It It கலைமகன் கவிதைகள்: தலைவருள் தலைமகனார்! - கலைமகன் பைரூஸ் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

வியாழன், 31 அக்டோபர், 2019

தலைவருள் தலைமகனார்! - கலைமகன் பைரூஸ்

விண்ணைப் படைத்து மண்ணைப் படைத்து
வீறுடை பற்பலவும் வியப்பாய்ப் படைத்து
தண்ணளி முஹம்மதரை தரணிக்குத் தந்த
தயாளன் அல்லாஹ்வே உன்நாமம் உரைத்து..

இருள்படர்ந்த ஜாஹிலியாக் காலந் தனிலே
இருள்நீக்க அருக்கனாய் வந்துதித்த வல்லள்
அருமந்த செயல்தனை நான்பாட இறையே
பொருளுடை நற்றமிழ் என் நாவினுக்குத்தா!

சட்டத்தில் உயர்நிலையில் நிற்கும் நற்கவி
சளைக்காது சீரிளமைத் தமிழுக்கும் தாவி
முட்டாது முனியாது நற்பணி தான்செய்யும்
முத்தான தமிழ்க்கவி ரஷீதெம் இம்தியாஸே

வித்தாக தமிழ் முத்தாக சத்தாகக்
கொத்தாக நற்றமிழில் நபிகள் புகழ்
முத்தாகக் கொணர்ந்து கவிபாட வந்துள
முத்துநபி சரித்திரம் பாடுவோம் வாரீர்

பன்னூறு பிரச்சினைகள் பாரெங்கும் இன்று
பரவியே வாட்டுது தலைமைதான் சீரின்றி
விண்ணுயர்ந்த போர்களும் பனிப் போர்களும்
விநாடிக்கு விநாடிதான் சாய்க்கின்றன மனிதம்

அன்றாட வாழ்விற்கு வழியேது மிலாது
ஆள்வோரால் வாழ்வினை நகர்த்துதற் கியலாது
வன்புமிக்கோர் வாழ்வதனால் நிம்மதி யிலாது
வீணாகத்தான் கழிகிறது தலைமைத்துவ மின்று

நாட்டு மக்களி லக்கறையிலை இல்லவேயிலை
நினைப்பன வெலாம் தம்பைக்கற்று நிரப்புவதே
வீட்டுக்கும் குடும்பத்திற்குமே எலாமெலாம் ஈது
விதண்டாவதமா இல்லவே இல்லை அறிவீர்

நபிகணாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
நானிலத்திற்கு நற்றலைவர் அன்று மின்றும்
அபிநவ நற்றலைவர் அவரெனவே அன்றை
அராஜக அசுரவரசர்களும் ஏற்றனர் மேலே....

அல்லாஹ்வின் அருமந்த அண்ணலான போதும்
அறபுலகு மீட்சிபெற அருமந்த தலைவரானார்
எல்லோரும் ஏற்றம் இவராலே என்றன்று
எடுப்பாகப் பின்சென்றார் ஏகனருள் பெற்றார்

சொல்லாலும் செயலாலும் தலைமை யென்றாலேது
சொல்லாமல் செயலினிலே காட்டிய நன்னாதர்
வில்லாகத் தைக்கின்ற வார்த்தைகள் சொன்னாரும்
வியப்பாக அவர்சுவட்டை பின்தொடர லானார்

நீரினிலும், நிலத்தினிலும் ஏன் பொருளாதாரத்தினிலும்
நயவஞ்சகம் செய்தே நாட்டை யழித்தொழிப்பார்க்கு
பெருமானார் நபிகணாதர் வாழ்வினிலே உண்டு
பெரிதாக நல்லுபதேசம் பாரினியும் ஏற்க....

சக்காத்தாய் சேர்த்த பேரீத்தம் பழங்கள்
சரமாரியாய்க் குவிந்து முன்றலிலே இருக்க
தக்கசிறு பேரர்கள் ஹஸன்ஹுஸைனி லொருவர்
தெரியாமல் வாயிற்றான் போட்டுவிடக்  கண்டார்

கடுங்கோபம் தலைக்கேற பக்கத்து வந்து
கடிவார்த்தை தானுரைத்தார் பேரர்களை நோக்கி
'கனியிவை ஸக்காத்து ஏழைகளதுவே  -நம்குடும்பம்
கருத்தாக உண்ணத்தகா' என்றுரைத்தார் முறையே

அன்றொருநாள் அஸர்தொழுகை சீராக முடித்து
அவசரமாய் வெளிச்சென்று சற்றைக்குள் வந்தார்
பின்னேதெனவே ஸஹாபாக்கள் வினவிடவே நல்லார்
'தங்கக் காசினைப் பகிர்ந்தளிக்க சென்றேனென்றார்

ஏழைகட்கு சொந்தமான பணம் மனையிருக்க
என்மனந்தான் பதறுது இரவெங்ஙனம் தூங்கவென்று
என்றுரைத்த நம்தலைமகனார் முஹமதரின் வாழ்வில்
என்றும் கற்றிடத்தான் பலவுண்டு பாரீர்!

ஸஜ்தாவில் நம்நாதர் இருக்க ஒட்டகக்குடர்கள்
சடுதியாய் வீழ்ந்தன அவர்கழுத்தி லன்று
தேஜஸ்தான் அவர் முகமென்றும் கடுப்பில்லை
தலைவரவர் குணங்கள் தலைமையின் மகுடம்

பொய்யுரையா நற்றலைமை பலம்மிக்க நற்றலைமை
பயமின்றி களத்துக்குத் த் தானாகச் சென்று
ஒய்யாரமாய் வாகை சூடியேவந்தார் - இன்று
ஓலமிட்டுத் புகழ்பெறுவோர் எண்ணட்டு மிதனை

நிலைதளராத நற்றலைவர் நபிகணார் நீணிலத்துக்
குலக்கொம்பர் நற்றலைமைத் தலைமகனார் அன்றோ
களப்பெருமை உளப்பெருமை யாசிக்க ஞாலத்து
கனவான்கள் பேர்கொண்டோர் துடித்தெழுக இன்று..

உத்தமத் தூதர்நபி முஹம்மதுவின் சரிதைக்குள்
உன்னதமாம் தலைமைத்துவ பண்புகள் பலவுண்டே
தித்திக்கும் அவர்வாழ்வை திறந்தே பார்ப்போம்
தரணியினின் உயர்வாழ்வு தரமுற்றோங் கிடவே


- மதுராப்புர, கலைமகன் பைரூஸ்

(மீலாத் கவியரங்குக் கவிதை - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், முஸ்லிம் சேவை

கலாபூசணம், சட்டத்தரணி, கவிஞர் ரஷீத் எம். இம்தியாஸ் தலைமைதாங்கிய கவியரங்கில் கலந்துகொண்டோர்:

1. கவிஞர் ஜெம்ஸித் அஸீஸ்
2. கவிதாயினி கமர்ஜான் பீபி நூருல் ஹக்
3. கவிதாயினி இராணி பெளஸியா


 
 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக