It கலைமகன் கவிதைகள்: வாதம் மிக்க பிரதேச வாதம் எதற்கு?

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

வாதம் மிக்க பிரதேச வாதம் எதற்கு?

வாதம் மிக்க பிரதேச வாதம் எதற்கு?
--------------------------------------------------
-கவித்தீபம் கலைமகன் பைரூஸ்
நாங்கள் முஸ்லிம் ஒன்றே நாங்கள்
நலமாய் ஒற்றுமை கயிற்றினை பற்றுமின்
தீங்குகள் பலவாய் வந்திட்ட போதும்
தீயன நினைக்கா திருங்கள் என்றனர்....


சொன்னவர் ஆலிம் ஹாபிஸ் என்பவர்
சொன்னயம் மிக்க பேச்சில் திளைத்தனர்
விண்ணதிர் குத்பா உரைத்தார் மிம்பரில்
வல்லான் அருள்மறை முழங்கினார் நேராய்...

மறுநாள் பகலில் ஓட்டலில் திருமணம்
மருவிலா வண்ணம் சனங்களின் கூட்டம்
அறுவர் அறுவராய் அவர்கள் வந்தனர்
அமர்ந்தனர் ஸஹனில் ஒருமை பேசினர்....

அமர்ந்தவர் எல்லாம் ஓரூர் கூட்டம்
அழைத்த வேறுறார் சுளித்தனர் வதனம்
அமர்ந்தே இருந்தார் குத்பா முழங்கி
ஆரிவர் என்றார் அழையா விருந்தாய்....

வெலிகமை நகரில் பலவாம் ஊர்கள்
வெலிகமை மண்ணிது சிறுமக்கம் என்பார்
கலிகாலம் இங்கு இருக்குது இன்னும்
கழித்தே நோக்கும் பண்பும் உண்டு!

பழகிடுவர் தேனும் பாகுமெனத் தானிங்கு
பந்தம் இல்லை திருமணத்தில் அங்கு
இழிந்தே நோக்குவர் சிற்றூ ரொன்றை
இறைவன் உயர்த்தினன் மேலாய் அதனை!

எல்லாம் பேசும் மிம்பர் மேடை
ஏனோ இவர்க்கு இதனை விளக்கா...?
எல்லாம் நாமே என்றே பேசுவர்
ஆண்டியு மரசனும் இறைவனுக் கொன்றே!

பலவாம் கூட்டம் வெலிகம மண்ணில்
பிரித்தே பார்க்கும் கூட்டம் உண்டு
நிலை மாறும் காலம் எப்போ...?
நினைக்கு மனது என்னே இதுவென?

இறைவன் மறையினில் இழிந்த ஊர்தான்
இலங்கை மண்ணில் உளவோ அறியேன்?
மறை அறிந்திட்டார் தரவிலை பதில்தான்
ம்என்றே இருந்தே நொந்தனன் அன்னவர்தானே!

கற்றிடும் காலை கலக்கினர் கலையகம்
கண்டனர் பெருமை அவரில் இவர்தாம்
ஏற்றிடார் என்றும் எம்மவர் இவரென
ஏறிடும் பார்வை அந்நியர் எனவே!

வித்து வளர்ந்திடும் காலை ஏற்றுவரூசி
விலகியே நடந்திடுமின் என்றே ஊதுவர்
கொத்தாய் ஆசை ஆடவரில் பெண்டிர்
கொண்டிட கொன்றிடுவர் இம்மண் ணூரில்!

பன்னூறு பட்டம் பெற்றார் பிறந்திடினும்
பேயாய்க் காண்பர் ஒதுக்குவ ரிங்கு
பன்னின்றி பேசா மடந்தையாய் எவரும்
பாரில் இருந்திட கொட்டம் உயரும்....!

எல்லாம் அறிந்தார் எவரு மில்லை
ஏற்றம் கொண்டார் ஒருவரு மில்லை
எல்லாம் வல்லான் விதியது என்போம்
என்றே சொல்லிட ஏற்றம் எப்போ...?

மதியாரை மிதிப்பது மண்ணின் நியதி
மதிப்பார் போல் காட்டும் பாசாங்குபாரும்!
விதியை நொந்திடும் பேதைக் குணத்தினை
விரட்டியே அடிப்போம் வெலிகம வெல்லும்!

ஒன்றாய்க் கரங்களை கோப்போம் ஒன்றாய்
ஒன்றே நாங்கள் என்றே சொல்லுவம்....
என்றும் நாங்கள் ஒன்றே என்போம்....
ஏற்றம் கண்டிடுவர் முஸ்லிம் இங்கு.....

கவிதை தன்னில் அடித்தான் என்றே
கவிநெய்த எனை நொந்து என்னபயனோ?
தூவியெறிந்திடுக நடுக்கடலில் பிரதேசவாதம்
துயர்களைவான் செயலினை எண்ணிப் பார்க்க...

ஆயிரங்கள் பெற்றிட ஏறிடும் மிம்பரில்
அந்நிய ரில்லை இவ்வூரார் என்றுடுமின்
ஆயிரங்கள் பல தந்திடுவோம் உமக்கு
அறைவீர் எங்கும் எல்லாம் மனிதரென்று!

தாடியும் தஸ்பீஹும் மாட்டுவது மறையா?
வெள்ளாடை அங்கி உம்மூர் மறையா?
பாடிப்பாடி இழிந்தது போதும் ஹாஜி
பாடிடும் இவர்கள் நம்மினம் என்றே!

சோதனை பலவாய் வந்துற்றக் காலை
சார்ந்தே வருவர் முஸ்லிம்கள் தாம்
வேதனை வருங்கால் இவர்கள் தேவை
வேரொடு அழிப்பீரே வேற்றூர் என்று....!

நீதியும் நலனே... நியதியும் நலனே
நாயன் சினத்தினை நன்கே கற்றிடும்
கதியிலாதார் யாருமின்றி வாழ்ந்திட இங்கு
கல்பினின் நல்லன படைத்திடு அல்லாஹ்!

2013-09-06

கருத்துரைகள்:

கிரிஷ்னன் பாலா: 

இறைநெறிச் சிந்தனையோடு எழுதப்பட்ட முறை நெறிக் கவிதை. பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக