ஆசிரிய வாண்மையும் இன்றைய சில ஆசிரியர்களின் நிலையும்
ஒரு காலத்தில் ஆசிரியர் என்றால் ஒளிவிளக்காகக் கருதப்பட்டார். “ஆசிரியர் என்பது அச்சாணி” என்று தமிழ் இலக்கியம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அந்த அச்சாணி இல்லாமல் ஏதொரு வண்டியும் நகராது. அதுபோல ஆசிரியர் இல்லாமல் ஒரு சமுதாயமும் முன்னேறாது. ஆனால் இன்று சில இடங்களில் ஆசிரியர்களின் நடத்தை, பண்பாடு, ஆளுமை, பிள்ளைகளின் மனதில் விதைக்க வேண்டிய நம்பிக்கையை அழிக்கும் படியாகக் காணப்படுகிறது என்பதே வேதனை.
இன்று எனது மகனும் ஒரு ஆசிரியரால் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டதால் இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஏனெனில், தனிப்பட்ட காயம் ஒரு சமூகக் கேள்வியை உள்வாங்கும் போது அது அனைவருக்கும் கண்ணாடியாகி விடுகிறது.
பட்டம் கிடைத்ததாலே ஆசிரியரா?
இன்றைய பல ஆசிரியர்கள் பல்கலைக்கழகங்களில் பெற்ற கல்விச் சான்றிதழ் காரணமாகவே இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு எதிர்ப்பில்லை. ஆனால் பட்டம் மட்டும் போதாது. ஆசிரியராகும் பொழுது, கல்விச் சான்றிதழ் என்பது கதவைத் திறக்கும் சாவி மட்டுமே. அந்த அறைக்குள் நுழைந்தபின், ‘ஆசிரிய வாண்மை’ என்ற தனிப்பட்ட ஒழுக்கம், மனிதநேயம், பொறுமை, கருணை, பிள்ளைகளை வழிநடத்தும் திறன் ஆகியவையே உண்மையான அடித்தளம்.
மாணவர்களை வதைக்கும் சில பழக்கங்கள்
- மாணவர்கள் எளிய கேள்வி கேட்டால் கூட கோபம் கொண்டு, அவர்கள்மேல் பாய்ந்து விழுவது.
- பெயரைப் பிழைத்துக் கொண்டு “ஏய்”, “அடா” போன்ற வார்த்தைகளால் இழுத்தழைக்கும் பாங்கு.
- தீய, தூசண வார்த்தைகளை மாணவர்களின் மனதில் குத்துவது.
- பாடம் கற்றுத்தருவது அல்லாமல், தங்களது உள்நிலை ஆத்திரத்தை மாணவர்களிடம் வெளிப்படுத்துவது.
ஆசிரிய வாண்மை – அதன் பொருள்
“வாண்மை” என்ற சொல்லுக்கு பல அடுக்குகள் உள்ளன:
- பொறுமை – மாணவர் புரியாமல் இருந்தால், மீண்டும் மீண்டும் விளக்குதல்.
- கருணை – தவறுகள் செய்தாலும் சீர்செய்யும் மனம்.
- ஒழுக்கம் – மாணவர் பார்ப்பதற்கே உரிய முன்னுதாரணம்.
- நடத்தை – சாந்தமும் சமாதானமுமான சொற்கள்.
ஆசிரியர் தன் பாடத்தில் வல்லவராக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதைவிட அவசியம் மாணவர்களிடம் அணுகும் முறையே. ஒரு சொல்லும், ஒரு பார்வையும், ஒரு சிறிய சிரிப்பும், மாணவனின் வாழ்வை மாற்றக்கூடியது.
கல்வியியலாளர்களின் சிந்தனைகள் – ஆசிரிய வாண்மை குறித்து
பண்டைய கல்வியியலாளர் சொக்கலிங்கம் பிள்ளை கூறியபடி, “ஆசிரியரின் முகத்தில் சாந்தம் இருக்க வேண்டும்; சாந்தம் இல்லாத ஆசிரியரின் அறிவு மாணவரின் மனதில் வேரூன்றாது” என்று வலியுறுத்துகிறார்.
மேலும், புகழ்பெற்ற இந்திய கல்வியியலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியரை “தேசியத்தின் ஆன்மா” எனப் பாராட்டுகிறார். அவர் கூறியது: “ஆசிரியர் கற்பிப்பது பாடத்தை மட்டும் அல்ல; அவரின் வாழ்க்கை முறையே மாணவர்களுக்கு பாடமாகிறது”. அதாவது ஆசிரியரின் ஒவ்வொரு நடத்தை, சொல், செயல் ஆகியவை மாணவரின் வாழ்வில் அழியாத பிம்பமாக நிற்கின்றன.
சுவாமி விவேகானந்தர் கூட, “ஆசிரியர் என்பது அறிவை ஊட்டும் குழாய் அல்ல, மாணவரின் உள்ளத்தில் மறைந்திருக்கும் சக்திகளை எழுப்புபவர்” என்று சுட்டிக்காட்டுகிறார். இதுவே வாண்மையின் உச்ச நிலை – மாணவரைத் தாழ்த்தாமல், அவருள் உறங்கியிருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன்.
மாணவர் கேள்விகள் – தடையாக அல்ல, வாயிலாக
இன்றைய சில ஆசிரியர்கள் மாணவர்கள் கேள்விகள் கேட்கும்போது அதைத் தொல்லையாகக் கருதுகிறார்கள். “அடங்கிப் போய் கேள், கேட்டுக்கொண்டே இராதே” என்று சினக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒரு மாணவனின் கேள்விதான் ஆசிரியரின் அறிவுக்கும் பொறுமைக்கும் சோதனை.
ஆசிரியம்
ஆசிரியம் என்பது வெறும் பாடம் கற்பித்தல் அல்ல, அன்பு, ஒழுக்கம், அறிவுரை, வழிகாட்டுதல் ஆகியவற்றின் சங்கமமாகும். பிள்ளையின் உள்ளத்தில் உறங்கியிருக்கும் அறிவை எழுப்புவது தான் உண்மையான ஆசிரியம். அச்செயலின் போது சினம், அடாவடி, தூசண வார்த்தைகள் என்பன இடம் பெறக் கூடாது. அன்பின் வழியே அறிவை வளர்த்தல் தான் ஆசிரியத்தின் தூய பண்பாகக் கருதப்படுகிறது.
ஆசிரியரின் பொறுப்பு – தொழில் அல்ல, கடமை
ஆசிரியர் என்பது தொழில் மட்டுமல்ல, கடமை. அது சமூகத்துக்குக் கடன். ஒரு மருத்துவர் ஒருவரின் உடலை காப்பாற்றுவார். ஆனால் ஆசிரியர் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வையும் மனதையும் வடிவமைக்கிறார். அந்தக் கடமையை உணராமல், “நான் வேலையைச் செய்கிறேன்” என்ற எண்ணத்தில் செயல்பட்டால், அது கல்வி அல்ல.
ஆசிரியர் என்ற சொல் தமிழர் மனதில் ஓர் உயர்ந்த இடம் பெற்ற சொல். அதனை மலிநிலைக்கு இட்டுச் செல்லும் சிலரின் நடத்தை சமுதாயத்திற்கே பாதிப்பு. ஆசிரிய வாண்மை என்பது அழகு, அன்பு, பொறுமை, வழிகாட்டுதல். அது இல்லாமல் ஆசிரியர் என்ற பெயர் வெறும் பட்டமாக மட்டுமே இருக்கும்.
'நான் காணும் நல்லாசிரியர்' எனும் தலைப்பில் வாரிஸ் அலி மௌலானா
இலங்கையின் பல பாடசாலைகளில் பிரபலமான தலைமை ஆசிரியராக சேவைபுரிந்த அதிபர் அஸ்ஸெய்யித் வாரிஸ் அலி மௌலானா அவர்கள், களுத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அமுத விழா மலரில் எழுதிய 'நான் காணும் நல்லாசிரியர்' எனும் குறிப்புகள் இந்தக் கட்டுரைக்கு அணிசேர்க்கும் என்பதால் அவற்றையும் இங்கே இற்றைப்படுத்துகிறேன்.
1. ஆசிரியத் தொழிலை பெரும் சேவையாக மதிக்கும் உணர்வு
இவரிடத்தில் இருக்கும்.
2. தனது பிள்ளையின் கல்வி மற்றும் துறைகளின் வளர்ச்சியில்
காட்டும் ஆர்வத்தையே மற்றைய பிள்ளைகளிலும் காட்டுவார்.
3. பாடசாலை நேரத்தில் மாத்திரமன்றி ஏனைய நேரங்களிலும்
மாணவர்களுக்காக, பாடசாலைக்காக உழைக்கும் பக்குவம்
இருக்கும்.
4. இவரின் சிந்தனை, பேச்சுகள் பெரும்பாலும்
பாடசாலையின் உயர்வு பற்றியதாக, மாணவர்களின் கல்வி
பற்றியதாகவே இருக்கும்.
5. ஆசிரியப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்திருப்பார்.
இதனால் தனது சொந்தத் தேவைகளைக்கூட செய்ய முடியாத நிலை உண்டு.
6. பாடசாலைக்குச் செல்ல முன்பாக தன்னை முற்று முழுதாக
கற்பித்தல் நடவடிக்கைகளிலும் ஏனைய செயற்பாடுகளிலும் தயார் செய்து கொள்வார்.
7. பாடத்திட்டங்கள், பாடக் குறிப்புகள் தயாராக இருக்கும். பாட ஆயத்தைச் சிறப்பாகச்
செய்திருப்பார்.
8. கற்பித்தலுக்குத் தேவையான துணை நூல்கள், உபகரணங்கள், தகவல்களைப் பெற்றுக்
கொள்வதில் ஆர்வமாக இருப்பார்.
9. பாடசாலைக்குச் சிறந்த முறையில் செல்ல வேண்டும்
என்பதில் கவனமாக இருப்பார். இதற்காக நேர்த்தியாக உடையணிந்து தன்னைத் தயார் செய்து கொள்வார்.
10. உடையிலும் நடையிலும் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்திக்
கொள்வார்.
11. பாடசாலை ஆரம்பிக்க முன்னரேயே அங்கு சென்று விடுவார்.
சிவப்புக் கோட்டின் கீழ் கையொப்பமிடுவது நல்லாசிரியரின் பண்பல்ல என்பதை உணர்வார்.
12. பாடசாலை ஆரம்பிக்கும் மணி அடிக்க முன்னர் தனக்குரிய
வகுப்பறைக்குச் சென்று, வகுப்பை மேற்பார்வை செய்வார்.
13. பாடசாலை ஆரம்பிக்கும்போது, உரிய இடத்திற்குச் சென்றிருப்பார்.
14. இவரைக் கண்டாலேயே மாணவர்கள் மகிழ்ச்சியடைவர். மரியாதை
செலுத்துவர்.
15. இவரின் பேச்சில் கனிவிருக்கும். ஒழுக்கமிருக்கும்.
நடத்தையில் முன்மாதிரி இருக்கும்.
16. இவர் எந்த வகையில் தண்டித்தாலும் மாணவர்கள் கோபம்
கொள்ள மாட்டார்கள். குற்றத்தை உணர்ந்து திருத்தும் தண்டனையாக அது அமையும்.
17. அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளமாட்டார்.
18. பாடசாலையிலும் சமூகத்திலும் பிரபல்யம் பெற்றிருப்பார்.
19. மாணவர்கள் மத்தியில் தனக்குக் கிடைக்கும் நன்மதிப்பை
பாடசாலை நிர்வாகத்துக்கு, அடுத்த ஆசிரியருக்கு, அடுத்த மனிதனுக்கு எதிராகப் பயன்படுத்த மாட்டார். பாடசாலையின், சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த முனைவார்.
20. கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரமன்றி, பாடசாலையின் சகல செயற்பாடுகளிலும் மிக ஆர்வத்தோடு பங்கு கொள்வார்.
21. இவர் வகுப்பறைக்குச் சென்றால், மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி பிறக்கும். ஆர்வம் மேலிடும்.
வகுப்பறையில் சந்தோசமான சூழல் காணப்படும். கற்பித்தல் சிறந்தோங்கும். பாட வேளை முடிந்து
ஆசிரியர் வெளியேறும் போது மிகத் திருப்தியுடன் செல்வார். மாணவர்கள் மன நிறைவோடு எழும்பி
வழியனுப்பி வைப்பர்.
22. மணியடித்ததும் அடுத்த பாடவேளைக்காக உரிய வகுப்பை
நோக்கி வேகமாக நடப்பார்.
23. இவர் வகுப்பறையில் ஆpசரியர் கதிரையில் அமர்ந்திருப்பதை அவதானிப்பது கடினமாக இருக்கும்.
எழுந்த நிலையிலேயே கற்பித்த்தல் பணியில் அதிகம் ஈடுபடுவார். மாணவர்கள் பயிற்சிகள், குறிப்புகள் எழுதும்போது அவர்களிடம் சென்று அவதானித்து உரிய
ஆலோசனைகளை வழங்குவார்.
24. ஓய்வாக இருக்கும் நேரங்களில் தாமாகவே ஆசிரியர் இல்லாத
வகுப்பில் சுயமாகக் கடமை புரிவார். அல்லது பாடசாலைப் பணிகளில் ஈடுபடுவார்.
25. இவர் ஓய்வாக இருப்பதைக் கண்டால் மாணவர்கள் தமது
வகுப்புக்குப் பிடிவாதமாக அன்போடு அழைத்துச் செல்வார்.
26. மாணவர்கள் இவரது பாடத்துக்கு வேறு ஒருவரிடம் மேலதிக
வகுப்புக்காகச் செல்ல மாட்டார்.
27. விசேடமாகத் தனது வகுப்பறையைச் சுத்தமாகவும் அழகாகவும்
நேர்த்தியாகவும் வைத்திருப்பார்.
28. தனது பாடத்துக்கான மாணவர்களின் கொப்பிகள், புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் ஒழுங்கான முறையில் பேணப்படுவதில்
கவனமாக இருப்பார்.
29. பொதுவாகப் பாடசாலைச் சுத்தம், மாணவர் ஒழுக்கம் மற்றும் செயற்பாடுகளில் தனது பங்களிப்பை நல்குவார்.
ஆசிரியன் முகம் சாந்தமாய், சொல் இனிமையாய்,
மாணவனின் மனம் மலர செய்ய வேண்டும்.
அன்பின் கரம் நீட்டி வழி காட்டி,
அறிவின் தீபம் ஏற்றி வளர்க்க வேண்டும்.
பொறுமை தான் அவரது முதற் பாடம்,
கருணை தான் அவரது கடைசி பாடம்.
அடாவடி அல்ல – ஆவல் நிறைந்த சிந்தை,
சீற்றம் அல்ல – சிரிப்பு நிறைந்த முகம்.
இப்படியே இருந்தாலே,
ஆசிரியர் = அறிவின் தந்தை,
மாணவர் = வாழ்வின் வெற்றி!
✍️ கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக