புதன், 13 அக்டோபர், 2010
நம்பிக்கை வை!
வாழ்க்கை
இது மானுடனுக்கு மட்டுமல்ல
ஏனைய சீவராசிகளுக்குந்தான்!
திமிர்பிடித்த
ஏறுகள் உன் மேலேறி
உனை மிதிக்க வரும்...
எடுப்பார் கைப்பிள்ளையாய் கொண்டு
மேலே தூக்கி கீழே போடுவர்
மிட்டாய்கள் காட்டி
தலையைத் தடவி
கண்மயிரைப் பிடுங்குவர்...
உன் திறமைகளை
எள்ளி நகையாடுவர்
உன்னில் நீ நம்பிக்கை வை!
உன்னை நம்பு
உனக்குள் ஆயிரமாயிரம்
வேர்கள் முளைகொள்வதைத் தெளி!
நானோ நன்குபட்டவன்....
சமூகம் - சகபாடிகள்
நாடு - பெரியவர்கள் என்போர்
பேச்சளவில் உயரப் பேசுவர்
பூச்சியம்.... எல்லாம் பூச்சியம்...
உன்கையெழுத்தைக் கண்டு
உன் தலையெழுத்தைச் சொல்லும்
சூன்யங்களும் உண்டு!
சுரமில்லா கீதங்கள் கொண்டு
உனையேற்றிப் புகழ்வர்
ஈரமில்லா நெஞ்சுடையாரின்
ஈசல் வார்த்தைகளுக்குள்
உனை இழக்காதே!
வறுமை
உன்னோடு ஒட்டிப் பிறந்தது
அதற்காக
எருமைகள் குட்டையைக் குழப்புவதை
ஏரெடுத்தும் பாராதே!
உன்னில் நீ நம்பிக்கை வை
நம்பி நீ எதிலும் கைவை!
வாழ்க்கையில் சறுக்காதவர்கள்
எவர் உளர்? புன்னகை
உன்னில் புன்னகை மலரும்
இன்று
உயரப் பேசப்படுபவர்கள்
அன்று
துன்பத்தின் சிகரத்தில்
ஊசிக்கயிறில்
நடந்து
சிறந்து பேறுகண்டவர்கள்!
உன்னில் நம்பிக்கை வை!!
உன் மயிர்பிடுங்கி
உனைத் தரமிறக்கி
உன்னிதயத்தை
சல்லடையாக்கி
சந்தர்ப்பம் வரும் போது
உனை மேலே அனுப்பிட
உள்ள சாரார்பற்றி
தெள்ளத் தெளி!
வாழ்வில் சறுக்கல்களுக்கு
துவண்டு விடாதே!
உனை நம்பி கிழக்கில்
ஒளிக்கீற்றுக்கள் வருவதைப் பார்!
பார் ஒருநாள் உனை ஏத்தும்!
ஏன்
உனை இழிந்தோர் கூட
உன்பாதம் போற்றி நிற்பர்!
-கலைமகன் பைரூஸ்
இலங்கை.
நன்றி
முத்துக்கமலம்
[http://www.thinakaran.lk/vaaramanjari/2010/11/21/?fn=d1011211/ - தினகரன் வாரமஞ்சரி]
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக