இருளடைந்த சமுதாயத்தை வெளிக் கொணர
எழுச்சிமிக வேண்டு மென்றோ - இன்று
இருப்பாரெலாம் பொத்திவைத் ததையே ஏற்றி
எரிதனலாய் மக்களுக் கீவா ரின்று
மருட்சியினால் மாந்தரெலாம் வாய் புதைத்து
மறையவன்விதி இதுவென்று ஏங்கி நிற்பர்
தருமந்தான் தலைகவிழ்ந் துள்ளதனா லிங்கு
தலைத்தோங்க முடியவிலை நீதி யெங்கே?
---------
வேசங்கள் பலபுனைந்து தலைவ ரெல்லாம்
விழுப்பந்தரா கதைகளையே சொல்லி நிற்பார்
நாசத்தை யுண்டாக்கி பைதனை நிரப்பி
நார்நாராய் மக்கள்மனம் கிழித்திடுவா ரன்றோ
தேசத்தில் உளம்கிழ்ந்து வாழத்தான் முடியலை
தீத்தரகரெலாம் காசினிலே குறியாய் நிற்பார்
பாசந்தான் யார்க்குமிலை பாவப்பட்ட ஜென்மம்
படைத்தவனை யேநம்பி ஏந்திநிற்பர் கரம்!
---------
போர்ப்பரணி கொட்டத்தான் முடியவிலை இங்கு
புண்கொள் வார்த்தைசொல்லி ஏற்றிடுவார் கூண்டில்
ஊரூராய் உண்மைநிலை உரைத்திட்ட போதும்
உண்மைநிலை இதுவென்று சொல்வா ராருளரோ?
சர்ப்பம்போலவே இவனென்று சடுதியா யெழுந்து
சத்தியமாய் குரல்வளையை நொறுக்கிடு வாரே
கார்மேகமாய் உதவிடுவார் தனைக் காண
குவலய மிங்கு கொடுத்துவைக்க வேண்டுமோ வரம்!
---------
நெஞ்சமதில் நின்று நிலைக்கின்ற நற்செயல்கள்
நீண்டுவிடின் பசுமரத்தாணியென நிலவும் வாழ்வு
நஞ்சுமனத் தோடிங்கு நின்று விடுவ தாயின்
நாசந்தா னுண்டாகும் நிலமுந் தேயும்
பஞ்செனவே தீப்பற்றும் ஏழைமனம் நோகின்
பாந்தள்கள் புடைசூழ நிலமிங்கு நரகம்
கொஞ்சும் தமிழனைய நல்லா ரிங்கு
கேடின்றி வாழுதற்கு செயவேண்டும் கருமம்!
---------
கொம்புத்தேன் ஆசையுடன் ஏங்கி நிற்கும்
கூழுக்கும் வழியில்லா ஏழைச் சனத்திற்கு
நம்பிக்கை ஒளிக்கீற்று உதய மாகி
நெஞ்சத்தில் நீடுழி நிற்க வேண்டும்
நம்பினோம் கதியிழந்தோம் எனும்நிலை மாற
நேசக்கரம் நீட்ட வேண்டும் நல்லோ ரின்றே!
பொம்மையாட்டும் பெரியோ ரிங்கு உண்டு
பரிதவிப்பார் மேலெழச் செய்வா ரெப்போ?
---------
உறுமீன் வருமட்டும் வாடிநிற்கும் கொக்கெனவே
உயர்ந்துவரும் விலைவாசி குறையுமட்டும் மக்கள்
பொறுத்திருப்ப ரெத்தனை யெத்தனை நாட்களோ
பொங்கி யெழுவர் பயனிலை கண்டேன்
பொற்பாதம் போற்றி நிற்பர் மாந்தரிங்கு
பசுமை நிறைந்தக்காலே மண்ணில் - இலையேல்
சொற்களும் நீங்கி பிச்சையே ஏந்தி
சனமிதுவா எனப் பார்கேட்டிட நிற்பாரே!
------- 00000 --------
- கலைமகன் பைரூஸ்
இலங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக