It கலைமகன் கவிதைகள்: தூயமனத்தார்க் களிப்பீர் வாக்கு!

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

தூயமனத்தார்க் களிப்பீர் வாக்கு!


ஆனைதருவேன் பூனை தருவேன் என்று
அடுக்கடுக்காய் தந்த பொய்ப் பொத்தல்கள்
ஆனையளவும் நாளை புலர்ந்திட அருகாகி
அச்சத்தால் விம்மிப் புடைக்கும் உண்டி!
வெறும் வாய்க்கு வெற்றிலை கெட்டவரும்
வெறும் வாய்க்கே சொன்ன பொய்களெலாம்
வெறுக்கும் நாள் புலர்ந்திட பீதியுற்றவர்
வெட்கிக் குனிந்திட நாளைவருது தேர்தல்!
அழகு மயில்களாட வான்கோழி யன்னார்
ஆட்டிய ஆட்டங்கள் ஆட்டம் கண்டிடவே
விழலுக்கிரைத்த நீரென போய்விட நாளை
விடியலில் விரல்கள் பூசிடும் ஊதாமை!

ஒட்டகத்தின் நீள்கழுத்தாய் நீண்ட பொய்
ஓட்டம் கண்டிடவே ஒளிந்திடுவர் நாளை
வீடென்றும் விதவித நல்லன வென்றும்
வீராப்புச் சொன்னவர் குனிந்திட தேர்தல்!
கொடுநாகம் சீறிவிடா வண்ணம் நாமெலாம்
கொடும்புலி பாய்ந்துவிட வண்ணம் நாமெலாம்
தடுமாறுங் கவியினங்கள் மாறிவிட வண்ணம்
தெளிவுடனே போடவேண்டும் புள்ளடி நாளை!
வெற்றிலை யானை மணியொடு வீடும்
வேண்டியே நின்ற வாக்கினை தெளிந்தே
வெற்றி கொண்டிட தகையவர் எவரோ
வழங்குவிர் அவர்க்கே மதிப்புள வாக்கை!
மெய்ம்மை பொய்ம்மை ஆகாதென்பர் - நாளை
மெய்ம்மை மேதினியின் உயர்ந்திட நாளை
தூயமனத்தர் எவரோ அவர்க்கே வாக்கை
தூக்கியே தருவீர் தூங்கியோர் விழித்திட!!

-கலைமகன் பைரூஸ் 16.08.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக