காலத்தின் தேவை இக்கவிதை!
பத்திரிகை படித்திட வேண்டும்!
நாட்டுநலம் அறியமலை நாட்டவ ரெல்லாம்
நாளாந்தம் தினத்தாள்கள் படித்திட வேண்டும்
வீட்டிலுள்ள மாதர்களும் வேலை செய்வோரும்
வசதிக்கேற்ற படிதினம் வாசிக்க வேண்டும்
ஏட்டறிவு இலாதோரும் எழுத்தறிந் தோறின்
இசைவுநாடி நிலைமைகளைக் கேட்டறிந் திடனும்
பூட்டிஇருள் சூழ்ந்தமனக் கோட்டைக ளெல்லாம்
புதியபுதிய சேதிகளால் துலங்கிட வேண்டும்
நமதுநாட்டில் நிகழுகின்ற சேதிகள் என்ன
நம்மைப்பற்றி நிகழ்காலக் கருத்துக்க ளென்ன
அமைதியற்ற புலன்களிலே நடப்பவை யென்ன
அரசஎதிர் கட்சிகளின் போக்குகள் என்ன
சமகால வாழ்வுமுறைப் பயண நெரிசலில்
தொழிலாளி நிலையென்ன பிறர்நிலை யென்ன
நமைநாமே அறிதலொடு பிறர்நிலை அறிய
நாளாந்தம் பத்திரிகை படித்திட வேண்டும்
ஆபிரிக்க நாட்டில்நடக்கும் அதிசய மென்ன
அமெரிக்கரின் வாழ்வில் தோன்றும் மாறுத லென்ன
தாபரிக்க யாருமற்று வறுமையின் பிடியில்
துயருரும் ‘ஏ தோப்பியரின்’கொடுமைதா னென்ன
சாபவிமோ சனமிலாத கேடென உலகின்
சரித்திரத்தில் கறைபடிக்கும் போர்வெறி யென்ன
கோபங்கொண்டு சீறும்இயற்கைக் கோரங்களாலே
குடிகள்படும் துயரினையும் அறிந்திட லாமே!
அரசியலை அறிந்திருக்க வேண்டுமே நம்மோர்
அன்றாட நிகழ்வுகளை புரிந்திட வேண்டும்
சரியான வேளைவரும் போதினில் எம்மோர்
சக்திதனைக் காட்டநமைத் தயார்ப டுத்தணும்
உரியவாறு அனைத்துமறிந்து வைத்திருந் தாலே
ஏற்றபோது ஏற்றதனைச் செய்தல் கூடுமே
அரிமாவும் மண்டியிடும் காலம் நம்பதம்
அரசியலில் உறுதியுற ஆவன செய்வோம்
சுற்றியுள்ளோர் சேர்ந்துதினம் ஒன்றென் ருயினும்
தரமான தினசரியைத் தெரிந்து வாங்கணும்
ஒற்றுமைக்குப் பங்கமின்றி ஒருவர்பின் ஒருவர்
உலகளாவுஞ் சேதிகளை ஓர்ந்த றிந்திடணும்
மற்றவரும் படித்தறியும் வாய்ப்பை அளிக்கணும்
மனத்திலுதிக்கும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளணும்
சொற்பமேதான் பணவிரயம் பலனை நோக்கிடில்
செலவினைப்போல் பலமடங்கு அதிக மாகுமே!
‘மருதம்’ நன்றி: காங்கிரஸ் 1995.09.01
பத்திரிகை படிக்க வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வூட்டும் கவிதையைப் பகிர்ந்ததற்கு நன்றி.
பதிலளிநீக்கு