It கலைமகன் கவிதைகள்: ஏ.ஆர்.எம். ஹுஸைன் - இரங்கற்பா

வெள்ளி, 26 அக்டோபர், 2012

ஏ.ஆர்.எம். ஹுஸைன் - இரங்கற்பா

சென்ற 2012. 10. 14 ஞாயிற்றுக் கிழமை வெலிகாமம் அறபா தேசிய பாடசாலை வெபா மண்டபத்தில், மறைந்த முன்னாள் கல்விப்பணிப்பாளரும் கல்விமானுமான மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஹுஸைன் அவர்கட்கான இரங்கற்கூட்டமும், பன்னூலாசிரியர் கலாபூசணம் ஹபீபுர் ரஹ்மான அவர்களால் தொகுக்கப்பட்ட நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஹுஸைன் நினைமலர் வெளியீடும் நடைபெற்றது.

முன்னாள் அறபா கனிட்ட வித்தியாலயத்தின் அதிபராகவிருந்த அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். இர்சாத் தலைமையில் நடைபெற்ற விழாவின் சிறப்பதிதியாக புரவலர் புத்தகப் பூங்கா நிறுவுனரும், இலக்கிய நெஞ்சங்களுக்குக் கரங்கொடுக்கும் புரவலருமான அல்ஹாஜ் ஹாஷிம் உமர் கலந்துகொண்டார்.

சிறப்புப் பேச்சாளராக அறபா தேசிய பாடசாலை ஆசிரியர் அஷ்ஷெய்க் முன்திர் (நளீமி) கலந்துகொண்ட இவ்வைபவத்தில் கலாநிதி எஸ். தணிகாசலம், கல்விப் பணிப்பாளர்களான எம்.ரீ.எம். ஆகில், மதனியா கலீல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கலாபூசணம் ஏ.எச்.எம். யூசுப் நூலாய்வும், கலைமகன் பைரூஸ் இரங்கற்பாவும், இஸ்லாமியக் கீதப்பாடல்கள் புகழ் செல்வன் மின்ஸார் இரங்கற்பாடல்களும் பாடினர்.

நிகழ்ச்சிகள் யாவும் ஊடகவியலாளர் சகோதரர் எம். மிப்ராஹ் அவர்களால் சிறப்பாக நெறியாள்கை செய்யப்பட்டிருந்தன.



இவ்வைபவத்தில் என்னால் பாடப்பட்ட இரங்கற்பா!

விண்ணைப் படைத்து மண்ணைப் படைத்து
வீறுடை மனிதனையும் பேறாய்ப் படைத்து
கண்ணெனக் காக்கும் இறையைப் போற்றி
கருத்தினின் நிறைந்த ஆசான்க்காய் பாடுகிறேன் பா!

அன்பின் உறைவிடமாய் வாழ்ந்தவர்
அன்பிலாதாரை அணைப்புக்குள் கொணர்ந்தவர்
சொன்னயம்மிக்க பேச்சுடனே வாழ்ந்தவர்
சொல்லவியலாத் தகைமைகள் பல பூண்டவர்!

ஏ! ஆர் இந்த ஹுஸைன் என்பார்க்கு
ஏற்றம்காண் ஏயாரெம் ஹுஸைன் ஸேர் என்பேன்நான்!
நோவாமல் மனம் இனியன இயற்றினார் - ஈற்றில்
நாயனின் அருள்பெறவே தனியாய் நின்றார்!

மண்ணூர்க்கு மாண்புசேர்த்த வல்லாளர்
மண்மீது மடைமை களையவந்த பேராளர்
கண்மீது நிறைந்தே நிற்கும் நம்மவர்
கருத்திற்கினிய ஹுஸைன் ஸேரைப் பாடுவேன்!

நம்மறபாவின் சீரிய மாணாக்கனாய் நின்றவர்
நம்மறபா பேருயற பல்கலையது சென்றவர்
எ(ம்)மையெலாம் அன்பாகத் தட்டித் தந்தவர்
ஏயாரெம் ஹுஸைன் ஸேரை ஏத்திப் புகழ்வேன்!

தேசமெங்கும் வல்லவர்கள் பலருண்டு - இதில்
தணியாத தாகத்தால் வளர்ந்தவர்கள் சிலருண்டு
வேசமிலா நல்லுளத்தார் ஹுஸைன் ஸேரை நினைத்திடவே
வேகுது உள்மனது இதுதானே உண்மை!

மண்ணுக்கு மாண்புசேர்த்த விழாவன்று
மரகதமாய் உரைத்திட்ட அவரது சீரியபேச்சு
எண்ணுந்தோறும் ஆற்றலைத்தான் வியக்குது
எழுத்தெண்ணிப் படித்திடின் சுடுமே!

மெய்சொல்ல மயங்காத மண்ணின் மைந்தனே!
மணமான உளங்கொள் மரகதமன்ன நல்லவரே!
செய்திட்ட நூலின்று அணியாய்ச்சொலும் உமை
சீர்பெற்று நற்சுவர்க்கத்து சுகந்தம்பெறவே துஆவிரந்தேன்!

பல்லோரும் நல்லவர் நம் ஹுஸைன்ஸேரென்று பேசுகிறார்
பார்மீது உம்பெயர் நீளும் - உண்மை தெரிந்தோம்!
நல்லோர்கள் நினைத்துருகும் உமைக்காணாதே இன்று
நோகுது உம்மறைவையெண்ணி! நிதம்... நிதம்!!

-கலைமகன் பைரூஸ்
14-10-2012 8:35
http://youtu.be/Sul91LsxSEI
 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக