சின்னஞ்சிறு தவறுசெயின் - நீ
செய்தது பெருந்தவறென்று
சிரிப்பிழக்கிறாய்! - உன்
புன்னகை கண்டிட
பெரும் ரணங்களுடன்
கொஞ்சிக்குலவும்போது
பறந்துவிட்டது சிரிப்பென்கிறாய்!
பணியில் இமாலயமெட்ட
பரந்துவழியும் நீர்மொட்டுக்களுடன்
சிலபோது எனக்கு
பெருங்கோபம் வருவது தப்பு!தப்பு!!
தப்புணர்ந்து மண்டியிட்டு
உன்னிடம்
தவறுக்கு வருந்தும்போது
நீ
பறந்துவிட்டது நகையென்கிறாய்!
உன் புன்னகைக்காக
பொன்னகைகள் தேடிடவே
ஆராத்துயரொடு நானிங்கு!
சில உண்மைகள்
சிலபோது உன்
நெஞ்சறைகளில்
ஊடுருவுவதில்லை!
என்
உயிர்க்குருவி
கூட்டைவிட்டுப்போனநேரம்
நீ ரணமாவாய்!
ஏது புண்ணியமடீ
அப்போது?
கற்பனைச் சிறகடித்து
கொஞ்சம் என்னைப்பார்!
என் கொச்சைமொழிகளை
செவிப்பறைகளில் இட்டு
அலசிப்பார்!
உண்மை புரியும்!
நன்மை விளையும்!
என்றும்
சிட்டுக்குருவிக்கூண்டில்
இதமாய் நாமிருக்கலாம்!
என்கூற்றுக்கள்
ஏறாது செவியிலென்றால்
என்மடைமையை
என்னென்பேன் நான்!
-கலைமகன் பைரூஸ்
இலங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக