இன்று, மரபுக் கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டெண்ணக் கூடியதாகவே உள்ளது. மரபுக் கவிதை எனும் பெயரில் அவர்களில் பெரும்பாலானோர் எழுதுகின்ற பாடல்களின் யாப்பு இருக்கின்றதா?எனக் கேட்டால் .... விடையாக வருவது இல்லை என்பதே. இலங்கை எழுத்தாளர்களில் மரபின்பால் ஈர்ப்புக் கொண்டு,காப்பியங்கள் படைத்தவர்களும் இல்லாமலில்லை. எனதாசான் 'காப்பியக்கோ' ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் அவர்கள் பல காப்பியங்களை தமிழ்கூரும் நல்லுலகிற்குத் தந்து, தனக்கென ஓரிடத்தை ஒதுக்கிக் கொண்டுள்ளார்.
சீரிய மரபின் பல்வேறு பாவமைப்புக்களில் கவிதை பாடுவோரில் ஒருசிலரின் கவிதைகள் என்னுள்ளத்தை தினமும் ஈர்க்கின்றன. இந்தவகையில் நண்பன், மரபுக் கவிஞன், மரபினை நன்கு கற்றுத்தேறிய மெய்யன் நடராஜனின் 'நதியென உதவு' கவிதையை இன்று வாசிக்கக் கிடைத்தது.
உள்ளத்தை ஈர்க்கும் கவிதா சந்தம்... எனது பக்கத்தில் பகிர்வதற்கு வழிவகுத்தது.
நீங்களுந்தான் படித்துப் பாருங்களேன். உங்கள் கருத்துக்களையும் பகிருங்களேன்...
சமரிட முனைகிற சதிசெய லதைவிடு
சமரச விதைகளை சடுதியி லெழவிடு
சகமிது அமைதியி னொளிபெற உலவிடு நிலவாயே
எமனென வுயிரதை எடுமொரு இழிவழி
எதிரியு மெதிரிட எகிறிடு மெனிலது
இருபுர மழிவுற வழிசெயு மதைவிடு எளிதாயே
எமதொரு உறவென இருகர மணையுனை
எதிரிடு மெதிரியு மிளகிட வழிவிதி
எரிகணை விடுவதை தடைசெயு மனமெடு இனிதாயே
தமதுயி ரதுநிக ரெனபிற ருயிரறி
தலைமையி னுயரிய தகைமையை தினமறி
தவறிய வழிமுறை தனைவிட வழிசமை அழகாயே
சமநிலை தவறுவ தழகிலை யுணரதை
சதிசெயு மவசிய முறுவது சரியிலை
சரிபிழை எதுவென சரிவர அலசிட விளைவாயே
மமதையி லெழுகிற முடிவுக ளழிவினை
மனுகுல மெதிரிட விடுவது முறையிலை
மதிதரு மொளியுள மனமெடு தெளிவுறு அதுமேலே
கமகம மணமிடு கிறமல ரெனுமொரு
கவினுறு உலகிது அழிவுற நினைவது
கதிரவ னொளியினை திரையிட லதுநிக ரெனலாமே
நமதெனு மொருமையை நயமொடு பயிரிடு
நலமென விளைவதை நரகிலு மெழவிடு
நரிமன செயலறு நதியென உதவிடு எழிலோடே
(ஒற்றிலா வண்ணம்)
மெய்யன் நடராஜ்.
26-01-2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக