It கலைமகன் கவிதைகள்: கவிதா சகி தருகிறேன் பதில்!

வெள்ளி, 1 ஜனவரி, 2016

கவிதா சகி தருகிறேன் பதில்!

என்னால் ஏன் எழவியலாது
என
எடுத்தாண்ட எழுத்துக்களில்
எல்லாம் நீங்கள்
எழுமாற்றாக எழுதினீர்கள்
எழுந்துநிற்க ஏணியில் ஏறியோர்
எட்டியும் பார்க்காமைக்கு
என்னதான் நான்செய்யலாம்?
எனக்குள் பீனிக்ஸ் பறவை…
எழுந்துவருவேன் சாம்பரிலிருந்து
எட்டப்பர்கள் எத்தனை நாட்களுக்கு….

எனக்குள் உள்ள ஆளுமைகள்

என்னை மணந்த மணவாளனால்
எறியப்படுவதை எரிக்கப்படுவதை
என்னால் ஏற்கவியலாது…
என்னைப் போன்றவர்களை
எரிகனலாக்கி போகப்பொருளாக்கி
ஏறிமிதித்து சுமைதாங்கியாக்கி
எங்களாலால் ஏதும் இயலாது என
எச்சில் துப்புவார்க்கு
என் இறக்கைகள் கூரிய ஆயுதமாகும்
என் இறக்கைகள் அரியப்படமாட்டாது
ஏனென்றால் நான் ஜடாயுவன்று….

என்ன அழகு ஆபத்து என்கிறாய்
என் ஆற்றல் ஆபத்தா அவர்கட்கு
எச்சில் விழுங்க எங்கள் அழகு
என்ன அவர்களுக்கு கேள்விக்குறிதான்!
ஏன் நாம் மலையுச்சிக்குச்
ஏறிச் செல்லவேண்டும்
எவர்களின் பார்வைக்கு - பேச்சுக்கு
“எடம்” கொடுப்போம் நாம்…
“எலை”களிலும் அட்டைகள்
எங்களை நாடி வரக்கூடும்
எங்களில் உள்ள நறுமணம்
எங்களைப் பார்க்கத் தூண்டும்!

ஏன் வன்மங்கலந்து இவ்வுலகை
ஏன் நாம் கண்டு பயப்பட வேண்டும்?
எங்களால் இயலாதது என்ன?
ஏற்றம் காணவில்லையா வான்சென்று
ஏற்றம் காணவில்லையா நதிகடந்து
ஏற்றம் காணவில்லையா கருசுமந்து
ஏற்றம் காணவில்லையேதில்….
ஏற்றமே எங்களாற்றான்…
என்றாலும் எங்களை ஏளனமாய்
எங்களை தூசாய்க் கணித்து,
எங்கள் கன்னித்தன்மை அழிக்க
எக்கணமும் குறியாய் உள்ளோருக்கு
எங்களாலும் இயலும் குறிவைக்க….

எங்கள் உலகம் விசாலமானது
எங்கள் உலகம் தாய்மை உலகம்
எங்கள் உலகம் இன்றேல்
ஏது இவ்வுலகம்…
ஏது முதல் மனிதன்….
எங்களைக் கொண்டு காய்நகர்த்த
எண்ணும் எட்டப்பர்களுக்கு
எழுத்தெண்ணிப் படிக்க
ஏன் நாம் கற்றுக்கொடுக்க்க் கூடாது?

ஏன் நரகம் இவ்வுலகம் என்கிறாய்…?
எழுந்துபார்! எங்கும் எங்களுக்காய்
எழுவான் கதிர்கள் விரிந்துள்ளன…
எங்கள் உலகின் யதார்த்தத்தை
எங்கள் பெண்டிர் காணத்துடிக்காமையே
எங்கள் “ஏலா”மைக்கு எல்லாம் காரணம்
ஏழு வானம் கடந்து எங்களால்
ஏற்றம் காணவியலும் நாம் துணிந்தால்…
ஏற்பாயா சகிநீ!
என் கவிதைக்கு பதில்தா நீ!

-கலைமகன் பைரூஸ்-
2016.01.01

Siththy Mashoora Suhurudeen எழுதிய கவிதை
--------------------------------------------------------------------------
01.01.2016.
ஸஹீயோடு உரையாடல்.
ஸஹீ
பெண் ஒரு
பீனிக்ஸ் பறவையா?
மடிவதும் எழுவதும்
நலிவதும் தழைப்பதும்
இயற்கையின் விதியா?
அழகுதான் அவளுக்கு
ஆபத்தென்று
உலகம் இனம் கண்டது.
ஆற்றல்கூட ஆபத்தானதா?
அவளுக்கென்று உலகம்
எதைத்தான் விட்டுவைத்திருக்கிறது
சொல் ஸஹீ... ?
அட்டைகள் நிறைந்த
மலைச்சாரலில்தாம்
நாம்
உல்லச உலா வருகிறோமா?
நரகம் அங்கே
மஹ்ஷரில் மட்டுமா?
பெண்ணின் பெருநரகம்
இந்த உலகமென்பதை
உணர்கிறாயா ஸஹீ?
பெண் வாழ்வதா
இல்லை வீழ்வதா?
ஆள்வதா இல்லை மாள்வதா?
சுயத்தின் உச்சியில் நின்று
ஒரு பிரகடனம் செய் ஸஹீ.
(கவிதைகளின் ஸஹீயிடமிருந்து பதில் கவிதை எதிர்பார்க்கிறேன்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக