பண்ணொடு இருதமிழ்க்கும் பணிதான் செய்து
சிறியார் பெரியார் யாவரையும் இன்முகத்தே
சிறப்பா யணைத்தே பண்பா யளவளாவி
சீரியரவர்தான் தட்டிக் கொடுத்து வளர்ப்பரே
சிறந்த காட்டதற்கு புதுப்புனல் அறிவீரே!
சிங்களம் சீரிய செந்தமிழ் இரண்டிற்குமன்று
சிறந்த பாலமா யமைந்தாரே சாளரத்தினின்
எங்களையேற்றி ஏற்றம் கண்டிட வைத்திட்ட
எம்மவர் ஷம்ஸ் ஆசானின்றும்
வாழ்கின்றாரே!
பத்தும் பலதும் பக்குவமாய் நற்றமிழுக்கீந்து
பழைமை வாதம் நீக்கிட நல்நாடகங்களியற்றி
தத்துக் கடலினும் சீரிய அலைகளுக்கஞ்சாது
தனியனாய் நின்று சாதித்தார்பல கண்டீரே!
சமாதானக் கனவொடு இயற்றினார் இனிதாய்
சந்தம்மிகு வெண்சிறகடித்து புறாவுக் கொருகவி
சமாதான நிலவியிருக்கு மின்றவ ரில்லையே
சரித்தில் நல்நாமம் தான்சேர்த்துச் சென்றாரே!
பட்டங்கள் விருதுகள் சேர்ந்தன அவர்க்கு
பறித்திடவில்லை பறந்தே வந்தன அவர்க்கு
விட்டகலாதன பலதந்தே சென்றிட்ட அவரின்
வடிவாம் சேவை கலையுலகு நன்றேயறியும்!
தினகரன் சேர்ந்திட வளர்பிறை யிவரும்
தீந்தமிழ்க்கு அணியே சேர்த்தார் அறிவீரே
மனதினின் அழியா ஷம்ஸ் ஆசானின்
மனங்கொள் சேவை என்றும் விண்தொடுமே!
கலையென எனை விளித்திட்டாரே குரு
கலையினி லூன்றிட தந்திட்டாரே பனுவல்பல
நிலைத்திடு முள்ளத்து என்றும் அவர்பணி
நாயனே நல்சுவர்க்க மளித்திடு அன்னவர்க்கு!
-கலைமகன் பைரூஸ்
15.07.2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக