இலங்கை மண்ணுக்குப் புகழ்பெற்றுத்தந்த பெண் அறிவிப்பாளர்
திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபக விழாவில்
பாடப்பட்ட எனது கவிதை
இடம்: கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் (சங்கரப்பிள்ளை மண்டபம்)
திகதி: 13.05.2012 காலை 9:30 மணி
கானக் குயிலுக்கு எந்தன் கவிதைக் குரல்
-வெலிகம கலைமகன் பைரூஸ்
தமிழ்வளர்க்கும் தமிழ்ச்சங்கந்தனிலே - இந்நாள்
தாய்நிலமீதில் புகழ்கோத்த பெருமாட்டிதனையுன்னி
நிமிர்ந்ததமிழ் வளர்க்கும் பல்லோர்க ளவையில்
நிழற்கவியான் கவிதொடுக்க நிகரிலாஇறையே நீயேதுணை!
கானக்குயிலினுக்கு கானமிசைக்கு மிந்நாள்
கரையிலாத் தமிழ்த்தென்றல் அலிஅக்பர் அரசோச்ச
இன்றமிழில் கவிபொழிய வந்துள கவிமன்னர்காள்
இங்கிதமா யமர்ந்துள்ள புலவோர்கள் பல்லோரே!
தாய்த்தமிழில் நான்கொண்ட காதலா லின்று
தரமான அறிவிப்பா லெமையெலாம் கோத்த
தாயன்ன அம்மாவை நெஞ்சினி லேற்றி
தருவேன்கவி, குறைபொறுத்தருள்வீர் சான்றோரே!
இதமான குரல்மீது பல்லோரும் மெய்ம்ம்மறக்க
இரவாத புகழ்கொண்ட இராஜேஸ்வரி யம்மாவின்
பதமான நற்றமிழை நானுன்னி னேனன்று - இன்று
பார்மீதி லில்லாமை யாலின்று துயர்கடலா யானேனே!
பெண்மைக்கு புகழ்கோத்த பொதிகைத்தென்றலாளின்
பாமயமான திரைத்தொகுப்புதா னயந்தே னீரடியில்
கண்ணகி நாடகமீதில் களிகொண்டேன் - மெய்யாய்
கண்ணுக்குள் நிழலாடும் கண்ணகிதானே நீயம்மா!
சில்லையூராரின் சிலம்பொலியில் மின்னித்தான் நின்றீர்
சிருங்காரம் இணைந்திடவே நகைச்சுவையும் தந்தீர்
சொல்லவியலா அலங்காரமே குரல்வளந்தான் அம்மா
சாகாவரம்பெற்ற சொல்லின்செல்வி நீங்கள் தானம்மா!
கண்மீது அருவியெலாம் காணுங்கால் உங்கள்குரல்
காந்தமாய் காட்டுதம்மா கண்ணீர்தான் பெருக்கி -இம்
மண்மீது மீண்டுமொரு இராஜேஸ்வரி அம்மாநீர் வருவீரோ
மொழிவளர்செல்வியே நீங்களின்றி சொல்வளமேனோ அம்மா!
மதுரக்குரலால் கட்டிப்போட்டீ ரெமையெலாம் - சீராய்
மணமான நற்குணத்தோ டென்றும் நின்றீர் பேராய்
நயமான உறவுக்குள் எமையெலாம் சேர்த்தீர் நீராய்
தடம்மாறாத் தங்க மனத்தாள் நீயல்லவோ அம்மா!
விடியலை நோக்கி விதவிதமாய் வந்தெமை
வானொலிக் குயிலாள்நீங்கள் வாழ்த்தியே நின்றீர்
கொடியோர்கள் செந்தமிழில் குற்றங்கள் காணுங்கால்
கானத் தமிழில் கானமிசைத்த சொலள்வல்லாள் நீயேஅம்மா!
தமிழை மெருகேற்றும் பல்லோர்க்குள் நீயேஅம்மா
தங்கத் தமிழை உளமீதுபொலிந்த கோடைமழை
நிமிர்ந்தே நடைபோடும் நற்றமிழின் பெருங்கலையே
நயந்தேன் நானுந்தான் கட்டுண்டேன் உந்தனிசைமீது!
யாழினிது குழலினி தென்பர் மாந்தர் -இன்று
யாழினிலு முயர்குரல் தனைக்கொண்ட வுங்கள்
மொழியின்றி மெய்வாடி நின்றே இன்று
மொழிவளர்க்கும் சங்கமீது சங்கமித்தோமே!
மண்ணுக்குப் புகழ்கோத்த வுங்கள் மணம்
மண்ணெங்கு தான்மறக்கும் - வாசம்தான்வீசும்
பண்பான பாங்கியாயும் பல்லோர் மனமீது
படர்கொடி நீங்கள்தானம்மா இராஜேஸ்வரி யம்மா!
அறிவிப்பில் பதம்பெற்ற அன்னைத்தமிழம்மா
அழியாது அழியாது அகிலமீ தழியாது உந்தன்பேர்
நிறைந்தே நல்லன பெறுக அம்மை – நான்
நற்றமிழில் வழுத்தினேன் குயிலின்குரலை!
நன்றி
குறிப்பு-
இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் சாந்தி சச்சிதானந்தம் தலைமை வகித்தார்.
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் , கல்முனை மாநர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் , புரவலர் காசிம் உமர் , கவிஞர் ஜின்னாஹ் சரிபுதீன், கவிஞர் மேமன் கவி ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை மாநர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கலாநிதி துரை மனோகரன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , அறிவிப்பாளர் புர்கான் பி இப்திகார் , இராஜேஸ்வரி சண்முகத்தின் மகன் அறிவிப்பாளர் சந்திரகாந்தன் சண்முகம் , கவிஞர் மேமன் கவி, எழுத்தாளர் சுல்பிகா சரீப் ஆகியோர் உரை நிகழ்த்தினர்
கானக் குயிலுக்கு கவிதை குரல்கள் என்ற மகுடத்தில் கவியரங்கம் இடம் பெற்றது. தமிழ் தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்களான நஜ்முல் ஹுசைன், பதியத்தளாவ பாரூக் , கலாநெஞ்சன் ஷாஜஹான், வெலிமடை மகாலிங்கம் , கிண்ணியா அமீரலி , கலைமகன் பைரூஸ் , சுகைதா ஏ கரீம் ,ஸைலஜா, கலையழகி வரதராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மற்றும் கௌரவிப்பு நிகழ்வு என்பனவும் அங்கு இடம்பெற்றன.
SMS:------------------------------------------- +94 0777292292
Thanks,
For your wonderful performance at raji's Kaviarangu. Pls. Forward your Kavithai' to my email - xxxxxxxxxxxxxxx - Ali Akbar. 05/17/2012 14:01
FACEBOOK---------------------------------------- Kalaimahal Hidaya
தம்பி கலைமகன் பேச முடியாத நிலைமையில் (தொண்டைவலியால் )உடன் வந்து விட்டேன் இன்ஷா அல்லாஹ் இரு நாளில் கொழும்பு போகின்றேன் கண்டிப்பாக உங்கள் படங்களை எடுத்து அனுப்பி வைப்பேன் என் அழைப்பை மதித்து வந்தமைக்கு சந்தோசம்.
உங்கள் கவிதை பிரமாதம் நன்றிகள் ..!..