It It கலைமகன் ஆக்கங்கள்: இனவாதத்திற்கு எதிராக கல்வியால் வென்​றெடுத்த ஒரு சாதனைப் பெண்ணின் கதை: பாத்திமா சைனப் | கலைமகன் பைரூஸ் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 30 அக்டோபர், 2026

இனவாதத்திற்கு எதிராக கல்வியால் வென்​றெடுத்த ஒரு சாதனைப் பெண்ணின் கதை: பாத்திமா சைனப் | கலைமகன் பைரூஸ்

இது வெறுப்புணர்வும் இனவாதமும் நிறைந்த கொடிய ஆயுதத்திற்கு, கல்வியும் மனித நேயமும் என்ற கேடயத்தால் பதிலடி கொடுத்த நமது காலத்தின் உண்மையான ஒரு பெண் வீராங்கனையின் கதை. இவரது பெயர் பாத்திமா சைனப். நாடு முழுவதும் பல ஆண்டுகளாக பேசப்பட்ட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மற்றும் வைத்தியர் இமாரா ஆகியோரின் அன்பான மூத்த மகள்தான் இவர்.

களங்கமற்ற குழந்தைப்பருவமும் திடீரென கவிழ்ந்த இருளும்

2019 ஆம் ஆண்டு மே மாதம் வரை சைநப்பின் உலகம் மிகவும் அழகாக இருந்தது. சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கிய இவர், குருநாகல மலியதேவ பாலிகா வித்தியாலத்தில்  கல்வி பயின்றார். இனம், மதம், சாதி போன்ற எந்தவித வேறுபாடுகளும் அவரது பிஞ்சு மனதைத் தீண்டியிருக்கவில்லை. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர் பாடசாலையில் அனைத்துப் பாடங்களையும் சிங்கள மொழியிலேயே கற்றது மட்டுமல்லாமல், பௌத்த தர்மப் பாடத்தையும் மிகுந்த ஆர்வத்துடன் படித்தார். பௌத்த தத்துவத்தின் மீது அவர் காட்டிய அந்த அன்பின் காரணமாக, பாடசாலைத் பருவத் பரீட்சைகளில் பௌத்த தர்மப் பாடத்தில் அதிகூட்டப் புள்ளிகளைப் பெற்ற மாணவிகளில் முன்னணியில் திகழும் அளவுக்கு அவர் திறமைசாலியாக விளங்கினார். கணிதம் மற்றும் அறிவியலில் இயற்கையான திறமைகளைக் காட்டி, தோழிகளுடன் மகிழ்ச்சியாகக் கழிந்த அந்த அழகான குழந்தைப்பருவம் ஒருபோதும் இப்படி இருண்டுபோகும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

ஆனால், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு எல்லாமே தலைகீழாக மாறியது. ஒட்டுமொத்த நாடாகவும் பயத்திலும் சந்தேகத்திலும் மூழ்கியிருந்த அந்த இருண்ட காலத்தில், அவரது தந்தைக்கு எதிராக பாரிய சதித்திச்சொன்றைத் தீட்ட சிலருக்கு அது சரியான வாய்ப்பாக அமைந்தது. "சிங்கள பௌத்த தாய்மார்கள் 4000 பேருக்குக் கருத்தடை செய்தார்" என்ற மிகைப்படுத்தப்பட்ட மற்றும் பொய்யான செய்தி ஊடாக, அவரது அன்பான தந்தையைச் சுற்றி அப்பட்டமான பொய்கள் புனையப்பட்டன. எந்தவித அறிவியல் அடிப்படையுமின்றி 2019 மே 24 அன்று இரவில் வைத்தியர் ஷாபி கைது செய்யப்பட்டபோது, ஒரு குடும்பமாக அவர்கள் படாத பாடுபட்டனர். தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் முழுவதும் தங்கள் தந்தையை இழிவுபடுத்துவதைக் கண்ட அந்த பதினான்கு வயதுச் சிறுமிக்கு அதனைத் தாங்கிக் கொள்வது எவ்வளவு கடினமானதாக இருந்திருக்கும்?

சமூகத்தின் புறக்கணிப்புகளும் கொடூரமான சவால்களும்


தந்தை விளக்கமறியலில் இருந்துகொண்டிருக்க, சைநப்பிற்குச் சமூகத்திலிருந்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மன அழுத்தம் கொடுக்கப்பட்டது. நேற்றுவரை ஒன்றாக விளையாடிய தோழிகள், சில ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூட அவரை "கருத்தடை மருத்துவரின் மகள்" என்று வெளிப்படையாக அவமானப்படுத்தத் தொடங்கினர். பாடசாலையில் மாதவிடாய் ஏற்பட்ட தனது தோழி ஒருவருக்குச் சுகாதார நாடா (Sanitary Napkin) ஒன்றை வழங்கிய சாதாரண நிகழ்வைக் கூட இனவாதிகள் "சைனப் பாடசாலையில் கருத்தடை பேட்களை விநியோகிக்கிறார்" என்று திரிபுபடுத்தினர். இறுதியில் பாடசாலை அதிகாரிகளின் அழுத்தங்களினாலும், தான் அவ்வளவு நேசித்த சிங்கள பௌத்த பாடசாலையை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அந்தச் சிறுமிக்கு ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால், அது பாடசாலையிலிருந்து விலகுவது மட்டுமல்ல; இனவாதம் அவரை விரட்டியடித்த செயலாகும்.

அன்றிலிருந்து அவரது கல்விப் பயணம் மிகவும் முட்கல் நிறைந்ததாக மாறியது. குருநாகலிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்குச் சென்றாலும், தொடர்ந்த தொல்லைகள் காரணமாக கொழும்பையும் துறந்து தனது தந்தையின் சொந்த ஊரான கல்முனைப் பகுதிக்குத் தப்பியோட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. குறுகிய காலத்திற்குள் ஐந்து பாடசாலைகளுக்கு மாற வேண்டிய சோகம் சைநப்பிற்கு நேர்ந்தது. கல்முனை பதியுதீன் மகளிர் பாடசாலையில் இணைந்த சைனப்பிற்கு, அதுவரை சிங்கள மொழியில் பழகிய அத்தனை பாடங்களையும் ஒரே இரவில் தமிழ் மொழியில் கற்க வேண்டியிருந்தது தாங்க முடியாத பேரதிர்ச்சியாக இருந்தது. மொழி புரியாத காரணத்தினால் அவர் அழுது தீர்த்த இரவுகள் அநேகம்.

விடாமுயற்சியும் வியக்கத்தக்க எழுச்சியும்

ஆனால், உலகத்திற்கே பேரிடராக மாறிய 2020 கோவிட் தொற்றுநோய், சைநப்பிற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இணையவழிக் கல்வி (Online classes) ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், குருநாகலிலிருந்த பழைய ஆசிரியர்களிடமிருந்து மீண்டும் சிங்கள மொழியிலேயே கல்வி கற்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. கல்முனையிலிருந்து பகல் பாராமல், இரவூட்டி உழைத்த அந்தப் பேராற்றலின் விளைவாக, 2022 சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களுக்கும் (9 பாடங்கள்) 'A' சித்திகளைப் பெற்று சாதனை படைத்தார். இது அவரது குடும்பத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இனவாதத்திற்கு எதிராக அவர் தொடுத்த பாரிய அறிவுசார் தாக்குதலாகும்.

இருப்பினும் சவால்கள் அத்துடன் முடிவடையவில்லை. சிறந்த பெறுபேறுகள் இருந்தபோதிலும், கண்டிப் பிரதான முன்னணிப் பாடசாலைகள் இரண்டிற்கு உயர்தரப் படிப்புக்காக விண்ணப்பித்திருந்தும், "வைத்தியர் ஷாபியின் மகள்" என்பதால் நேர்காணலுக்குக் கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த மட்டமான பாடசாலை கலாச்சாரம் அவருக்குக் கதவுகளை அடைத்தாலும், இந்த வீராங்கனை தளர்ந்துபோகவில்லை. அனுராதபுரம் கலாவெவவில் உள்ள தனது பாட்டியின் கிராமத்திற்குச் சென்று, அழகிய வயல்வெளிகளையும் இயற்கையையும் தனது பாடசாலையாக மாற்றிக் கொண்டார். பௌதிகவியல் போன்ற கடினமான பாடங்களை இணையம் ஊடாகத் தானே தனியாகப் பயின்று, கடுமையான மன உளைச்சல்களுக்கும் சமூகப் புறக்கணிப்புகளுக்கும் மத்தியிலும் 2024 உயர்தரப் பரீட்சைக்கு உயிரியல் பிரிவில் தோற்றினார்.

பேரறிஞர்களின் பாராட்டைப் பெற்ற உண்மையான 'ரந்தோணி'


ஒட்டுமொத்த இலங்கையையும் வியப்பில் ஆழ்த்தி 3 'A' சித்திகளைப் பெற்று, மாவட்ட மட்டத்தில் 12 வது இடத்தையும், நாடு முழுவதும் 357 வது இடத்தையும் பெற்று பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குத் தெரிவானார். அந்த வெற்றிக்குப் பின்னால் வெறுப்புணர்வுக்கு இடமிருக்கவில்லை; மாறாக மனிதநேயமே இருந்தது. "என் தந்தை செய்யாத குற்றத்திற்காகக் குற்றம் சாட்டியவர்கள் உட்பட, எந்தவொரு இனம் மதம் பாராமல் மனிதநேயத்துடன் சிகிச்சை அளிக்கும் நல்லதொரு மருத்துவராக நான் மாறுவேன்" என்பது பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான பின் அவர் கூறிய மிக நெகிழ்ச்சியான வார்த்தைகளாகும்.

இறுதியில் சத்தியம் வென்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளிலிருந்து வைத்தியர் ஷாபி எந்தத் தவறும் செய்யவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பொய்க் குற்றச்சாட்டுகளிலிருந்து 2024 நவம்பர் 06 ஆம் திகதி நீதிமன்றத்தால் அவர் குற்றவாளியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஊடகவியலாளர் சுருங்க சேனநாயக்க எழுதிய "ரந்தோணி" () நூல் வெளியீட்டு விழாவில் மருத்துவ மாணவியாக மேடையேறிய சைனப், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு வலுவான செய்தியைக் கூறினார். "இனவாதம் என்பது சமூகத்தை நாசமாக்கும் ஒரு பேரழிவு என்றும், அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமானால் பிரிவினைகளை வென்றெடுப்பது அவசியம்" என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார். பாத்திமா சைனப் என்பவர் வெறுமனே பரீட்சைகளில் சித்தியடைந்த மற்றொரு மாணவி மட்டுமல்ல; சமூகத்தின் வஞ்சகத்திற்கும் அவதூறுகளுக்கும் தனது கண்ணீரால் அல்ல, மாறாக தனது உறுதியினாலும் பேனாவினாலும் பதிலளித்த, மட்டமான அரசியலுக்கு எதிராக நிமிர்ந்து நின்ற நமது காலத்தின் உண்மையான 'ரந்தோணி' ஆவார்.

எனது கருத்து சுருக்கமாய் :

இந்தக் கதையைப் வாசிக்கும் எவரினதும் கண்களில் கண்ணீர் துளிர்க்காமல் இருக்காது. ஒரு குழந்தையின் கல்வி உரிமையை, எதிர்காலத்தை, அவளது தந்தையின் மீதான காழ்ப்புணர்வின் காரணமாகத் தட்டிப்பறிக்க முயன்ற சமூகத்தின் கோரமுகம் இங்கே அப்பட்டமாக வெளிப்படுகிறது. எத்தனையோ தடைகள் வந்தும், சோர்ந்துபோகாமல் கல்வி என்னும் ஒளியால் அந்தச் சுவர்களைத் தகர்த்து எறிந்த சைநப், ஒட்டுமொத்த இளைய சமுதாயத்திற்கும் ஒரு முன்மாதிரி. இனவாதம் மனிதர்களைச் சிதைக்கலாம்; ஆனால் உறுதியான மனித நேயமும் கல்வியும் இருந்தால் எத்தகைய பேரிருளையும் விரட்டி வெற்றியை ஈட்டலாம் என்பதற்கு இவரே மிகச் சிறந்த சான்று.

#ILoveCeylon #FatimaZeynab #InspirationalStory #TrueHero #SriLanka #TamilTranslation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக