It கலைமகன் கவிதைகள்: மாகாவியம் வரட்டும்! -கலைமகன் பைரூஸ்

செவ்வாய், 26 ஜனவரி, 2016

மாகாவியம் வரட்டும்! -கலைமகன் பைரூஸ்

வைரமான வரிகள் தரும் வைரமுத்து
உங்களுக்கே சொந்தமான வரிகள்…
உங்களுக்கே சொந்தமான குரல்…
உங்களுக்கே சொந்தமான வீராப்பு…
உங்களுக்கே சொந்தமான “ஈரம்”
ஈழமண்ணை மாகாவியமாக்கத் துடிக்கும்
இதயத் துடிப்பு…
இதயத்து ஒட்டுகின்றதுதான்…


உங்கள் மாகாவியம்…
ஒருபோதும் இராமாயண காவியத்தை
மகாபாரதத்தை
சீறாப்புராணத்தை விஞ்சிவிடப்போவதில்லை
நான் சொல்லித்தான் இது
உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றில்லை…

உங்கள் மாகாவியம்
மீண்டும் தமிழ் பேசும் மக்களை
தெருக்களில் நாதியற்றவர்களாக
ஆக்காதிருக்கட்டும்..

நீங்கள் ஆக்கும் மாகாவியம்
மீண்டும் கைகோத்துள்ள மக்களை
இனத்துவேசிகளாகப் பார்க்காதிருக்கட்டும்!
மீண்டும் ஒரு இனச்சுத்திகரிப்பு
இம்சையுடன் தமிழர் செய்யாதிருக்க
ஆவன செய்யட்டும்…

இன்றேல்,
இன்றில்லை என்றாலும்,
நாளை
உங்கள் பெயரைக் கேட்டாலே
காரித்துப்பும் சந்ததி…
வல்லவனுக்கு வல்லவன்
இவ்வையகத்து உண்டு என்பது
பாடல்கள் பலதந்த உங்களுக்கு
தெரியாமலில்லை கவிப்பேரரசே!

உங்கள் மாகாவியம்
மீண்டும் முள்ளிவாய்க்காலில்
பாரிய யுத்தம் மூளச் செய்யாதிருக்கட்டும்!
யாழில் மஸ்ஜித்கள் தீக்கிரையாக்கப்படாது
இந்துக்கள் போற்றும் ஆலயமாயும்
இருக்கட்டும்.. கைகோக்கட்டும் இன்றாய்…

மலையகத்தை - வன்னியை
யாழை - முள்ளிவாய்க்காலை
உங்கள் நினைவில் நிறுத்தி
அழகாய் சோடணைகள் செய்து
எழுதுங்கள்.. மாறாக நீலிக் கண்ணீர்விட்டு
புலிகளும் சிங்கங்களும் பாரிய சமர்செய்து
எமது இனிய பூமியை இல்லாதொழிக்க
ஆவன செய்யாதிருக்கட்டும் மாகாவியம்…
மாகாவியம் வரட்டும்…

யுத்தம் இல்லா பூமியைத் தரட்டும்…
அனைவரும் பரஸ்பரமாய்
ஒன்றிணைத்து நிற்க… நாடு வளம் பெற
தமிழ் உச்சாணியில் நிற்க
உங்களுக்கே ஆன தனிப்பாணியில்
மாகாவியம் வரட்டும்….

26.01.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக