இயற்றமிழின் வித்தகன்நீ இயற்றிய நற்றமிழ்தான்
இதயத்தொடு ஒட்டியேயுளது இத்தரைத் தமிழுளத்து
செயற்கரியன செய்து சாதித்தாய் நற்றமிழிற்பல
சொல்வதுநான் எங்ஙனந்தான் செவியேற்க நீயிலையே!
நெஞ்சிற்கு(ள்) நீதியும் தென்பாண்டி(ச்) சிங்கமும்
நலமான குறளுக்காய் நீள்பனுவல் குறளோவியமும்
விஞ்சுபுகழ் நீட்டிநீதான் விந்தையாய் சங்கத்தமிழும்
விதவிதமாய் உனக்கான வித்துவத்தில் தந்தாய்பல!
பாயும்புலி பண்டாரவன்னியன் படைத்தாய் உளத்து
பாயும்தமிழில் தென்பாண்டிச் சிங்கமுந்தான் தந்தாய்
நீயுந்தான் பால்யவயதில் காலூன்றித் தமிழுக்குள்
நலமாகப் பொன்னர் சங்கர் கொணர்ந்தாய் - நற்றமிழா!
உரோமாபுரிப் பாண்டியனைப் இயற்றி பண்டைய
உயிரோட்ட வரலாற்றை நம்முன் கொணர்ந்தாய்
வீறுடைய நற்றமிழன் புகழ்பாட தொல்காப்பியமதை
விரும்பிட உளங்கள் பூங்காவாய் எம்முன்தந்தாய்!
பொன்னான விரலிடுக்கில் பேனாவேந்தி பாவேந்து
பைந்தமிழில் அள்ளியே தந்தாய் தமிழணங்கிற்கு
வென்றே நின்றாய் கலையுளங்களை எப்பொழுதும்நீ
வென்றே நின்றதென்னுளம் உன்பனுவல்கள் நுகரத்தான்!
வசனநடை கைவந்த வல்லவன் நீயுந்தான் - கலைஞா
வண்ணத்தமிழில் வடித்திட்ட வனப்பேஎலாம் வாழும்
நீசர்கள் என்னத்தான் உன்னைத்தான் சொன்னாலும்
நீள்புவியில் நின்றுபிடிக்கும் படைப்பினால் நீயுந்தான்!
வள்ளுவன்கு சிலைவைத்தாய் வடிவாக மரீனாவில்
வள்ளுவ அளவடியில் நீயுந்தான் நிலத்தணைந்தாய்
சொல்லுகிறேன் நானுந்தான் உன்றமிழ்போல் நற்றமிழ்
சொலவல்லார் இங்குவந்தார் உன்னாற்றான் மு.க.வே!
முகவரியெழுதி முகநகநீதான் சென்றிட்டாய் காற்றோடு
மணப்பாய்நீ யுன்றமிழால் நற்றமிழ்க்குள் நுழைந்ததனால்
வேகமாய் எழுதினேன் உனைத்தான் இக்கவியில்நான்
வித்துவமே உன்றமிழினிலு மெனையிழந்தேன் நான்!
-கலைமகன் பைரூஸ்
08.08.2018
(கலைஞர் மு. கருணாநிதியின் மறைவையொட்டி எழுதப்பட்ட கவிதை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக