ஒண்ணாதார் இன்னாரே! (கவிதை)
பாசந்தான் காட்டி பரிதவிக்க விட்டே
தேய்ந்தெழும் மதி யன்னதா யிருந்து
சீர்பணி செய்வார்க்கு செய்ய விடாதார்
சீரும் பணியன்னதாய் கருமமே செய்வர்
சீர்அறு விடமன்னவர் இவரில் மயங்கி
சீரழிவாரு முளர் ஒண்ணாதார் இன்னாரே!
குற்றம் செய்வார் குவலயத்து அறுப்பர்
கூனாமலே மனிதத்தை மாடென அறுப்பர்
நாற்றம் இவர் செயல்கள் சொல்லிட
நாறு மிவரும் ஒண்ணாத இன்னாரே!
சற்றும் தயங்காதார் இவர் சலிக்காது
சட்டெனவே பாவங்கள் பன்னூறு செய்வர்
முற்றும் துறந்தாலும் கழுவாயை வேண்டார்
மூடரா மாறாது ஒண்ணாதாரைக் காண்பீர்!
சிரசு மீதமர்ந்து குருதி பவ்வியமாய்
சாலவருந்தும் பேனன்னார் இன்னார்
பெரியார் என்று எண்ணி மாளாமல்
பார்ப்பீர் இவர் ஒண்ணாதார் காண்பீர்!
சத்தியங்கள் பலசொல்லி சேர்ப்ப ரெம்மை
சத்தியமேதென்று உன்னாது சீரழிவம்நாம்
பைத்தியம் நமக்கில்லை தெளிவீர் இன்னார்
பாரின் ஒண்ணாதார் என்பதை அறிவீர்!
பல்லிளித்து முத்தங்கள் தருவார் பின்னே
பல்லிளித்து முத்தம் தருவதாய் கடித்திடுவர்
சொல்லிச் சொல்லி தேய்ந்தது கரங்கள்
சகத்தில் ஒண்ணாதாரை காண்பீர் நீர்!
-‘கவித்தீபம்’ கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக