It It கலைமகன் கவிதைகள்: 2009 Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

திங்கள், 7 டிசம்பர், 2009

திருக்குறள்


ஒன்றே முக்கால் அடியாலே
ஒப்பற்றுத் திகழும் நூலிதாம்
என்றும் பெருமை தான்கொண்டு
எடுப்பாய்த் திகழும் நூலிதாம்!

இரண்டே யடிகளில் தானின்று
இதயச்சுத்தி செய்வதுவாம்
அருமை பெருமை தான்கொண்டு
அகிலத்தாரைக் கவர்ந்ததுவாம்!

பற்பல மொழிகளில் வெளியாகி
பகலவ னொளியாய்த் திகழ்வதுவாம்
நற்போதனைகள் பலஈந்து
நவில்தொறும் இனிமை பயப்பதுவாம்!

சாதிமத பேதம் அழித்தொழிக்க
சத்தியாய் நிற்பது இதுவுந்தான்
ஓதிடுவோம் நாம் என்றென்றும்
ஒப்பிலா ஈரடி வெண்பாதான்!

கலைமகன் பைரூஸ்

வியாழன், 19 நவம்பர், 2009

என்னில் நீ!




அதிகாலை துயிலெழுந்து
ஆண்டவனை உள்மனதில்வைத்து
இங்கிதமாய உன்நினைவுகளொடு
ஈங்கு நான் உயிர்மூச்சுவிடுவதெலாம்
உந்தன் அன்பு என்றும்கிடைத்திடவேண்டி...!
ஊடல்கொள்வாய் சிலபோது என்னில்
என்றாலும் நிலவாய் நீயேதொடர்கிறாய்...
ஏற்றம் உனில்என்பேன் நான் – இதனை
ஐயமின்றி உரத்துரைப்பேன் நான்
ஒளிவடிவானதென்னில் உன்வதனமடி
ஓய்வின்றி உனையே எண்ணுதுள்ளம்!
ஔவியம் நீக்கி வாழ்வோம் நாமே!

காரணமின்றியே கோபம்கொள்வாய்
சடுதியாய் எனில்வீழ்ந்து இன்பந்தருவாய்
தப்பேசெய்யாமல் நீ தப்பென்பேன் சிலபோது
பல்லிளித்து சொல்லாடுவாய் நீயென்னில்!

ஞாலமே உன் அன்பிலடி பெண்ணே
நானிலமே எமில் காணவேண்டும் ஆதர்சம்
முத்தான சத்தும்சொத்தும் நீயேகண்ணே!

யாண்டும் எமில்வேண்டும் அன்பு - அடீ
வட்டமிடவேண்டும் என்றும் நீயெனையேதினம்!

ஆற்றல்மிக்கது உந்தன் கண்ணீர் துணையே
ஈட்டியாய் தைத்திடத்தெரியும் சிலபோதுனக்கு
ஊடல் கூடலில் அன்பைத் தருதேவுயிரே
ஏனோ நானேயறியாது ஊடலுனக்கு?
ஐயம்நீக்கு நானேயுந்தன் சீவன்!
ஓந்திநானல்லன் ஒட்டிவாழ்வோம் நாமே!

ஆசைகள் சில பாய்ந்துவரும்போது
ஈரைந்தடி நகர்ந்திடுவாய் நீயே
ஊடல்கொள்வேன் ஒட்டிடுவாய்நீ
ஏற்றம்மிக்க என்கண்ணகிநீயே
ஐயமின்றி புகழ்ந்துரைத்தேன் உனை
ஓயாமல் உனைத்தொடரும் நிழல் நானே!

- கலைமகன் பைரூஸ்
நன்றி: ஒருநாள் ஒருகவிதை சனிக்கிழமை,14 நவம்பர் 2009

புதன், 28 அக்டோபர், 2009

கொஞ்சமேனும் வேண்டாமோ?


மண்ணெய்யாலும்
மசகினாலும்
வயிறு வளர்க்கும் நாடுகளே...
உலகமயமாக்கப்பெயரோடு
கலாச்சாரத்தை
பூண்டோடு அழிக்கும்
மேற்கத்தேயமே...!


உங்களிடம் நாம் பணிபுரிவதை
நீங்கள் தப்பாகக் கணக்கிடுகிறீர்கள்
பொதிசுமக்கும் மாடுகளாய்
கைப்பொம்மைகளாய்
உங்களுக்கு நாங்களா?
நீங்கள் தங்க்க்கிண்ணங்களில்
உடல்மினுக்கும் பெண்களை
சுவைத்துக்கொண்டு
அருந்துவதெல்லாம்
எங்கள் உதிரமும் வியர்வையும்
மாடாகப் படுத்துகிறீர்கள்
திரும்பிக்குத்தவும்
எங்களுக்குத்தெரியும்
உங்கள் நாட்டில்
வயிறுகழுவ வந்துவிட்டோம்.
உங்கள்மீது கோபமில்லை
என்கோபமெல்லாம்
இறையாண்மையை அழித்து
மேலாண்மையை வகுத்து
சொல்லாண்மையை
தட்டிப்பறித்த
உன் ஈசலின்மீதுதான்....


ஒருவருடத்துக்குள்
ஓரிலட்சம் ஆண்டுகளின்
வேலை வாங்குகிறீர்கள்!
இன்ஸான்...
கூடிக்கூடிப்போனால்
அறுபதோ அன்றேல்
எழுபதோதான் அநுபவிப்பான்...


நாங்கள் என்ன
உங்களைப்போல்
மா... மரமனிதர்களா என்ன?
எங்கள் மனவலியின்
கடுகு விதைகள் ஒவ்வொன்றும்
உங்களுக்கு ஒருநாள் வதைசெயும்!
தம்பட்டம் அடிக்காதீர்கள்
உரத்துப் பேசாதீர்கள்!
கருவிலிருந்து
வெளியேவிட்டவனைப் பயப்படுகிறோம்...


மாடுபடாத பாடுபடுகிறோம்
கோடான கோடிபெறுகிறீர்கள்
எங்கள் வேதனை
எங்கள் மனவலி
உங்களுக்குதெரியப்போவதில்லை
ஒன்று மட்டும் உண்மை!
எங்களுக்கு
உங்களுக்குள்ள
பாரிய நோய்கள் இல்லை
அவனே மாபெரியோன்....!


ஓரிரு ரியால்களை
ஓரிலட்சம் டாலர்களாய்
பார்க்கிறீர்கள்.....
ஓரிரு டாலர்களைவைத்து
ஆன்மாவை மறக்கிறீர்கள்....
மாமனிதன் என்ற
மாபெரும் பட்டங்கள் எல்லாம்
பரீட்சை எழுதாமலே
உங்களை அடைகின்றனவே!
கொஞ்சம் மனம் வையுங்கள்
நறுமணம் வீசலாம்
உங்கள் அழுக்குகளை
உங்கள் அசிங்க அறைகளுக்குள்
கைவிலங்கிட்டு வையுங்கள்!


ஓரிருநாட்களேனும்
எங்களையும் வாழவிடுங்கள்
எங்கள் உழைப்பில்
உப்புச்சாப்பிட
உயிர்கள் காத்துக்கிடக்கின்றன.
உயிரோடு ஒட்டிப்பிறக்காததை
உங்கள் காசாலேயாவது
பெறமுயலுங்கள்
எங்கள்வலி புரியும்
உங்கள் வழிதெரியும்!

கலைமகன் பைரூஸ்
இலங்கை

நன்றி : 
# முத்துக்கமலம்,
# வார்ப்பு
# ஒருநாள் ஒருகவிதை
# பூங்காவனம்

வெள்ளி, 23 அக்டோபர், 2009

கைகோத்திடுக!


கைகோத்திடுக!

இனிய கூண்டுக்குள் நாமி ருந்தோம்
அநீதியால் மடிந் தழிந்தோம்
இனிய கதைகள் சொல்லி மகிழ்ந்தோம்
சனியன் வந்திட மிடியானோம்!
சங்கமித்த தமிழனின்று தடைக ளொடு
ஏங்குகின்றான் ஏது செய்ய?

ஈழம் பெற்றிட பட்டகஷ்டம் போதாதா?
நாளங்கள் ரத்தம் இழந்தவே!
நங்கூரமின்றி நடுக்கடலில் நிற்கிறோமே
நானிலமே வாய் புதைத்த்தே!
பாழாய் போனதே வாழ் வெங்கனும்
பண்பட்ட தமிழனின்று அகதியே!

இனியும் தமிழன் இம்சை நீங்கிட
மனிதம் பூத்திடும் நாளினிது
மங்கள மெங்கனும் நீண்டு தளைத்திட
சிங்களமும் தமிழும் கைகோத்திடுக
சிதறிய உளத்தின் நோவினை மறந்திட
குதறிய வெறிகள் அழிந்திடுக!

வசந்தம் பூக்குதுதா மெங்கனும் செவிவழி
நிசமாயின் நமக்கெலா மானந்தம்
வாழ்வினி லிழந்தவை மீளப் பெற்றேநாம்
தாழ்வின்றி தமிழினை ஏத்துவம்
தரணியி லுயர்ந்தது தமிழெனவே நாம்
ஈரமிலா தார்க்கு உணர்த்துவம்!

பட்ட துன்பங்கள் போதுமையா நாம்
சுட்டவடு ஆறவிலை இன்னும்
பதுங்கிய நாம் மீள எழுந்திடுவோம்
ஒதுங்குவதா யொதுங்கி யெழுவம்
ஓதுவம் நாமெலா ஓரின மென்றின்று
ஒப்புயர்வு ஒண்ணிலாதே வரும்!

கலைமகன் பைரூஸ்
இலங்கை

நம்பிக்கை வை!


வாழ்க்கை
இது மானுடனுக்கு மட்டுமல்ல
ஏனைய சீவராசிகளுக்குந்தான்
திமிர்பிடித்த
ஏறுகள் உன்மேலேறி
உனை மிதிக்க வரும்...
எடுப்பார் கைப்பிள்ளையாய்கொண்டு
மேலே தூக்கி கீழேபோடுவர்
மிட்டாய்கள் காட்டி
தலையைத் தடவி
கண்மயிரைப் பிடுங்குவர்...
உன் திறமைகளை எள்ளி நகையாடுவர்
உன்னில் நீ நம்பிக்கைவை!
உன்னை நம்பு
உனக்குள் ஆயிரமாயிரம்
வேர்கள் முளைகொள்வதைத்தெளி!

நானோ நன்குபட்டவன்....
சமூகம் – சகபாடிகள்
நாடு -பெரியவர்கள் என்போர்
பேச்சளவில் உயரப்பேசுவர்
பூச்சியம்.... எல்லாம் பூச்சியம்...


உன்கையெழுத்தை கண்டு
உன் தலையெழுத்தைச்சொலும்
சூன்யங்களும் உண்டு!

சுரமில்லா கீதங்கள்கொண்டு
உனையேற்றிப் புகழ்வர்
ஈரமில்லா நெஞ்சுடையாரின்
ஈசல் வார்த்தைகளுக்குள்
உனை இழக்காதே!

வறுமை உன்னோடு ஒட்டிப்பிறந்த்து
அதற்காக
எருமைகள் குட்டையைக் குழப்புவதை
ஏரெடுத்தும் பாராதே!
உன்னில் நீ நம்பிக்கைவை
நம்பி நீ எதிலும்கைவை
வாழ்க்கையில் சறுக்காதவர்கள்
எவர் உளர்? புன்னகை
உன்னில் புன்னகை மலரும்


 உன்னில் நம்பிக்கைவை
வாழ்வில் சறுக்கல்களுக்கு
துவண்டுவிடாதே!
உனை நம்பி கிழக்கில்
ஒளிக்கீற்றுக்கள் வருவதைப் பார்!
பார் ஒருநாள் உனை ஏத்தும்!


கலைமகன் பைரூஸ்
இலங்கை.


நன்றி
தினகரன் வாரமஞ்சரி

திங்கள், 12 அக்டோபர், 2009

நலிவுற்ற நல்லாளைத் தாங்கு - கவிதை


நலிவுற்ற நல்லாளைத் தாங்கு!

வருபடைகள் தான்வென்றுவருங்காளை
வாளைமீன்களால் கண்டுவிட ஆசை
கருமீசைநெஞ்சத்தில் மஞ்சமிட ஆசை
கதவினிடுக்கிருந்து பார்க்கின்றாளேநேசி!

இருமருங்கும் உள்ளனரே தாதி
இதயத்துள் தாங்கியவளிவள் ஆதி
திருவுடையான் உளம்பற்றிட ஆதி
திருநங்கைசெய்திட்டசெய்கைகள் சோதி!

கசத்தோடு திமிரபகவரைவென்ற தமிழன்
கரம்பற்றிட உளம்படருது முத்து
விசமருந்தி சாவே நீயின்றேலென்று
விசயம் சொல்கிறளா வித்தையாளீவள்!

கதவுத்துளையம் கண்ணிரண்டும் விட்டு
கரம்பிடிக்க வுள்ளானின் மனதினை தொட்டு
சாதற்கு முன்னொருபொழுதேனும் மொட்டு
சேர்ந்துவிட ஆசையம்வார்த்தை சொல்கிறாளோ?

அவனின்றிய நாழிகைள் பசளையாயீவள்
அடைந்திட்டாள் துன்பங்கள்கோடி
சவத்திற்கு முன்னேனும் சந்தித்துமகிழ
சொல்லழகி படுகின்றபாடு அந்தோபாரு!

மீசைமுறுக்கிய வீரத்தமிழா – வந்துவிடுஓடி
மெத்தழகு ஒருமித்த நல்லாளைக் கூடி
நசைமிகு யுள்ளான்நீ பல்லாங்குசொல்லாடி
நனைந்திடஅவள்மேனி கஞ்சமுகந்தனைக்கூடு!

கலைமகன் பைரூஸ்