புள்ளி அளவில் ஒரு பூச்சி எனும் தலைப்பை ஆராய்ந்தோம் எனில் மிகப்பொருத்தமாக மஹாகவி அவர்களால் தலைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் கவிஞன் புத்தகத்தில் ஏதோ ஒரு காற்புள்ளி என தட்டி விடுகிறான். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் இருந்தது ஒரு சிறிய பூச்சியாகும். தட்டுப்பட்டதாலோ என்னவோ பூச்சி இறந்து விட்டது.
அப்படி இறந்த பூச்சி தொடர்பாக கவிஞனின் அனுதாப எழுத்துக்களை வடித்து செல்வதன் மூலம் சிறு பூச்சியின் வாழ்க்கையை சிந்திக்க இடமளிக்கிறான். எனவேதான் தவறுதலாக இட்ட புள்ளி இறுதியில் பூச்சியின் இறுதியாக அமைந்தது ஆகவேதான் மஹாகவியின் புள்ளி அளவில் ஒரு பூச்சி எனும் தலைப்பானது கச்சிதமாக பொருந்தக் கூடியதாக இருப்பதுடன் தலைப்பை பார்த்ததுமே வாசிக்க வேண்டும் என்ற துண்டுதலாகவும் இருக்கிறது.மஹாகவியின் கவிதைகள் அனேகமாக சமூக அவலங்களை பேசும் ஆனால் இக்கவிதை ஒரு சிறிய பூச்சியின் வாழ்க்கையின் மூலம் மனிதாபிமானத்தை பேசக்கூடியதாக உள்ளது. நாம் இக்கவிதையின் கருத்துக்களை இரண்டு விதமாக நோக்கலாம்.
“பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்டகாற்
புள்ளியைக் கண்டு
புறங்கையால் தட்டினேன்
நீ இறந்து விட்டாய்
நெருக்கென்ற தென்நெஞ்சு”
என மேற்கூறப்பட்ட வரிகளினூடாக நாம் அவதானிக்கலாம். முதலாவது விடயம் புத்தகத்தில் புள்ளி அளவில் காணப்பட்ட பூச்சியானது ஏற்கனவே இறந்து போய் இருக்கலாம். ஆனால் அதனை அறியாத விதமாக தன்னால் தான் அந்த பூச்சி கொலையுண்டது என அனுதாபக் குரலுடன் கவிஞன் பேசுகிறான். இரண்டாவது விடயம் கவிஞன் சிறு பூச்சியை தட்டி விட்டதனாலையே அப்பூச்சியானது இறந்து போய் இருக்கலாம். இவ்வாறு இருவேறு நிலைகளில் நாம் சிந்திக்கலாம். இப்படி இருவேறுப்பட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதிலும் இறுதி முடிவாக பூச்சியானது கொலையுண்டது. கொலையுண்ட பூச்சி சார்பாக கவிஞன் இவ்வாறு தனது இரக்கத்தை எடுத்துரைக்கிறார்.
“வாய் திறந்தாய், காணோம்,
வலியால் உலைவுற்றுக்
‘தாயே!’ அழுத
சத்தமும் கேட்கவில்லை”
என துன்பத்தாள் அந்த பூச்சி சிறு சத்தத்தை கூட வெளியிடவில்லையே ஐயோ! என பரிதாபகரமாக தன்னுடைய கருத்தை வெளிகாட்டுவதன் ஊடாக பூச்சி எவ்வாறான ஒரு துன்பத்தை அனுபவித்து இருக்கும் என்பதை வாசகர் மனதில் இலகுவாக பதிய வைக்க முயல்கிறார் அத்துடன் “காட்டெருமை காலடியிற் பட்ட தளிர்போல நீட்டு ரயிலில் எறும்பு நெரிந்தததுபோல் நெரியுண்டு கிடந்தது, அதனுடைய சா நீதியன்று” என்று கவிஞரின் மனம் வருந்துகிறது. ஒரு சிறு பூச்சியின் துன்ப நிலை பேசப்படுவதன் மூலம்
கவிஞனின் உயிர்களின் மீதான அன்பினை வெளிப்படுத்துகிறார். அத்துடன் தான் செய்தது பெரும்தவறு என்பதை உணர்ந்து “நினையாமல் நேர்ந்ததிது, தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே” என அச்சிறு உயிரிடம் கீழிறங்கி மன்னிப்பு கேட்டும் கவிஞரால் மீண்டும் அப்புத்தகத்தை படிக்க முடியவில்லை. இவ்வாறு ஒவ்வொரு கவிதை நகர்வின் போதும் அப்பூச்சி தொடர்பாக வாசகர் மனதில் இனம்தெரியாத ஓர் உணர்வு எழும்புகிறது. அழகான எழுதாக்கத்தினை இரசிக்க கூடியதாக இருப்பதுடன், இரசப்பதினூடாகவே நம்மை அறியாமலே நம்முடைய மனதில் ஆழ்ந்த அனுதாபங்களை ஏற்படுத்திவிடுகிறது. இவ்வுணர்வே மஹாகவியின் வெற்றி எனலாம்.
கவிஞனின் கவிதையோட்டமானது ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை அழகாக புரியும் வகையில் கவிதையினை எடுத்துரைத்து செல்கிறார். ஏனெனில், இயல்பான ஒரு நடையில் கவிதை ஆரம்பிக்கிறது. “புத்தகமும் நானும்…”; என்று ஆரம்பிக்கும் போதே வாசகன் கதையுடன் ஒன்றோடு ஒன்றாக கலந்து விடுகிறான். தொடர்ந்து மொழிநடையும் கவிதை ஓட்டமும் வாசிக்க வாசிக்க ஒரு கோவையாக இடம்பெறுவதால் இறுதிவரை அல்லது கவிதையின் முடிவு வரை ஒரே மூச்சாக இரசித்து முடிக்க கூடியதாக உள்ளது. இதுதான் இக்கவிதையின் சாதகமான விடயம். ஏனெனில் எல்லா கவிதைகளும் வாசித்தவுடன் மனதுக்கு பிடித்து விடாது, மாறாக இவ்வாறு ஒரு சில கவிதைகள் மாத்திரமே வாசிக்க வாசிக்க நம்மை, நம்மையறியாமலே கவிதை முடிவை நோக்கி கொண்டு செல்லும். அந்தவகையில் மஹாகவியின் கவிதை எடுத்துரைப்பு தன்மையானது மிக எளிமையாகவும் விருவிருப்பாகவும் கற்புல காட்சிக்கு இலகுவாக தென்படக்கூடியதுமாக அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பாகும்.
அத்துடன் கவிஞன் தான் செய்யும் தவறை ஏற்றுக்கொள்ளும் விதம் யாதார்த்த பூர்வமாக இருக்கிறது. இதனை உவமையணியை கையாண்டு மேலும் விளக்கம் தருகிறார்.
”காட்டெருமை காலடியிற்
பட்ட தளிர்போல
நீட்டு ரயிலில்
எறும்பு நெரிந்தது போல்
பூட்டாநம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.”
அதாவது முதலாவது உவமையின் அந்த பூச்சியின் மறைவை காட்டெருமை காலில் பட்ட தளிர் போல எனவும் இரண்டாது உவமையில் நீண்ட ரயிலில் அகப்பட்ட எறும்பு எனவும் சிறு பூச்சியின் இயலாதன்மையை எடுத்துகாட்டுகிறார். பிறகு மூன்றாவது உவமையில் கவிஞர் குற்றத்தை ஏற்றுக்கொண்டு அந்த சோகத்தை நிரப்பி விடுகிறார்.
“பூட்டாநம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.”
நம்முடைய வீட்டை பூட்டாது விட்டு; பொருள் போனால் அந்த தவறின் பொறுப்பு முழுக்க முழுக்க எம்மையே சாரும். தவறிழைத்தவர்கள் நாம். ஏதோ காலப் பிழை, விதி என்று கூறி தப்பித்து விட முடியாது கவிஞர் பூச்சியின் இறப்பின் பொருட்டு அந்தச் செயலின் பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டு அதனை உவமிக்கின்றார். பொதுவாக பிழை செய்தால் அதனை நிவர்த்தி செய்ய பல காரணங்களை சுட்டிக்காட்டும் சமூகத்தில,; மனிதனானவன் தவறு இழைத்தால் அதனை ஏற்றுக்கொள்வதும் மனிதம் தான் என்று மறைமுகமாக ஒரு கருத்தையும் கொலையுண்ட இப்பூச்சியின் வாயிலாக வலியுறுத்து செல்கிறார்.
மஹாகவி இக்கவிதையின் மொழிநடை, மிக எளியநடையில் அமைத்துள்ளமை கவிதையை இரசிப்பதற்கு இலகுவாக அமைகிறது. எந்தவித கடுமையான பொருள் அறிய முடியாத சொற்களை தவிர்த்து, அன்றாட வாழ்க்கையில் நாம் உச்சரிக்கக்கூடிய சொற்களே அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துகாட்டாக: மனம் ஒத்திருந்த வேளை, தாயே!, படுத்துவிட்டேன் போன்ற சொற்களை குறிப்பிடலாம்.
அத்துடன் முக்கியமாக இக்கவிதையின் ஓசைநயம், கவிதையை ஒப்புவிப்பதற்கு அழகான இசையற்ற பாடலை படிப்பது போலவே அமைந்துள்ளது.
மீதியின்றி நின்னுடைய
மெய்பொய்யோ ஆயிற்று
நீதியன்று நின்சா,
நினையாமல் நேர்ந்ததிது
தீதை மறந்துவிட மாட்டாயோ சிற்றுயிரே!
இரங்கல் தொனி வெளிப்பட்டு நிற்க, ஒவ்வொரு சொற்களும் கோர்வையாக்கப்பட்டு அமைக்கப்பட்டள்ள தன்மை, கவிதையின் சிறப்பிற்கு வழிகோறுகிறது. அதனைப்போன்றே கவிதையின் இடையிடையே இடம்பெறும் எதுகையும் ஓசைநயத்திற்கு அழகை சேர்க்கிறது. எடுத்துக்காட்டாக,
“புத்தகமும் நானும்
புலவன் எவனோதான்”
“புள்ளியைக் கண்டு
புறங்கையால் தட்டினேன்”
போன்ற சொற்றொடர்களை குறிப்பிடலாம்.
இவ்வாறாக ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து மஹாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் கவிதைகள் நகைச்சுவை கலந்த பாங்கில் கற்புலக்காட்சிக்கு இலகுவானதாக அமைந்து, சமூகம் சாரந்த விடயங்களை பிரதிபலிக்கும். இப்பிரதிபலிப்பை நாம் புள்ளி அளவில் ஒரு பூச்சி கவிதையின் ஊடாகவும் நாம் காணக்கூடியதாக உள்ளது. கவிதையின் முடிவில் வாசகர் மனதில் எழக்கூடிய ஒரு விடயம் தான், அடடா! கவிதை முடிந்து விட்டதே! என்ற உணர்வு. அந்த அளவிற்கு கவிதையின் நடை அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் வெளிப்படையான விடயங்களை பேசும்போது இக்கவிதை மாத்திரம் நாம் நினைத்து கூட பார்க்காத ஒரு சிறு பூச்சியின் வாழ்க்கை வட்டத்தை பேசுகிறது. அதற்கு மஹாகவி அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தே ஆக வேண்டும். கவிதை படைப்பது மட்டுமன்றி அதனை வாசகர்களுக்கு கொண்டு செல்வதிலும் தனித்திறமை வேண்டும். அந்த நுணுக்கம் மஹாகவியிடம் அதிகமாகவே காணப்படுகிறது என்பதை நாம் இந்த புள்ளி அளவில் ஒரு பூச்சியின் ஊடாகவும் அறிந்துக்கொள்ளலாம்.
திறன் ஆய்வு –
திஷ்ணா ராஜா (BA. DIp in tamil, PGDE, Dip in Teach, )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக