அகவை நாற்பத் தாறாயிற்று அடியேன்
அடிநிற்க வைத்த இறையே புகழுனக்கு
நிகரிலை இறையே உன்னன் பினுக்கு
நித்தமும் நற்றமிழால் புகழ் உந்தனுக்கு!
அடைவுகள் பலவடைந் திடச்செய் யிறைநீ
அன்பினைச் சொரிந்திடென் செல்வங் கட்கு
அடைந்தின் புற்றிடச் சென்றிட மக்கா
அன்பிறையே அருள்சொரிநீ நற்பொரு ளீட்ட!
அகதவ னுனைத் துதிசெய்தும் அன்பொடு
அணைத் துறவுக ளாெடுமகிழ் தொன்றிக்க
ககனத் தொளியாய் அறிவினில் ஒளிர்ந்திட
காவலனே அருள்சொரி யென்பிள் ளைகட்கு!
உன்னழைப் பெக்கணம் அறியேன் அருளே
உனக்கெற் றாற்போல் வாழ்ந்திட அருளே
என்னுள்ளத் திலன்பினை விதைத்தி டருளே
ஏற்றங் கொள்நற் சுவனமே கதியருள்!
பதியினைச் சேய்களை நடத்திடு நல்வழி
பதியது ஜென்னத் திலொன் றாக்கிடு
உதித்துள அகவையில் அன்பினைச் சொரிநீ
உனைத்தொழு தோதியே களிகொள வருள்நீ!
---
பாசந்தான் கொண்டு பலவாறு புகழ்ந்தேத்தி
பாக்கள் பலவெனக் களித்து களிகொண்டு
நேசத்தை முகநூலில் நேர்த்தியாய் தந்திட்ட
நட்புக்கள் எலோர்க்கும் நன்றி தானுரைத்தன்!
- தமிழன்புடன்,
இஸ்மாயில் எம். பைரூஸ்
(மதுராப்புர, கலைமகன் பைரூஸ்)
26.01.2020
(வெலிகம - மதுராப்புர அஸ்ஸபா க.வித்தியாலத்தில் 2020.01.22 அன்று நடைபெற்ற, இல்ல விளையாட்டுப் போட்டியின் அறிவிப்பாளர்களில் ஒருவராக நானும் கடமையாற்றினேன். அவ்வமயம், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களில் ஒருவரான திரு. அலி அவர்களால் நினைவுச் சின்னம் எனக்கு வழங்கி கெளரவிக்கப்பட்ட கணமிது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக