வலிமை பெற்றோம் நாமே என்று
வன்மம் பேசுகிறான் - வலியோ டின்று
நலிந்தே நிலத்தில் உருவே மாறி
நிலமே நகைக்க நாணிக் குனிகின்றான்
போதை யினாலே பாரே இன்று
பேதை களணிந் துளதே – அந்தோ
மேதை
யாவோம் என்றே செல்லும்
மாணவர் பல்லோர் நாணிக் குனிகின்றார்
உடலில் உளத்தில் தாக்கம் தந்தே
உடலினுட் புகுந்திடும் அரக்கன் தானே
நடைப்பிண மாக்கிடும் இயமனுந் தானே
நல்லோர் வெறுக்கும் போதைக் கொடியான்
ஆசை யூட்டியே மோசஞ் செய்திடும்
அந்நிய மில்லா பொருளில் வந்திடும்
வேசத் தினில் மாணவர் மாட்டிடும்
வில்லங்க போதை யினைத் தெரிவோம்
கற்றோர்க் குச்சவால் நாம்தான் என்றே
குவலயத் துப்புகுந்துள பல்பேர் போதை
உற்றே நோக்குது இரையாக் கிடத்தான்
உணர்ந்தே விழிப்பாய் இருந்திட கடவோம்
உருட்டும் திருட்டும் புரட்டும் பலதும்
உண்டியும் சுருக்கி அடிதடி கொள்ளை
சுருட்டும் புகைக்கே கையும் நீட்டிடும்
சூன்யப் போதை தனைநாம் தெளிவோம்
தேசத்தை கருவறுத் திடவும் சமூகம்
தனியாள் அழிந்திட வுந்தான் புகுந்து
பாசத்தைப் பக்குவமாய் புகுத்தி தீயோர்
புறத்தினில் அழிவே செய்வர் அறிவோம்
மானம் குலம்கல் விபணம் மேலுயிர்
மீண்டிடா போதை செய்திடுந் தீங்கால்
ஞானம் மிக்கோர் நாம்என் றாயின்
நினைவு நல்லது கொண்டே வாழ்வோம்
வண்ணம் பலவாய் வந்திடும் இனிப்பும்
வலம்வரும் புதுப்புது நண்பர் இணைப்பும்
எண்ணம் விரிந்திட செய்தல் வேண்டும்
ஏற்றம் வாழ்வில் பூத்திட வேண்டும்!
பாலதும் அறியா பேதையர் உறவை
பாங்காய்த் தந்திடும் போதை தன்னை
சூழலினின் நின்றே தூக்கியே எறிந்திட
சீரிய கல்வியை கற்போம் நாமே!
-கவிஞர் ‘தமிழ்ச்சுடர்’
கலைமகன் பைரூஸ்
B A (Tamilology); B A (Hons) Tamil (R) | Dip in Tamil
www.youtube.com/@KalaimahanFairooz
காலி - நாவின்னை முஸ்லிம் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா மலரில் பிரசுரிப்பதற்காக, அதிபரின் வேண்டுகோளின்போரில் அனுப்பிவைக்கப்பட்ட கவிதை இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக