இருபது இலட்சம்
நாங்களல்லவா புதைகுழிக்குள்
புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
கேடு கெட்ட
கேணப்பயல்கள் செய்த
கோழைத்தனத்தால்
நாம் கோவணம் இழந்து
கூனிக் குறுகிப் போகிறோம்.
அப்பாவிகளை அழித்த
அடப்பாவிகளா
நாங்கள் அப்பாவிகள் தானடா
ஏன் எங்களை
அதள பாதாளத்துக்குள்
தள்ளிவிட்டுச் சென்றீர்?
இயேசுநாதரை இலக்கு வைத்து
சிலுவையை ஏனடா
எமக்கு சுமக்கச் செய்தீர்?
தன்மானத்துடன் தானடா
இந்த மண்ணில் நாம்
தலை நிமிர்ந்து வாழ்ந்து வந்தோம்
எங்களை அம்மணத்துடன்
ஏனடா வாழச் செய்தீர் ?
கும்பிட்டுச் சென்றவரெல்லாம்
இன்று குட்டிவிட்டுச்
செல்வதற்கும்
குர்ஆனைக் கூட
குற்றம் சொல்லிப்
பேசுவதற்கும்
குருதிக் குடித்த
குருட்டு ஜென்மமே
நீ போகும் இடமும்
இருட்டு ஜஹன்னமே...
இரண்டாயிரத்துப் பதிநான்கில்
மாவனல்லை கறுத்தே போனது.
இரண்டாயிரத்துப் பதினைந்தில்
கிறீஸ் யக்கா
கீறியே போனது
இரண்டாயிரத்துப் பதினாறில்
தர்கா நகர்
தகர்ந்தே போனது
இரண்டாயிரத்து பதினெட்டில்
கண்டி - திகன
கலங்கியே போனது
இரண்டாயிரத்து பத்தொன்பதில்
கொழும்பு அதிர்ந்தது.
குருணாகல் முடிந்தது.
கொழுத்தியது ஊர்களையல்ல
எமது உள்ளங்களை
உடைத்தது கடைகளையல்ல
நாம் கட்டிக்காத்த
உங்கள் உறவை
கொள்ளையடித்தது
பணத்தையல்ல
எம் பல்லாண்டு உழைப்பை
கலட்டச் சொன்னது அபாயாவையல்ல
எமது ஒழுக்கத்தை
தடைசெய்தது
முகத்திரையை அல்ல
உங்கள் அகத்திரையை
எரித்தது எங்கள் குர்ஆன்களையல்ல.
உங்கள் சாசனத்தை
முடக்க நினைப்பது
எங்கள் பொருளாதாரத்தையல்ல
உங்களால் அடக்க முடியாத
பொறாமையை
ஒன்று சொல்கிறேன்....
உண்மையை சொல்கிறேன்....
வீழ்வோம் என்று நினைக்காதீர்
வீராப்புடன் எழுவோம்
விழ விழ மீண்டெழுவோம்
-ஐ. எம்.ஜெமீல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக