மெல்ல கற்கும் மாணவர்களின் இயல்புகள் மற்றும் அறிகுறிகளும் அவர்களை கையாளும் நுட்பங்களும்.
இக்கட்டுரையானது மாணவர்கள் சார்ந்து இயங்கக்கூடிய பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவ வழிகாட்டல் ஆலோசகர்கள் விசேட தேவைக் குரிய மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உரித்தானதாகும்.
இக் கட்டுரையில் மெல்ல கற்கும் மாணவர்கள் என்றால் என்ன மெல்ல கற்கும் மாணவர்களின் பொதுவான இயல்புகள் மெல்ல கற்கும் இயல்புடைய குழந்தைகளை கண்டறிய உதவும் வழிமுறைகள் மெல்லக் கற்கும் மாணவர்களின் பண்புகள் மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக கையாளக்கூடிய கல்வி முறைகள் போன்ற தலைப்பில் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ஆம் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் எழுத்தறிவுள்ள கல்வி அறிவுள்ள குழந்தைகளாக இந்த உலகத்திற்கு பிரசவிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் காணப்படுகிறது.
மெல்ல கற்கும் மாணவனை சங்கீத பந்தாக ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்பிற்கு தள்ளி விட நினைப்பது நாம் எங்களுடைய சொந்த பிள்ளைகளுக்கு சேர்க்கும் பாவமாகும்.
அந்த வகையில் எங்களுக்கு தரப்பட்டுள்ள பிள்ளைகளின் சுயத்தை முழுமையாக ஆராய்ந்தால் மட்டுமே நாம் மிகச் சரியாக அவர்களை கையாள முடியும் அந்த அடிப்படையில் மெல்ல கற்கும் மாணவர்களை இனம் கண்டு அவர்களை சரியான வழியில் வழிபடுத்த நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் எனும் நோக்கில் இக்கட்டுரை இங்கு பகிரப்படுகிறது.
📌📌 மெல்ல கற்கும் மாணவனின் பொதுவான இயல்புகள்.
✍️நுண்ணறிவில் குறைபாடு உடையவராக இருத்தல்.
✍️சூழலுக்கு பொருத்தமான துலங்கலை காட்ட முடியாதவனாக இருப்பார்.
✍️தனித்திருப்பதில் விருப்பம் கொண்டிருப்பர்.
✍️தன்னைச் சூழ உள்ள பொருட்கள் மீது புதுமை நாட்டம் அற்றவராக இருப்பர்.
✍️மொழி வளத்தில் அதிக குறைபாடு உடையவர்களாக இருப்பார்.
✍️உச்சரிப்புகளில் சிலவேளை குறைபாடு ஏற்படலாம்.
✍️நெறி பிறழ்வான செயல்பாடுகளில் சார்புள்ளவராக இருப்பர்.
✍️பாடசாலைக்கு நேரம் தாழ்த்தி வருதல்
✍️அடிக்கடி விடுமுறையில் வீட்டில் நிற்றல்.
✍️பாடசாலை வேலைகளில் மற்ற மாணவர்களை விட குறைந்த மட்டத்தில் இருப்பர்.
✍️செயற்பாடுகளில் தாமதம் உள்ளவராக இருப்பார்.
✍️பாடசாலை வேலைகளில் விருப்பம் காட்ட மாட்டார்.
✍️பாடசாலையை அடிக்கடி மாற்றுதல்.
✍️பிறப்பிலேயே நரம்புத் தொகுதியில் குறைபாடு உடையவராக இருத்தல்.
✍️சில உடற்குறைபாடுகள் இருத்தல்
✍️மனவெழுச்சி சிக்கல்கள் இருத்தல்
📌📌மெல்ல கற்கும் இயல்புடைய குழந்தைகளை கண்டறிய உதவும் வழிகள்.
✍️வகுப்பில் உள்ள இத்தகைய குழந்தைகளை இளம் வயதிலேயே கண்டுபிடித்தால் தான் அவர்களது நிலையை சரிப்படுத்த ஆசிரியர் மேற்கொள்ளும் முயற்சிகளினால் பயன் கிட்டும்.
✍️இத்தகைய மாணவர்களை பிரித்தெடுத்து இவர்களின் நுண்ணறிவு ஈவைத் தனியால் நுண்ணறிவு சோதனை மூலம் அறிய வேண்டும்.
✍️இவர்களைப் பற்றிய மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் ஒழுங்கு நடத்தை பற்றிய அறிக்கைகள் இவரது குடும்பம் சுற்றுப்புறம் ஆகியவை பற்றிய விவரங்கள் போன்ற எல்லாவற்றையும் சேர்த்து ஒவ்வொரு பிற்பட்ட மாணவனின் இயல்பு பற்றியும் அவன் வளரும் சூழ்நிலை பற்றியும் விவரமான ஓர் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.
✍️இவ்வறிக்கையை நன்கு ஆராய்ந்த பின்னரே அம்மாணவன் உண்மையாகவே பிற்பட்டவனா என்றும் எவ்வகை பிற்பட்டவன் என்றும் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
✍️ஆராய்ந்து அறியாமல் அவசரப்பட்டு ஒரு மாணவன் பிற்பட்டவன் என்று ஆசிரியர் முடிவுக்கு வருவது அம்மானவனின் பிற்கால வாழ்வையே பாழாக்கும் தீய செயலாகும்.
✍️பூரண வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
✍️சில உளவியல் அறிஞர்கள் கண் காது ஓசையுடன் தொடர்புடைய அங்கங்கள் மத்திய நரம்புத்தொகுதி என்பன பரீட்சிக்கப்படுவதுடன் உளவியல் சோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள்.
✍️வீட்டுச் சூழல் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படல், அவர்களது குடும்ப வரலாற்றில் கடுமையான நோய்கள் உள நோய்கள் சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை என்பதை அறிதல்.
✍️குடும்பத்தில் குற்றவாளிகள் யாராவது உள்ளனரா என அறிதல்.
✍️பிள்ளையின் கல்வி வளர்ச்சிக்கு அவர்களது வீட்டு சமூக கலாசார நிலையும் சூழலும் உதவும் விதத்தை ஆராய்தல் வேண்டும்.
✍️தாய் தந்தையர் உயிர் வாழ்கின்றமை இவர்களிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள் என்பது தொடர்பாகவும் ஆராய்தல் வேண்டும்.
📌📌 மெல்ல கற்பவரின் பண்பு நலன்கள்.
🔖உடல் ரீதியான பண்புகள்
✍️புலன் உணர்வில் பிற்பட்ட நிலை செயற்திறனில் பிற்பட்ட நிலை
✍️கேள்விக் குறைபாடு
✍️தசை இயக்கங்களின் ஒத்திசைவுக் குறைவு
✍️செயல் திறன் குறைவு
🔖உள ரீதியான பண்புகள்
✍️குறைவான நுண்ணறிவு (80ற்குள்)
✍️கருத்தியல் சிந்தனையின்மை
✍️காரண காரிய தொடர்பு சிந்தனையின்மை
✍️நினைவாற்றல் ஆக்கத்திறன் நுணுக்க சிந்தனை குறைவு.
✍️தாமாக திட்டமிட்டு செயல்படும் திறமை குறைவு.
✍️விரைவாக கற்க இயலாதவர்கள் கற்றலை வெகுவாக நினைவில் வைக்க இயலாமை.
✍️பொது அறிவும் முடிவெடுக்கும் திறனும் இன்மை.
✍️கவனவீச்சு குறைவு
🔖கல்வியியல் பண்புகள்
✍️மொழித் திறன் குறைபாடு
✍️கற்றலை பற்றி எதிர்நிலை மனப்பான்மை.
✍️மொழி வெளிப்பாட்டில் பின் தங்கியிருத்தல்.
✍️மனதிற்குள் படிப்பதை விட வாய்விட்டு படிப்பதை கடினமாக உணர்தல்
🔖சமூகம் சார் பண்புகள்.
✍️வகுப்பினரால் தவிர்க்கப்படுதலும் ஒதுக்கப்படுதலும்
✍️விருப்பத்தகாத சமூக பண்புகளைக் கொண்டிருத்தல்
✍️இயல்பான குழந்தைகளை ஒப்பிடும்போது மிகுதியாக பகற் கனவு காணல்
📌📌 கல்வியில் பிற்பட்ட மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கல்வி முறைகள்
✍️சாதாரணமாக பிற்பட்ட மாணவர்கள் ஆண்டு இறுதியில் மேல் வகுப்புக்கு அனுப்பப்படாமல் அவ்வகுப்பிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றனர் இது ஒரு நல்ல முறை என்று கூற முடியாது
✍️இவ்வாறு செய்வது கீழ் வகுப்புகளில் மெல்ல கற்கும் மாணவர்களின் தொகை அதிகரித்தலிலேயே முடியும்.
✍️இப்படி நிறுத்தி வைக்கப்படும் மாணவர்கள் தம் தன்மானத்தை இழந்து தாழ்வு மனப்போக்குடையவர்களாக மாறக்கூடும்.
✍️இது படிப்பில் அவர்களை மென்மேலும் பின்னடைய செய்யும் மெல்ல கற்பவர்களுக்கு என்று தனிப்பட்ட வகுப்புகள் நடத்துவது தான் சிறந்த முறையாகும்.
✍️தனியான மெல்ல கற்போர் பாடசாலைகளை விட சாதாரண பாடசாலைகளிலேயே இவர்களுக்கு தனிப்பட்ட வகுப்புகள் நடத்துவது சிறந்தது.
✍️ஏனெனில் மெல்ல கற்கும் மாணவருடன் பழகுவதால் அவரது தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
✍️மேலும் குறிப்பிட்ட ஒரு பாடத்தில் பிற்பட்ட மாணவர்களை அப்பாடத்துக்கு மட்டும் மெல்ல கற்போர் வகுப்புக்கு அனுப்புவது எளிது.
✍️சிறப்புப் பயிற்சி ஆசிரியர் மூலம் தனிப்பட்ட கவனம் மற்றும் சிறப்புக் கூடுதல்கள் வழங்குதல்.
✍️இணைந்து கற்றல் மூலம் மற்ற மாணவர்களின் உதவி பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.
✍️செவிமொழி, வீடியோ, விளையாட்டுகள் போன்ற பல்வேறு கற்றல் முறைகளை பயன்படுத்துதல்.
✍️கற்றலுக்கான அமைதியான மற்றும் சோம்பல் இல்லாத சூழலை உருவாக்குதல்.
✍️இதன் மூலம் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் கல்வியில் முன்னேற்றம் காணவும் உதவ முடியும்.
உங்கள் கருத்துகளைப் பின்னூட்டமிடுங்கள். கூடவே, எனது இந்தத் தளத்தை ஏனையோருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். இனிவரும் நாட்களில் மாணவர் உளவியல் சார்ந்த பதிவுளை இடுவதற்கு எண்ணியிருக்கிறேன்.
-தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்
B A (THAMILOLOGY) | B A (HONS) TAMIL AND TAMIL TEACHING (R) | DIP IN TAMIL | LANGUAGE FACILITATOR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக