ஆண்டுகள் இருபதும்
கழிந்தாயின...
நீ எனக்குள் தந்த
முத்தங்கள்
இன்றும்
காற்றுக்கு அசைந்தாடும்
பெருமரமாய்!
நாங்கள் பேசிக்
கொண்டிருந்த
அந்தக் கணங்கள்
இறப்பர் தோட்டத்து
பறவைகள் பார்த்து
முணுமுணுத்துக்
கொண்டன.
நீ மட்டுந்தான்
உலகத்து
அழகு ராணி என நான்
உரத்துச் சொன்னேன்
எனக்கு மட்டுமே
கேட்க...
நீதான் எனது பட்டத்து
ராணி
நீதான் எனது தேவதை
என
நான் பலவாறு எழுதினேன்
காதல் கடிதங்கள்...
உன் புன்னகை இன்னும்
என்னுள் மகரந்தத்தை
சிந்துகின்றன...
நறுமணம் தாங்கிக்
கொண்டு
இன்று நான் மாற்றானாய்....
அன்று எங்களுக்காக
நகர்ந்து இடந்தந்த
மரங்கள்
எங்களுக்காக வேகமாக
வந்த
இருள் தேவன்....
இன்றைய பொழுதுகளில்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கின்றன....!
அறியா மாதரின்
அன்பில்
அணைந்தாயே அழிந்ததே
உன்னிளமையும்
உன் அறிவும் என
கிசுகின்றன
நான் இப்போது சாயும்
சாய்மனை!
இளவல்களே...
அறியாப் பருவத்து
அணைத்து வரும்
அன்பில்
உங்களை மறந்திடாதீர்கள்
உங்கள் எதிர்கால
எதிர்பார்ப்புக்கள்
வானளாவட்டும்...!
இதயத்து ஒலிகள்
சதாவும்
உயரிய இராகங்களாகட்டும்...!
அன்றேல்,
காலம் பதில் சொல்லும்
உங்களை அமானுஷ்யனாக்கும்...
ஊரவரும் என்னவள்
என்றவளும்
காரித் துப்பும்...
கையாலாகாதவன் நீ
என்று....!
காதலை சபிக்கவில்லை....
காதல் வரத்தான்
வேண்டும்
ஆகும் வயதில்..
அன்று
ஆகாத வயதில் அல்ல...
மரங்களே என்னை
மன்னித்துவிடுங்கள்
உங்களில் அடைக்கலம்
தேடி
நாங்கள் இணைந்த
பொழுதுகளை
வாபஸ் வாங்கிக்
கொள்கிறேன்..
பெருமூச்சு விட்ட
வண்ணம்
மானுடனான நான்!!
-கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக