திருமண மண்டபத்தில்
இவ்வாறிருந்தது...
'படம் பிடிப்பது முற்றாகத் தடை...'
அதற்கு மேலால் சற்று
கண்களை உயர்த்திப் பார்த்தேன்..
முக்காடின்றிய
பல மாற்றுமதப் பெண்கள்
'செல்பி' எடுத்துக் கொண்டிருந்தார்கள்..
கீழே இறங்கி வந்தேன்...
ஒரு பிச்சைக்காரன்
திருமண மண்டபத்தையும்
வருகின்ற போகின்றனவர்களையும்
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்...
பக்கத்தில்
ஏழைகளை அழைக்காத
வலிமா விருந்தில் 'பரக்கத்' இல்லை
என்று வாய்கிழிய 'ஜும்ஆவில்'
கத்திய முல்லா
கண்டும் காணாது இருந்தார்...
அவரது சொந்தக்காரனின்
திருமணம் என்பதால்...
கொஞ்சம் வெளியே
வந்துபார்த்தேன்...
ஒருவர் வாகனத்திற்கு காத்திருப்பது
கண்களில் பட்டது...
காரணம் வினவினேன்...
யார் என்றும் கேட்டேன்...
'வாகனத்திற்காய்க் காத்திருக்கிறேன்
நான்தான் விவாகப் பதிவாளர்' என்றார்...
'சாப்பிடவில்லையா?' என்று
மெல்லக் கேட்டேன்...
அவர் சொன்னவிடயத்தில்
கண்கள் குளமாகின...
'ரெஜிஸ்ட'ருக்குத்தான் அழைப்பு!
வீட்டில் பாணும் சம்பலும் தயார் என்று
மனைவியின் அழைப்பில் நான்...'
பெரியவர்களின்
இல்லை பெருச்சாளிகளின்
தர்மம் குறித்து
வெட்கிக்கொண்டே வேகத்தைக் கூட்டினேன்..
திருமணத்திற்கு
வந்தவர்களை ஏற்றி இறக்கிய
ஆட்டோக்காரன் நான்...
-கலைமகன் பைரூஸ்
22.09.2018 09.45
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக