It கலைமகன் கவிதைகள்: 'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு பன்னூலாசிரியர் கலைவாதி கலீலின் அணிந்துரை

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு பன்னூலாசிரியர் கலைவாதி கலீலின் அணிந்துரை

கவியிலக்கணங்களுடன் கூடிய கலைமகன் கவிதைகள்
முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல்

கவிதை என்பது வட்டமிட்டுச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி போன்றது. வண்ணத்துப் பூச்சியின் சுயாதீனப் போக்கும் அதன் வேகமும் விறுவிறுப்பும் வித்தியாசமான அசைவுகளும் அழகும் மெலிதான நறுமணமும் நமது மனம் கொள்ளத்தக்கன.

கவிதையின் வடிவம் பற்றிய என் கணிப்பீடு இதுதான். கவிதையின் வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று சில வரையறைகள் உள. அவை அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை என்பனவாம். இவை
இல்லாவிடில் அவை கவிதையே அல்ல! கவிதையில் இலயம், ரிதம், சொற்சிக்கனம், இறுக்கம், நெருக்கம், கவினுறு மொழிநடை, ஓசை அனைத்தும் வேண்டும். புதுக் கவிதைக்கும் இது பொருந்தும். எதுகை, மோனை இருக்கின்றதோ இல்லையோ கவிதைக்கு ஓசை மிக முக்கியமானது. இது எனது ஆணித்தரமான கருத்தாகும். இதிலிருந்து எள்ளளவும் விலகத் தயாராயில்லை நான்.

அதாவது கவிதைக்கு ஓசை அவசியம்! அவசியம்! மிக அவசியம்!!

மேற்குறிப்பிட்ட சில வரைமுறைகளை மீறும் கவிதைகளை நான் கவிதைகள் என்று ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. அத்தகைய படைப்புக்களை கட்டுரையென்றோ, விவரணம் என்றோ, சிறு குறிப்பென்றோ குறிப்பிடலாம்! தவறில்லை! ஆனால், கவிதையென்று குறிப்பிடுவது தவறு! மகா தவறு!

காலத்தின் கண்ணாடியாய்த் திகழ்பவனே கவிஞன். கவிதைக்கு வடிவம் -  அதாவது உரு எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே கருவும் முக்கியம்! கவிதையின் கருப்பொருள் பத்தாம் பசலித்தன்மையாக இருக்கக் கூடாது. இயற்கையின் அழகையும் அழகியலையும் ஒரு கவிஞன் பாடலாம். அதில் தவறில்லை! அதேவேளை இன்றைய நவீன கவிஞன் தனது கவிதை மூலம் சமூகநலம் சார் முற்போக்குக் கருத்துக்களை விதைக்க முற்பட வேண்டும். (சொல் புதிது, பொருள் புதிது) அவனது சிந்தனைக் கருவூலம் சீர்திருத்தக் கருத்துக்களை வெளிக்கொணரும் ஆற்றல் மிக்கதாய் அமைதல் அவசியம்.

இத்தகைய தன்மைகளை தன்னகத்தே புதைத்துக் கொண்டமையால்தான் ஒரு சுப்ரமணிய பாரதி, ஒரு பட்டுக்கோட்டையார், ஒரு கண்ணதாசன், ஒரு அப்துல் ரகுமான், ஒரு வைரமுத்து போன்றோரால் கவிதா உலகில் நிலைத்து நிற்க முடிந்தது.

கவிஞனுக்கு ‘மூன்றாம் கண்’ என்று ஒன்றும் இருக்கின்றது. ஆகாயத்துக்கு அப்பாலும் ஊடுருவிப் பாய்கின்ற ஆற்றல் இக் கண்ணுக்கு உண்டு. பீனிக்ஸ் பறவை தனது சாம்பலிலிருந்தே உயிர்பெற்றெழுவது போல் தனது வார்த்தைகளிலிருந்தே மீண்டும் மீண்டும் உயிர் பெற்றெழுகின்றான் கவிஞன். ஒரு கவிஞன் தீட்சண்யப் பார்;வை கொண்டவனாக இருந்தால்தான் அவனது சிந்தனை வளம் சிகரத்தைத் தொடும். வார்த்தை வாத்ஸல்யம் வானத்தை அளாவும். இத்தகைய தன்மையுள்ள ஒரு சில கவிஞர்களும் நம் நாட்டில் உளர், அவர்களுள் கலைமகன் பைரூஸும் ஒருவர் எனக் கூறின் மிகையன்று.

இந்நாட்டிலுள்ள கவிஞர்கள் பெரும்பாலும் எழுத்துருக் கவிஞர்களே! அதாவது, பத்திரிகை சஞ்சிகைகளுக்கு எழுதுபவர்களே! ஒரு சில கவிஞர்களே மேடையில் நன்கு பிரகாசிக்கின்றனர். ஏனையோர் மேடைகளில் ஏறினால் உப்புச் சப்பற்ற, உணர்ச்சி ஏதுமற்ற வகையிலேயே பாடி ‘மகிழ்கின்றனர்’.

கலைமகன் பைரூஸைப் பொறுத்த அளவில் மேடையிலும் நன்கு சோபிக்கின்றார் என்று துணியலாம். நேரிலும் அவரது கவிதா விலாசத்தைக் கண்டும் கேட்டும் மெய்ம்மறந்துள்ளேன். எனவே பைரூஸின் பத்திரிகைக் கவிதைகளும் சிறப்பாகவே அமைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவரது கவிதைத் தொகுதி (கலைமகன் கவிதைகள்) யைப் படித்துப் பார்த்தேன். என் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை பைரூஸ். இத் தொகுதியிலுள்ள சில கவிதைகள் நான் பணியாற்றும் ‘நவமணி’ தேசிய வார ஏட்டில் வெளிவந்தவைகளாகும். பல கவிதைகள், பைரூஸ் பணியாற்றிய ‘இடி’ வாரப் பத்திரிகையில் வெளிவந்தவை.

உண்மையில் இவரது கவிதைகள், கவிதைக்கான இலக்கணத்தைக் கொச்சைப்படுத்தாத வகையில் எழுதப்பட்டுள்ளமை கவனிக்கப்பாலது.

கவிதையொன்றைப் படைப்பதற்கு மிக அவசியமான இலக்கணக் கூறுகளான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி போன்றவற்றை நன்கு கற்றுத் தெளிந்ததன் பின்னரே கலைமகன் கவிதை படைத்துள்ளார் என்பதற்குச் சான்று கூறும் பல கவிதைகள் இத் தொகுப்பில் காணப்படுகின்றன.

தமிழ் இலக்கண இலக்கியத்தில் தேர்ச்சிமிக்க பைரூஸ், இத்தொகுப்பின் மூலம் இப்பூவுலகின் பல்வேறு பரப்புகளிலும் கை வைத்துள்ளமை நன்கு புலனாகின்றது. பல்வேறு விடயங்களைப் பாடியிருக்கின்னறார், பலவிதமான கருத்துக்களையும் வண்ணத் தமிழில் கூறியுள்ளார்.

கலைமகன் பைரூஸ், கவிதை வடிப்பதோடு நூல்களை வடிவமைப்பதிலும் வல்லவராகத் திகழ்கின்றார். இவரால் அச்சிடப்பட்ட சில நூல்களே இதற்குச் சான்று. கணனி அறிவு நிறையப் பெற்றவரான பைரூஸின் கவிதைகளிற் சில என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

தீராத கொடும்பகை வளர்ந்த தாலே
தீய்ந்து விட்டோம் நடையும் கெட்டோம்
ஒரு நாடாய் ஒரு தாயாய் நினைத்தா லிங்கு
ஓங்கிவரும் செல்வவளம் நனி சிறக்குமே!
(மாறுமா இந்நிலை)

கண்படைத்தான் எங்களுக்கு அதுவா குற்றம்?
கருத்தினில் கயமை யூற்றெடுப்பதுவா குற்றம்?
புண்கொண்ட உளமெலாம் திருந்து நாளெப்போ?
புவியீதில் நம்நாடு செழிக்கு முண்மை!
(மாறுமா இந்நிலை)

மத்திய கிழக்கைப் பற்றிய ஒரு கவிதையில பைரூஸ் இப்படிக் கூறுகின்றார்.

விண்முட்டும் மாடங்கள் எழும் பாரும்!
வேதமோதும் சாத்தான்கள் நிறை பாரும்!
கண்ணீர் ஆறாக்கும் ரிசானாநபீக் பாரும்
கருணையே இலாத மாந்தர் வாழ்பதி

அக்கறையின் எழில்உண்டு – அங்குசென்று
ஆள்பவரின் வதைகளுக்கு நாமாளாகி
இக்கரையை இதயத்தோ டொட்டுகின்றோம்
இதுவா தலைவிதி எனக் குமுறுகின்றோம்
(மத்திய கிழக்கும் நம்மவரும்)

கருத்துச் சுதந்திரம் கம்பீர மெனக்கூறி
காடைத்தனம் புரியும் காமுக வெழுத்தாளன்
நெறிநீக்கிப் பாரினின் உண்மை விளக்கேற்றிட
நபிவழி நிற்கும் நமக்குமுண்டு கருத்துச் சுதந்திரம்
(கருத்துச் சுதந்திரம்)

நீள்தெங்குகளும் பனைகளும் உண்டிங்கு பாரு!
நலமுண்டு அதிலெல்லாம் உனையும்நீ மாற்று!
புள்ளெனவே நீ பறந்தெங்கும் செல்லு
புசிப்பதொடு இலங்கையென் நாடென்று ஓது!

மிக்குயர் மலைகளும் தேயிலையும் உண்டு
மிதமான கல்விச் சாலைகளும் உண்டு
திக்கெல்லாம் உன்புகழ்பாட நீ கல்விப்பாலுண்டு
திசைபரப்பு ஈழமென் நாடென்று!
(ஈழத் திசை பரப்பு)

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கலைமகன் பைரூஸ் நல்ல கவிதைகளைப் படைப்பதில் வல்லவர் என்பது நன்கு புலனாகின்றது.

அவரது கவிதா விலாசம் மேலோங்க என் வாழ்த்துக்கள்.


கலாபூசணம் கலைவாதி கலீல் ((SLES)
முன்னாள் தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி
உப பீடாதிபதி, விரிவுரையாளர்;,
கவிஞர், பத்திரிகையாளர்
26.12.2008



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக