It It கலைமகன் கவிதைகள்: தெல்தோட்டை நஸீரா ஸலீமின் கவிதைகள் இரண்டு Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

தெல்தோட்டை நஸீரா ஸலீமின் கவிதைகள் இரண்டு

வாடும் நிலாவே!-----------------------------
இருமைத் துலங்கிச் சுழலும்
பிரபஞ்ச வெளியில்
துளாவிக் கதிர் பரப்பிய
பரிதியின் பிரதியாய்
பூரணை நிலவு !

பகலவன் பிரிவால் படர்ந்த
இராக் காதலியின்
கவலை ரேகைகளை
ஆற்றுப்படுத்தவே
இரவலை முறுவலாக்கிப்
பிரகாசிக்கும்
செவிலி அவள் !


மதியின் விதி உணரா
விண்மீன் தோழிகள்
வான் தலைவியை சூழ்ந்தே
தன் எழில் சிந்தி
கண் சிமிட்டி
நிலவைப் பழிக்கும் !

எத்தனை குத்தல் கதைகளை
கேட்டேனடி வான்மகளேயென
வாட்டத்தில் வதங்கியே
உடலிளைத்து
மனம் உடைந்து
குளிர் நிலவும்
ஒரு நாள் போர்த்தியுறங்கும் !!
நியாயம் கேட்க வகையின்றி
ஒற்றையாய் நேசித்தது சொல்லா
இராக்கடலும்
உள்ளுக்குள் குமுறும்
அமாவாசையில்
அந்த மதியைப்போலவே...

- நஷீரா பின்த் ஹஸன் (2020.04.07)

---------------- 2 ----------------

நானும் உங்களில் ஒருவன்-----------------------------------------------
தலைநகரின் தலைசிறப்பிற்காய்
தலை எழுத்தை விலைபேசி
அலைகழிக்கப்பட்ட
மலையக உழைப்பாளிகள் நாம்!

காய்ந்த ரொட்டித்துண்டிலும்
கசட்டைக் கோப்பையிலும்
காலம் கழிவதை
காலங்காலமாய் சகிப்பதா
சுகிப்பதாவென
மூட்டை மூட்டையாய் கனவு சுமந்து
கொழும்பு வந்தோமன்றி
கொழுப்பெடுத்து வரவில்லை.



விடிந்தது முதல் ..
தன் விடிவிற்காய் முதலாளி வர்க்கம்
கால் கடுக்க வேலை வேலையென
ரத்தம் உறிஞ்சும் !
ராத்திரியில் ரோட்டோரம்
கொசுக்கடியில் கால் நீட்டியுறங்கி
நாளையேனும் நமக்காய் விடியாதா என
மரத்துப் போன மனதிலும்
கனா தோன பொறுத்திருந்தோம் !

நாடிழந்தோம்! ஊரிழந்தோம்!
உற்றார் உறவிழந்தோம்!
வலுவேறிய கரங்களையும்
வியர்வை சிந்தும் உழைப்பினையும் நம்பி
நம் சந்ததியேனும் நலம் பெறட்டுமென
இத்தனை நாள் உழைத்திட்டோம்!
எங்கள் கனவுகளும் இன்று
குழி தோண்டி விழி பறிக்கப்படுகிறது!

கொலைவெறி பிடித்தாடும்
கொரோனாவால் நடுத்தெருவும்
நாதியில்லை எங்களுக்கு .
உண்ண உணவுமின்றி
உறங்க இடமுமின்றி
ஊர் போக வழியுமின்றி
வாடும் எங்களைப் பாட
சிவி.வேலுப்பிள்ளை இனி வரமாட்டான்!
எங்கள் துன்பக்கேணி சொல்லி
புதுமை படைக்க இன்னோர்
புதுமைப்பித்தன்
இன்று உயிரோடில்லை...

-நஷீரா பின்த் ஹஸன் (2020.04.06)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக