா கவிதைகளுக்காக! - குறிஞ்சி மைந்தன் ஜௌபர் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

ஞாயிறு, 7 ஜூன், 2020

தலைப்புகள் இல்லா கவிதைகளுக்காக! - குறிஞ்சி மைந்தன் ஜௌபர்



தேயிலைச் சேய்களின் 
தலை கோதிய தாய் அறியாள்
விஷம் பறந்து வந்து உயிர் பருகுமென்று.
எந்தையரின் முன்னோரின் காடு
அட்ஷய பாத்திரமாய்
ஊரானை ஊட்டி செழிக்கச் செய்ததுதான்
ஒட்டிய வயிறு பிளந்து
ஓட்டு வாங்கிய வயிறுகள்
வயிறு வளர்த்ததுமிங்கேதான் காண்.
என்றாலும்
உயிர் பறிக்க குளவிகள் படையெடுக்குமென்று அறியாள் அன்னை.
மார்புகளுக்குள் கிடந்த குழவியை
பிள்ளை மடுவத்தில் கிடத்தி
அன்னையர் வளர்த்தது
இந்த கொழுந்து குழந்தைகளைதானே.

கற்பை போலுமிந்த மலைகள்.
ஈங்கு சூழும்
ஆயிரமாயிரம் துரோகங்களில் ஒன்றாய்
காலடிகளுக்குள்
இப்படியும் மெளத்து
ஒளிந்து கிடக்குமென்று அறியாள் அன்னை.
சொல்லாமல் வந்துவிடும் செலவை போல வந்தது திருட்டுச்சாவு
தாகத்தோடு இருந்திருப்பாளோ?
இன்று
நாலுபேருக்காக எதை வார்க்க காத்திருந்தாளோ?
புல்லுக்கட்டு தூக்கி வந்தபோது
கால் வழுக்கி .... போன,
முதலும் கடைசியுமாய்
ஆமாம்
முதன் முதலாக
கடைசியாய் தன்னை
தனியே
விட்டுப்போன கணவன் .
நீ
மயங்கி கிடக்கும்போது
" பார்த்து சூதானமாய் இருந்திருக்களாம்தானே....
பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும்
தவிக்க விட்டு
வருபவளா நீ..." கேட்டிருப்பாரோ ?
தாயே நீ இங்கு நட்டு வைத்த
மரங்களையும்
அறுத்து
பிளந்துதான்
கொண்டேகுகின்றனர் இங்கு.
உன்னையும்...
வலிகளின் கிடங்கான என் அன்னையர்
உன்னைப்போலுமிங்கே ஆயிரம் அன்னையருக்கும்
கல்வாரி காடானது
இம் மலைக்காடுகள்
நுன் குழவிகள்
குளவிகளாய் ஆகி
முள் வாரி பெய்து
அரண் செய்யும்வரை
நமது
அன்னையரும்
அறையப்படுவர் அநியாயச் சிலுவையில்.

- Mohamed Hanifa Mohamed Jaufer
(இரட்டை பாதை ஜஃபர் )
03.06.2020 
(அடக்கிவிட்டு வந்தபின், அடக்க முடியாமல் கிடந்த ஏகாந்தத்தில் ... போய்விட்ட என் கொழுந்துகளுக்காக வடித்தது)

குறிப்பு - பல்வேறு படிமங்களுடன் சிறப்பான கவிதையை ஜௌபர் சேர் எழுதுவதால், அவர் மலையக மைந்தன் என்பதால், அவருக்கு நான் சூட்டிய புனைப்பெயர் குறிஞ்சி மைந்தன் ஜௌபர் என்பது என்பதைக் கருத்திற் கொள்க. -தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்


1 கருத்து:

  1. எனது எழுத்தை இப்பக்கத்தில் சேர்த்த கலைமகனின் இலக்கிய உள்ளத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு