
பன்னூலாசிரியர் திக்குவல்லை ஸப்வான்
கலைமகன் பைரூஸின் கவினுறு கவிதைத் தொகுப்புக்குக் கருத்துரை வழங்குவதில் பெருமையடைகின்றேன். கவித்துறையில் அன்னாருக்கு உள்ள முதிர்ச்சியை, உயர்ச்சியை இக்கவித்தொகுப்பு கட்டியம் கூறி நிற்கின்றது. கவி இலக்கணத்தைக் கரிசனையோடு காத்து அவர் படைத்துள்ள கவிதைகள் அனைத்தும் அற்புதமான சொற்புதையல்கள்.
கவிமரபு தெரியாமல் வார்த்தைகளைக் கோர்த்து, சிதைத்துப் புதைத்து கதைப்போர் மத்தியிலே கவிப்போர் புரிந்து தனித்துவமாய் மிளிர்கின்றார் கலைமகன்.
அன்னார் கல்வி பயிலும் காலத்திலிருந்தே தமிழார்வம் மிகுந்தவர். அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் தனது 125 வது வருட பூர்;த்தி விழாவைக் கொண்டாடிய காலகட்டம் அது. தொடர்ந்து மூன்று நாள் விழா. தென்னிந்தியக் கலைஞர்கள் கலந்து சிறப்பித்த மாபெரும் விழா. நான் நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கொண்டிருந்தேன். அப்போது கலைமகன் பைரூஸ் கையில் கவிதைத் தாளோடு என்னை நெருங்கினார்.

‘உங்கள் விழா பற்றி கவிதை புனைந்து வந்துள்ளேன். பொழிய சந்தர்ப்பம் தருவீர்களா?’
என்று கேட்டார். அவரது சிறிய தோற்றம், மாணவர் பருவம் இவற்றைக் கண்டு விழா ஏற்பாட்டுக் குழுவினர் தயக்கம் காட்டினர். துரு துருவென்று அவரது கண்கள் பேசிய கவிதை திறமையை பறைசாற்றுவது போல் தோன்றியது. உடனே நான் சந்தர்ப்பம் வழங்கினேன். கணீரென்று வெண்கலக்குரலில் அவர் முழங்கிய கவிதை அனைவரையும் அசத்தியது.
இந்தக் கலைமகனை எவருமே இனங்காணத் தவறிவிட்டார்கள் என்ற உறுத்தல் அப்போது என் மனத்தை பெரிதாக அரித்தது. என்னோடு சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் கலைமகனுக்கு நிலையான ஒரு இடத்தை வழங்க நான் பின்வாங்கியதில்லை.

தனது திறமைகள் மறுக்கப்பட்டபோது இந்தக் கலைமகனால் குமுறல்களைத்தான் கவிதைகளாக அரங்கேற்ற முடிந்தது. நெற்றிக்கண்ணை திறக்க முடிந்தது. எரிமலையாக வெடிக்க முடிந்தது.
‘யார் சூரியன் புகாத இடத்தில் எல்லாம் புகுந்து பார்க்கின்றானோ… பார்த்து அனுபவிக்கின்றானோ… அவன்தான் உண்மைக் கவிஞன்’ என்;பது ஒரு அறிஞர் கருத்து.
‘கலைமகன் கவிதைகள்’ தொகுப்பை நோக்கும் போது கலைமகன் தொட்டுக் கூறாத இடங்களே இல்லை என்ற அளவுக்கு எல்லாவற்றையும் எட்டிப்பிடித்து வாசகர் மனதையும் தொட்டு நிற்கின்றார்.
கவிதைகளில் சந்தம், மரபு, புதுமை, இனிமை, வளமை, அழகு போன்றன அணிவகுத்து நிற்க வேண்டும். அதற்கு எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றை நன்கு உணர்ந்திருக்க வேண்டும். கலைமகன் கவி இலக்கணத்தை நன்கு அறிந்த பின்பே கவிதைகளைப் படைத்துள்ளார் என்பதற்கு பல பாடல்கள் ஊன்றிய சான்றாகும்.
பதச்சோறாக ஒன்றைத் தருகின்றேன்.
‘யாப்புக் கவிதையொடு புதுக்கவியும் கற்றேன்
காரிகையுந் தண்டிய லங்காரமுங் சுவைத்தேன்
ஒப்பிலா மணிகள் பலவுங்கற்றேன் - ஆயின்
ஒன்றெனக் கென கவியமைப்புந் தெளிந்தேன்’
கலைமகனின் எண்ணமும் செயலும் ஒன்றாக கைகோர்த்து பயணித்துள்ளன என்பதை பல பாடல்கள் நிரூபனம் செய்கின்றன.
ஒரு கவிஞன் சமுதாயத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும். அத்தோடு தான் வாழும் மண்ணின் நடப்புக்களை எடுத்துக் காட்டுபவனாக மிளிர வேண்டும். பாரதியார் கூறிய வலிமை, தெளிவு, மென்மை, ஆழம், நேர்மை, ஓர்மை பாடல்களில் தொனிக்க வேண்டும். கலைமகனின் ஏராளமான பாடல்களில் இவற்றை நுகர முடிகின்றமை சிறப்பு.
‘மண்ணெய் விளக்கிலே ஆசைத் தமிழை…’ கற்ற ஆர்வத்தை ஆதங்கமாகக் கூறி, தனக்கு வழிகாட்டிய ஒளிவிளக்குகளை எமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார்.
‘மகனே!’ என்ற கவிதை கவிஞர் சமுதாயத்தில் முகங்கொடுத்த அவலங்களை புடை போட்டுப் பாடும் சோக கீதம். மனதை நெருடிச் செல்லும் அற்புத வார்ப்பு அது.
ஒரு கவிஞனுக்கு இயற்கையோடு நெருங்கிய பிணைப்பு கட்டாயம் தேவை. தமிழின் அனைத்துக் காவியங்களும் இயற்கைக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் தனித்துவமானது. பாரதியார் நிலாவையும், வானத்து மீனையும், காற்றையும் ஒன்றாக்கி அள்ளிப் பருக முனைந்தார். பாரதிதாசன் அழகின் சிரிப்பில் இயற்கையை விருப்போடு நெருங்கினார். அந்த வகையில் இக்கவிதைத் தொகுப்பில் கவிஞர் தந்துள்ள இயற்கையோடு ஒட்டிய கவிதைகள் அனைத்தும் அபாரம். ‘ஈழத் திசை பரப்பு’ என்ற கவிதையை பல தடவை அசை போட மனம் இசைகின்றது.
மரபுக் கவிதைகளை நினைத்தவர்களெல்லாம் எழுத முடியாது. திறமை, ஆற்றல் ஆகிய இரண்டும் தேவை. அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை யாவும் பேணப்பட வேண்டும். அதனால்தான் அக்காலக் கவிஞர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புக் கிட்டியது. இன்றுவரை அவை நிலைத்து நிற்கின்றன. ஆனால் இன்று புற்றீசல்கள் போல கவிதைகள் வெளிவருகின்றன, ஆனால் அவற்றில் வளர்ச்சியோ, உயர்ச்சியோ, உணர்ச்சியோ எதுவும் கிடையாது. எந்தவொரு விடயத்தையும் ஆழ்ந்து, அவதானித்து எழுதுவதில்லை. வித்தியாசமான பார்வை ஊடுருவிப் பாய்வதில்லை. குறைந்த பட்சம் தரமான கவிதை நூல்களை புரட்டிப் பார்க்கும் பரிசயம் கூட இவர்களிடம் இல்லை. இந்த லட்சணத்தில் கவிஞர்கள் என்று முன்னடை பொருத்தி தொகுப்புக்களை வெளியிட்டுத்தள்ளுகிறார்கள். ஊடகங்களின் அபரிதமான ஆதரவு ஒரு பக்கம். நூலினைக் கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் சனங்கள் மறுபக்கம். அது போதாதென்று பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு. அதேவேளை இலக்கியத் தரம் மிகுந்த நூலினை வெளியிட்டு அழைப்பு விடுக்கும் காத்திரமான கவிஞன் வெறும் நாற்காலிகளுக்குத்தான் உரையாற்றுகின்றான், கவிமழை பொழிகின்றான். இது விசனம் தரும் விடயம்.
எதை எழுதினாலும் கவிதை என்று தூக்கிப் பிடித்துக் கொண்டாடும் இன்றைய நிலையில் ‘கலைமகன் கவிதைகள்’ தரமாகத் திகழ்கின்றன. வெறும் சொற் சிலம்பாட்டம் புரிவோர் மத்தியில் பொற்புதையலாக மின்னி நிற்கின்றன. நபி புகழ் தொட்டு அனைத்து விடயங்களையும் கவி வழு இன்றி நயக்கத்தக்க விதத்தில் கவிஞர் தந்துள்ளார்.
அழகு மிகுந்த ஒரு கற்சிலையை உருவாக்க அபரிதமான ஆற்றல், நுணுக்கம், கலைத்துவம், அறிவு அனைத்தும் தேவை. கவிதை எனும் பொற்சிற்பத்தை செதுக்குவோரிடம் அவை ஒன்றிணைந்து நின்றால்தான் காலத்தால் பேசப்படும், கருத்தால் நேசிக்கப்படும்.
ஏரெழுபது என்ற நூலில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வடித்த இப்பாடல் காலத்தால் அழியாதது. உழவர்களின் சிறப்பைப் பாடும் உன்னதப் பாடலிது.
‘கார் நடக்கும் படி நடக்கும்
காராளர் தம்முடைய
ஏர் நடக்குமெனில் புகழ்சால்
இயலிசை நாடக நடக்கும்
சீர் நடக்கும் திரள் நடக்கும்
திருவளத்தின் செயல் நடக்கும்
பார் நடக்கும் படை நடக்கும்
பசி நடக்க மாட்டாதே!’
கம்பரின் இதயக் கருத்தை இன்றைய புதுக் கவிஞன் ‘சேற்றிலே நாம் கால் வைக்காவிட்டால் சோற்றிலே நீங்கள் கைவைக்க முடியாது’ என்று இரண்டு வரிகளில் கூறி எம்மை வியக்க வைத்தான். அதனையே நமது கலைமகன், ‘பொற் கதிர்கள் வளர்ந்தோங்கி நம் பொருளா தாரமும் வளர்வது தானெப்போ?’ என உழவர்களுக்காக ஆதங்கப்படுகின்றார். இதுதான் கவிஞனிடம் இருக்க வேண்டிய ஆற்றல். அது கலைமகனிடம் நிறையவே இருக்கின்றது. அதனை இலக்கிய உலகம் மட்டுமல்ல, சமுதாயமே இனங் காண வேண்டும் என்பது என் வேணவா!
கலைமகன் மற்றவர்களுக்காக உருகி ஒளிகொடுக்கும் மெழுகுவர்த்தி போன்றவர். அதற்குப் பொருத்தமாக அட்டைப்படம் அர்த்தமுள்ளதாக கலைமகனால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மெழுகுவர்த்தியின் படைப்புக்கு கைகொடுத்து மேலும் பல படைப்புக்கள் வெளிவர மெருகூட்டுவோம்.
திக்குவல்லை ஸப்வான் ‘மகாதீர்த்தாபிமானி’
பிரபல சிறுகதையாசிரியர், கவிஞர், மீள்மொழிவாளர்
23.11.2008
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக