1940 களுக்கு முன்னர் மதம் சார் இலக்கிய முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டிருந்தன. அக்காலத்தில் வௌிவந்த இலக்கியங்கள் பெரும்பாலும் ஆலிம்களாலும் (மார்க்க அறிஞர்கள்) மதத்தைக் கற்றுத் தேர்ந்தோராலுமே ஆக்கப்பட்டன. இந்தவகையில் 1936 களிலேயே 'தமிழிற்சூரியன்' என்று யாழ் மக்களால் பாராட்டிப் போற்றப்பட்ட தம்பி சாஹிப் அப்துல் லதீப் அவர்கள் 'இரட்சகத்தூதர் முஹம்மது நபி (ஸல்)' என்ற நூலை எழுதியிருக்கின்றார்.
1973 களில் 'திருக்குர்ஆனும் இயற்கையும் ' எனும் ஆய்வு நூலை அவர் எழுதியுள்ளார் என்பதை ஆய்வுகளை எழுதுவோர் கருத்திற்கொள்ளக் கடவர்.
இன்று ஏன் இந்தப் பதிவினையிடுகின்றேன் என்றால், தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கின்ற மாணாக்கரின் ஆய்வுகளில் இவர் பற்றி எழுத வேண்டும் என்பதனாற்றான்.
நான் அண்மையில் வாசித்த இரண்டு ஆய்வுக்கட்டுரைகளில். பிரபல எழுத்தாளர் ஒருவரின் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அவர் பற்றிய எந்தவொரு சிறுகுறிப்புக்கூட இடம்பெற்றிருக்கவில்லை. (ஏன் அவர் பற்றிய செய்தி இடம்பெறவில்லை என்பது புதிராக இருக்கின்றது.) மற்றொருவர் பல்கலைக்கழக தமிழ்ச் சிறப்பு ஆய்வு மாணாக்கர் ஒருவர். அவரது ஆய்வில் தகவல் பிழையாக எழுதப்பட்டிருந்தது மனதிற்குப் பாரமாகவே இருந்தது. கள ஆய்வின்போது அவருக்குத் தகவல்களை வழங்கியோர் பிழையாகத் தகவல்களை வழங்கினார்களோ அன்றேல் பிழையாகப் புரிந்துகொண்டாரோ அறியேன்.
நான் ஏலவே சொன்ன ஆய்வு மாணாக்கர் த.சா அப்துல் லதீப் பற்றி எழுதும்போது 'அப்துல் லத்தீப் என்பவர் 1936 ல் உலக இரட்சகத்தூதர் என்ற செய்யுளைப் பிரசுரித்தார்' என்று எழுதியிருக்கின்றார்.
மதுராப்புர, 'பேருவலை இல்லத்தில் வசித்து வந்த அன்னார், தமிழ் இலக்கண இலக்கியத்தைத் துறைபோகக் கற்றிருந்தார் என்பதனாலும், அவரின் தமிழின் ஆழ அகலத்தைக் கண்டதனாலுந்தான் யாழ்ப்பாண மக்கள் அன்னாருக்கு 'தமிழிற் சூரியன்' என்ற பட்டத்தை அக்காலை வழங்கியிருந்தனர்.
அவரது தமிழ் இலக்கண இலக்கியப் புலமைக்கு எடுத்துக்காட்டாக அவரது 'திருக்குர்ஆனும் இயற்கையும்' திகழ்கின்றது என்று கூறலாம். அந்நூலில் அவரால் எழுதப்பட்டுள்ள ஆய்வெங்கனும் திருக்குறளில் உள்ள பல எடுத்துக்காட்டுகள் வந்துள்ளன. அவர் வாழ்ந்த காலப்பகுதியில் வழங்கிய தமிழை அந்நூலில் கண்டு அகமகிழலாம்.
எலிசபத் மகாராணி இலங்கைக்கு வந்தபோது, அவரை வாழ்த்திப் பாடிய கவிதைக்குச் சொந்தக்காரனும் த.சா. அப்துல் லதீப் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. அக்கவிதையை அவர் எழுதியமைக்காக அவருக்கு மகாராணியின் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட சான்றிதழ் இன்னும் பக்குவமாக உள்ளது என்பது மேலதிக தகவல்.
ஆகவே, மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் ஆக்க இலக்கியப் பங்களிப்புகள் பற்றி எழுதும் எவரும் த.சா. அப்துல் லதீபை மறந்து ஆக்கங்கள் படைக்கவியலாது என்பதை தாழ்மையுடன் சுட்டிக் காட்டுகின்றேன்.
(அவர் பற்றி விக்கிப்பீடியாவில் நான் எழுதியுள்ள கட்டுரை https://ta.wikipedia.org/.../%E0%AE%A4._%E0%AE%9A%E0%AE...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக