It It கலைமகன் கவிதைகள்: 2010 Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

வெள்ளி, 3 டிசம்பர், 2010

ஜின்னாஹ் வெனும் காப்பியப் புலி!








பற்பலவுங் கற்றறிந்த ஜின்னாஹ் -மட்டில்
பண்டிதனாய்த் தெரிகின்றான் என்னில் நன்றே
மற்றவர்க்கும் போதிக்கவேண்டும் நல்ல
மனங்கமழ் தமிழோசை செப்ப வேண்டும் -தாம்
கற்றவற்றை காப்பியமாய் மேலும் தந்திட வேண்டும்
கருத்தில்லா மாந்தர்க்கு மோதி்ட வேண்டும்
தேன்போன்ற நற்சொற்கள் காவியத்திலுண்டு
சுந்தரமாய் கவிதருமிவன் காப்பியப் புலியே!

செவ்வாய், 2 நவம்பர், 2010

மாற்றம் வேண்டும்!

பணத்தாலும் பதவியாலும் தத்தம் பெருமை
பேசிவரும் ஈனரிங்கு சாய வேண்டும்
பிணமென நிற்பார் எழ வேண்டும்
பள்ளத்தில் வீழ்ந்தார் மீள வேண்டும்

குணத்தொடு நிற்பார் வந்துபார்த் திரங்க
குனிந்த மாந்தரி லொளி வேண்டும்
பணத்தாலே எல்லாம்ஆம் எனும்நிலை மாற
பண்பட்ட தூயோரிங் குதித்தல் வேண்டும்

சனி, 23 அக்டோபர், 2010

பெரியோ ரெங்கே?

இருளடைந்த சமுதாயத்தை வெளிக் கொணர
எழுச்சிமிக வேண்டு மென்றோ - இன்று
இருப்பாரெலாம் பொத்திவைத் ததையே ஏற்றி
எரிதனலாய் மக்களுக் கீவா ரின்று
மருட்சியினால் மாந்தரெலாம் வாய் புதைத்து
மறையவன்விதி இதுவென்று ஏங்கி நிற்பர்
தருமந்தான் தலைகவிழ்ந் துள்ளதனா லிங்கு
தலைத்தோங்க முடியவிலை நீதி யெங்கே?

---------

செவ்வாய், 19 அக்டோபர், 2010

குர்ஆன் எரிப்பவனே!


தாய்மொழி செந்தமிழி லெழுதும் கவியிது
தரங்கெட்ட உனைச் சேராதோ – சேரும்
மெய்யெரி வதினால் மனம்வாடுதலால்
மொழிந்தே னுனை இழித்து!

காசினிலே மூழ்கி கயமைக்கு வழிகோலி
காசினியி லுயர்ந்து தானிற்க ,வெங்கொடுமை
கண்டுவிட்டான் வஞ்சக நெஞ்சத்தான் , நரகம்
கெட்டவன் போகு மிடம்

புதன், 13 அக்டோபர், 2010

நம்பிக்கை வை!


வாழ்க்கை
இது மானுடனுக்கு மட்டுமல்ல
ஏனைய சீவராசிகளுக்குந்தான்!
திமிர்பிடித்த
ஏறுகள் உன் மேலேறி
உனை மிதிக்க வரும்...

எடுப்பார் கைப்பிள்ளையாய் கொண்டு
மேலே தூக்கி கீழே போடுவர்
மிட்டாய்கள் காட்டி
தலையைத் தடவி
கண்மயிரைப் பிடுங்குவர்...
உன் திறமைகளை
எள்ளி நகையாடுவர்
உன்னில் நீ நம்பிக்கை வை!

வெள்ளி, 8 அக்டோபர், 2010

கண்ணிலாத ஏகாதிபத்தியமே!



எல்லாமும் தமதாக்க எண்ணும்தீய
ஏகாதிபத்திய ராஜ்யமே யுந்தன்
பொல்லாத கழுகுச் சிந்தனையாலே
பலஸ்தீன்மண் மரணப்பிடியிலின்று!

சியோனிசத்தொடு வாகாய்நீயிணைந்து
சாந்தமாய் வாழ்ந்திட்ட புனிதமண்மீது
தீயோராம் இஸ்ரவேலுக் கிடமுண்டாக்கி
தாயமக்களுக் கநியாயம் செய்தனையே!

புதன், 29 செப்டம்பர், 2010

பாவம் ஏது செய்திட்டோம்?




ஏழ்மையொடு ஒட்டிப் பிறந்திட்டோம்
ஏற்றமிலாச் சாதியில் பிறந்திட்டோம்
கூழின்றி குடும்பமே நட்டாற்றி லிருப்பதனால்
கொடுமைகள் பலசுமந்து துன்பத்தில்நாம்!

கற்றுத்தேர்ந்திட பள்ளிசென்றிட ஆசை
கயவர்கண்கள் குருடனதால் நாமிங்கே
முற்றும் துறந்துமுட்களிடை யேயின்று
முனிந்துமுனிந்து வேலைசெய்கின்றோம்!


வியாழன், 16 செப்டம்பர், 2010

உனை நினைத்து!


(என் தமிழ்க் கனிகையே...)
---------------------------------------------
உள்ளத்து ளுயிராய் வந்தாய்

உதிரத்து ளொன்றாய் கலந்தாய்

கள்ளுண்ட வண்டா யானேன்
கனிமொழி யுன்னிளமை கண்டேன்!
00000

இதழொடு இதழ் பதித்தாய்
இதமாக இதழ் குவித்தாய்
காதலா லுன்னில் பித்தாகி சித்திரித்தேன்
காதலியே என்றுமென்னுள் நீயே வேண்டும்!
00000
முத்தீ வளர்த்த சங்கத்தாளே  உன்
முன்னழகும் கண்ணுக்குள் சித்திரமாக!
சித்திபெற்ற சுந்தரியாள் நீ  எங்குமெதினும்
சிந்துவேன் நின்புகழ் ஞாலமீது மணியாக!
00000
புள்ளுறங்கும் கணமதுவும் பூவே நீ!
புழுங்குகின்றேன் பாரிலுன் நிலைகண்டு  யாண்டும்
நில்லாத நிலத்தினிலும் நீநிமிர வேண்டும்
நினையென்றும் நினைத்திடுவேன் நானே!
00000
உயிர்மெய்யா யென்னக மிணைந்தாய் - நின்
உயிர்த்துடிப்பதை ஆய்தமாய் வைத்தாய்!
ஆயுதமீந்து மெலிதெனை வலிதாக்கினாய்
ஆகாரமேனோ இடையுந் தானுன்னில் கண்டக்கால்!
00000
புல்லர்களுன் சத்தான இளமைகண்டும் - பூவே
புரியாமல் தலைகாலது பொய்செய்குவை!
மல்லர்தானு முனையிகழ்ந்தால் ஞாலமீதில் - நின்
மடிவீழ்ந்து சரண்புக வீழ்த்திடுவேனே!
00000
என்னிலக்கணமே நினதெழில் பைம்பூணாமோ?
எழுதுகின்றேன் நினதெழில் எழுதுகின்றேன்
உன்னை விண்ணதிரப் போற்றி யெழுதுகின்றேன்
உயிராய் வருக! என் தமிழ்க்கனிகை நீயே!

- கலைமகன் பைரூஸ்
இலங்கை

நன்றி
# முத்துக்கமலம்
# தினகரன் வாரமஞ்சரி

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

சுதந்திரம்!






வானெங்கும்
தலைக்குமேலே
பறந்துதிரியும்
பட்சிகளுக்கு
நாலா பக்கமும்
சுதந்திரம் உண்டு!

ஆயினும் 

புதன், 8 செப்டம்பர், 2010

ஏனோ மதியிழக்கிறாய்!



சின்னஞ்சிறு தவறுசெயின் - நீ
செய்தது பெருந்தவறென்று
சிரிப்பிழக்கிறாய்! - உன்
புன்னகை கண்டிட
பெரும் ரணங்களுடன்
கொஞ்சிக்குலவும்போது
பறந்துவிட்டது சிரிப்பென்கிறாய்!
பணியில் இமாலயமெட்ட
பரந்துவழியும் நீர்மொட்டுக்களுடன்
சிலபோது எனக்கு
பெருங்கோபம் வருவது தப்பு!தப்பு!!

திங்கள், 6 செப்டம்பர், 2010

நடக்கிறது ஒரு பயணம்!



நாளொன்று புலர்கிறது
நாளைய விடிவுக்காக....
நிறைந்த மனதோடு
நடக்கிறது ஒரு பயணம்!
ஆயின்...

தட்டிப் பறிப்பதற்காய்
அங்கொரு காகம்
அண்ணாந்து பார்க்கிறது!

அழுக்குண்ணிச் சிந்தனையோடு
பிணந்தின்னும் கழுகுகள்
நாற்சந்திகளிலும்
புயல்வீச்சோடு பறக்கிறது!

கடித்துக்குதறும்
ஓநாய்கள்
அலைந்து திரிகின்றன
பிணமாக்கி மகிழ்ந்திட!
ஆயின்...
நடக்கிறது ஒரு பயணம்!

தட்டுத் தடுமாறியும்
தடைகள் தாண்டியும்
முச்சந்தி முட்களைக் கடந்தும்
தன் பிம்பத்தை
காணும் இடமெலாம்
நிழலாய்க் கண்டும்
களிப்புற்று மகிழ்கிறது உள்ளம்!

கறுப்பஞ்சாறாய் சுவைத்து
கருவேப்பிலையாய் ஒதுக்கும்
கேடுகெட்ட செயல்கண்டு
பிறந்ததேனோ
இத்தரையில் என
அடிமனது வினாதொடுக்க
நடக்கிறது ஒரு பயணம்!

அங்கு
மேடைகள் போட்டு
மத்தளம் கொட்டி
‘சமுதாயம்’ உரக்கப்பேசுகிறது!
அரவணைக்கவும்
ஆரத் தழுவவும் அழைக்கிறது!
அரங்கம்
பேரொலிக்கு  அதிர்கிறது
இதைக் காணக்கொடுத்தன
விழிகள் என
நடக்கிறது ஒரு பயணம்!

நடுவழியே
நேத்திரங்கள்
குத்திநிற்கின்றன!
காசற்ற பிச்சைப்பாத்திரம்
வஸ்திரமற்ற உடம்பு
இவற்றோடு
பிணமொன்று
மணம்வீச
காகமும் கழுகும்
ஓநாயும்
பெருமனதுடன் அங்கே!
பேரிரைச்சல் தாங்கவியலாது
மீண்டும்
நடக்கிறது ஒரு பயணம்!

இடைநடுவே
சந்தனப்பாடை சுற்றி
பெருங்கூட்டம் ஓலமிட
மானுடனின் நிலைசொல்லி
நடக்கிறது ஒரு பயணம்
தடுக்கிறது அப்பயணம்!
மேலும் வழிசெல்லாது
தடுக்கிறது அப்பயணம்!!


நன்றி:
# வார்ப்பு

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

வருக ஈகைத் திருநாளே!

திங்களொன்று நோன்பு நோற்று
தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து
இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து
இனிதாய் இப்தார் செய்திட்டோமே!

அதிகாலை துயிலெழுந்து - தொழுது
அன்பாய்க்கூடி ஸஹர்செய்து - பின்
கதிமிகத்தந்திடும் ஸுப்ஹும் தொழுது
குர்ஆன் ஓதிட்டோமே திங்களிதில்!

 செய்ததவறுக்காய் தேம்பியழுது -நம்
தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட
பெய்யும்மழையாய் அருள்தனைவேண்டி
படைத்தவனிடம் ஏந்தினோமே கை!

வாடிடும் ஏழைகட்கு வாரிவழங்கி
வல்லானருளை மேலாய்ப்பெற்று
தேடிட சுவர்க்கம் செய்தன நல்லன
தரணியில் ரமழானை தரமாயேற்றே!

எனக்கே சொந்தமீதென்ற இறைக்கு
ஏந்தினோ முயர்வாய் அதனை - நாம்
மனங்களை இணைப்போம் ஒன்றாய்!

இல்லாமையொழித்து இனிதுமகிழ்ந்து
இனத்தொடு ஒட்டி என்றுமிருந்திட
நில்லாத நிலத்தினின் நல்லனசெய்திட
நலமேந்தி வருக ஈகைத் திருநாளே!

அறையிலடங்கி நிற்கும் வனிதைக்கும்
அழுதுநிற்கும் விதவைக்கும் - அன்பாய்
கறையிலா ஆடவர் கிடைத்திட இன்று
கருத்துக்கினிய பெருநாளே தூதேந்திவா!

உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதம்நீக்கி
உத்தமநபியின் ஸுன்னாவையேற்று
கயமைநீக்கி நற்கருமம் செய்திட
கருணைமழை பொழிந்துவா பெருநாளே!

நன்றி :
 ஒரு நாள் ஒரு கவிதை
வார்ப்பு

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஓடி விளையாடு

ஓடிவிளையாடு நீ - ஓய்ந்திருக்காது விளையாடு
ஒருநாள் முடிந்திடும் மூச்சினை யெண்ணாது
துடிதுடிப்பாய் விளையாடு! துடிதுடிப்பாய் ஆடு!
தூங்கியபின் ஆட்டமில்லை – எண்ணாது ஆடு!

கனவுகள் நிஜமாகுமென நினைத் தாடுகிறாய்!
கண்டவரையெலாம் கரண்டையின்கீழ் எடுத்திட
ஊனமனங்கொண்டாடுகிறாய் - நீயாடு நீயாடு!
உலகமுந்தன் பாடைதூக்கிடும் நாளெண்ணாதாடு!

யானுயர்ந்தவ னெனநினைந்தே உதைக்கின்றாய்நீ
யாவுமறிந்தவன் நிலையெண்ணா துதைக்கின்றாய்!
வானும்வசமாகும் விண்மீனும் கீரிடம்தரிக்கு முனக்கு
வாழ்க்கை – பார் ஏதெனநீ யுணருங்காலே! உதைநீ!

சாதிகளி லுயர்ந்தவன் நீயென்று உதைக்கின்றாய்!
சாதியென்ன சாதி உந்தனுக்குள் எங்கேயோகம்?
நீதியை நிலத்தினி னழித்திட உதைக்கின்றாய்நீ
நிலையிலா வாழ்வின் முடிவேதென அறியாதுநீ!

ஒற்றைப் பந்தின் வாழ்வன்னது வாழ்க்கை – அது
ஓய்ந்திடும்வேகமறியாது உதைத்தாடுகிறாய்!
இற்றைப்பொழுதில் உந்தனாட்டம் கண்டுசிரித்திட
இருக்கின்ற சாரார் எண்ணி யாடுகிறாய் –நீயாடு!

இழுத்தடிப்பதில் தப்பேது உனைப்பந்தாடுவார்தனை!
இழுத்தடிப்பதில் தப்பேது உனையிகழ்வார்தனை!
வீழ்ந்துமடிந்தாலும் ஆகும் வீணரை வீழ்த்திடஆடின்
வம்புக்கும் வீம்புக்குமாடின் நீகண்டதெலாம் பூச்சியமே!

-கலைமகன் பைரூஸ்
இலங்கை

நன்றி:
  • முத்துக்கமலம்
  • வார்ப்பு
  • ஒருநாள் ஒரு கவிதை
  • பூங்காவனம்

வெள்ளி, 18 ஜூன், 2010

அந்தகார நிலவு - கவிஞர் பேருவளை றபீக் மொஹிடீன்


 க. பரணீதரனை பிரதம ஆசிரியராகக் கொண்டு, நடைபோட்டுவரும் 'ஜீவநதி'யின் வைகாசி - 2010 மலரில், தமிழாசிரியர், இலக்கணச்சுடர், கவிஞர் பேருவளை றபீக் மொஹிடீன் அவர்களின் அருமந்த கவிதையொன்றைக் கண்டேன். நயந்தேன். 

'அந்தகார நிலவு' எனும் தலைப்பிலான அந்தக் கவிதையை நீங்களும் நயக்கும் பொருட்டு இங்கு இற்றைப்படுத்துகின்றேன்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

எதையும் தாங்குவோம்!



அழுதுகொண்டே அகலமீதில் கால்பதித்தோம்
அழுகையே ஆறாக நாளும் ஓடிவருது
பழுதிலாத வார்த்தை யேதேனு மில்லை
பாந்தள்கள் சூழ நாமக்கேதுவிடியல்!

அன்புடையா ரெல்லாம் அந்தோசென்றிட
அச்சமே உடலெங்கனும் பெருநதியாக
இன்பமேது என்று எண்ணிட - என்னுள்
இதமாய் வந்தது எதையும் தாங்கென்று!

எங்கனும் வலம்வந்திட்ட இடுக்கணைநான்
எட்டியுதைத்தேன் என்னுள்நீயேனென்று
பங்கமிலை யின்று பாதைவிரிந்தது
பாரே எனில் அன்போடின்று- அகமகிழ்வு!

நச்சரிப்பும் பாராமுகமும் கெஞ்சுதலும்
நாமடங்கி யொடுங்கி னாலன்றோ!
நிச்சயமாய் எமைத்தாங்கும் நிலம்போல
நாமு மெலாம்தாங்கி மேலெழுவோமே!

பச்சோந்திக ளெங்கனும் சுற்றிநின்று
பல்லிளித்து குளிர்காய நிற்பதுகாண்
நிச்சயமாய் அழி்ந்தொழிவர் -நாமெழுவோம்
நாம்தாங்குவோம் எதையும் -ஒளிவீசும்!

கலைமகன் பைரூஸ்
மதுராப்புர - இலங்கை.


நன்றி : வார்ப்பு

புதன், 13 ஜனவரி, 2010

தேசியம்




நாசுக்கும் மூச்சுக்கும் ஒற்றுமைகாட்டி
நலினமாய் ஒருமையை மேலாக்கி
தாசுகளுக்கு முரிமை தான்வழங்கி
தரணியில் சோபை கொள்வதே தேசியம்!

ஒன்றை விரும்பி மற்றதை யிகழ்ந்து
ஒருவருமறியா முகமூடியொடு வாழும்
தான்தோன்றித்தன தேசியம் வீழட்டும்
தரணியில் நீதியோதும் தேசியம்வாழட்டும்!

விலங்கின மனதினை யுள்வாங்கி
விகற்பங்கள் செயும் தேசியம்வீழட்டும்
நிலையினில் தளரா நீதிமிகு தேசியம்
நிலத்தினி லுயர்ந்து மிளிரட்டும்!

நனிமிகு தேசியத்தை நேசிப்போம்நாம்
நிலத்தினில் பாகுபாட்டினை அழிப்போம்
பனியென மனங்களை ஒன்றிணைக்கும்
புனித தேசியம் பவனிவரட்டுமென்றும்!

கலைமகன் பைரூஸ்