நீள்தெங்குகள் உயர்ந்தோங்குகின்ற
நல்லூர் வெலிகம பதிதனிலே
நின்று நல்லன பலவியற்றும்
நல்லறிவகம் பதுர் அஹதியாவே!
நிறைவாம் பணிகள் பலவியற்றி
நிறைவாய் காணுது வெள்ளிவிழாவே!
திருமறை வழிநின்று தீனுல் இஸ்லாம்
திக்கெட்டும் கடிமணம் கண்டிடவே
திடவுறுதியுடன் நாளும் செயும் பணிகள்
திக்கெட்டும் பரவுதே... தித்திக்குதே...
தன்னிகரிலாத பணிகள் பலவும் செய்யுதே
தரணியில் காணுது இன்று வெள்ளிவிழாவே!
முகாம்கள் பலநடத்தி முன்னின் றுழைத்து
மண்ணில் ஊன்றி பாதம் பதித்து
முன்னவர் பலரும் பின்னவர் பலரும்
மகிழ்வெய்து மேலும் கருமங்கள் பலவாற்ற
மாமனிதப் பணிகள் பலவும் ஆற்றுதே
மண்ணினி லின்று காணுது வெள்ளிவிழாவே!
சிறுமக்கம் என்ற திருப்பதி வெலிகமையீதில்
சிறுதொண்டா செய்தது பலதொண்டன்றோ
சிறுதுளி பெருவெள்ளமாய் ஆயிற்று பத்ரின்
சீரிய தொண்டுகள் ஆண்டுகள் பேசிடும்...
சகத்தினின் தருமங்கள் பலசெய்து பத்ர்
செங்குருதியீந்து படைத்தது நற்பேர்பல!
தலைமைகள் தடம்மாறிடும் காலமின்றும்
தலையாய தலைமையொடு நல்லாசான்கள்
தணியாத நற்பணி செய்வது கண்கூடு
தரணியினின் பத்ர் தலைநிமிர்ந்தே நிற்குது
தனித்துவத்தொடு நாளும் உயர்ந்தே நிற்குது
தனிவிழாவாய்க் காணுது வெள்ளி விழாவே!
அஹதியாக்கள் பலவுள நம்நாட்டில்
அஹதியா பத்ர் ஆதர்சமாய் உளதே
அருளாளன் அல்லாஹ்வின் திருவருள்
அணையாமல் கிடைத்திடவே நாளும்நாம்
அகம் குளிர்ந்து வேண்டிடுவோம் துஆ
அகிலத்தில் விழா நூறாண்டும் கண்டிடவே!
ஆக்கம் - “கவித்தீபம்” கலைமகன் பைரூஸ்
05.03.2015
(வெலிகம பத்ர் அஹதியாப் பாடசாலை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (08.03.2015) அன்று தனது வெள்ளிவிழாவைக் கொண்டாடுகின்றது.
வெலிகம அறபா தேசிய பாடசாலையில் வெள்ளிவிழா நிகழ்வுகள் அன்றைய தினம் முழுதும் நடைபெறவுள்ளன.
பத்ரை நினைவிருத்தி எழுதப்பட்டதே இக்கவிதை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக