மனதெங்கும் ஒளிபடர....
- கலைமகன் பைரூஸ் -
பொய்மை எங்ஙனும் விரியவிரிய
பேதை மனங்க ளுயரும் இங்கு-
செய்கைகள் விசும்பன்னதாய் உயர உயர
சகந்தானும் புளகாங்கித மடையும்!
தன்னையே உயர்த்தித் தள்ளத்தள்ள
தனிமரமா யொதுங்கும் உள்ளம்
பெண்மையை மதித்து நடக்க நடக்க
பேராளனா யுலகில் உலவும்!
நன்மையே செய்யச் செய்ய
நாவிலினிமை யூறும் வெறும்
புன்னகையே உதிர்க்க வுதிர்க்க
பொலிவிழந்த உளம் நோகும்!
ஏழ்மைக்கு கைகொடுக்க கொடுக்க
ஏற்றந்தா னுண்டாகும் இங்கு-
பாழ்பட்ட மனங்களில் கருமை நீங்க நீங்க
பகலவ னொளியாய் உள்ள மொளிரும்!
நற்றமிழினை யேற்ற ஏற்ற நிலம்
நனிசிறந்தே உயரும் காலம்
உற்றதுணையை நெருங்க நெருங்க
உண்மையை உலகினுக் கோதும்!
மறையிறையை ஏற்ற ஏற்ற
மனதெங்கும் ஒளிபடரும் நிதம்
கறைநீங்கி வாழ வாழ மனிதம்
ககனமீதெங்கும் ஒளிர்ந்தே செல்லும்!
நன்றி தினகரன் வாரமஞ்சரி 2012/09/23
http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/09/23/?fn=d1209231
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக