It It கலைமகன் கவிதைகள்: 'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் எஸ்.எச். மௌலானாவின் கருத்துரை Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

திங்கள், 2 செப்டம்பர், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் எஸ்.எச். மௌலானாவின் கருத்துரை

சமுதாய உறுத்தல்களால் உருவானதே ‘கலைமகன் கவிதைகள்’
- முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் 

கலைமகன் பைரூஸின் படிக்குந்தோறும் இனிமை பயத்திடும், சலசலவென்ற ஓசைநயம் மிக்க ‘கலைமகன் கவிதைகள்’ கவிதைத் தொகுப்புக்கு கருத்துரை வழங்குவதில் முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் என்ற வகையில் பேருவகை அடைகின்றேன்.

இதயம் கனக்கின்ற பொழுதுதான் கவிதைகள் வருகின்றன.

‘எப்போதும் வருவதில்லை கவிதை

எப்போதோ வருவதுதான் கவிதை
நினைத்தால் வருவதில்லை கவிதை
இதயம் கனத்தால் வருவதுதான் கவிதை’ என்றான் ஒரு கவிஞன்.

காலம், சூழல், இடம் என்ற காலத்தின் கட்டுப்பாட்டால் இதயம் கனக்கின்ற பொழுதுதான் கருத்துக்கள் கவிதைகளாக வெளிவருகின்றன. இவ்வாறான சமுதாய உறுத்தல்களால் உருவானதுதான் ‘கலைமகன் கவிதைகள்’ என்று கூறலாம்.

காட்டுமிராண்டிகளுக்கிடையே சண்டையேற்படும் போதும், மனிதர்களுக்கிடையே யுத்தங்கள் மூளும்போதும் மிருக பலத்தின் முடிவற்ற வெளிப்பாடுகளைத்தான் காண்கின்றோம். ஒரு இனத்தின் அழிவு இன்னொரு இனத்தின் எழுச்சிக்கு அவசியமாகின்றதா என்றுதான் இப்பொழுது கேட்கத் தோன்றுகின்றது.

நவீன சிந்தனை,
விஞ்ஞானம்
இவைகள்தான் இன்று மனித இனத்தின் பாரிய சவாலாக மாறிவருவதாகச் சில கருத்துக்களும் இன்று நிலவுகின்றன. இதனால்தானா?

‘மனிதன்,
அழுது கொண்டே பிறக்கின்றான்.
அழுது கொண்டே வாழ்கின்றான்.
இறுதியில்
ஏமாற்றத்துடன் இறக்கின்றான்’ என்ற ஆதங்கமே எமக்குள் இப்பொழுது எழுகின்றது.

மனித மனங்களை வடிவமைக்கின்ற பணியிலே கவிதைகளுக்கும் அதிகப் பங்களிப்புக்கள் இருக்கின்றன.

ஏன் மனிதன்!
இலக்கியத்தால்,
தத்துவங்களால்,
வரலாறுகளால்,
கவிதைகளாலும் வடிவமைக்கப்படுகின்றான். அந்த வகையிலே தனது சமூகப் பணிகளை கலைமகன் பைரூஸ் அவர்கள், கவிதைகள் மூலம் செய்துவருகின்றார் என்றே கூறவேண்டும்.

இன்று இந்த நாட்டில் சிறுபான்மையினராகிய நாம் அரை அடிமை வாழ்விற்குப் பழக்கப்பட்டு வருகின்றோம். எமது அரசியல்வாதிகளும் அதற்குப் பழக்கப்பட்டு வருவதால் நாமும் அதற்கான இசைவாக்கத்தை அடைந்துவருவது இன்றைய அரசியலைத் தெளிவுபடுத்துகின்றது. மத அனுஷ்டானங்கள் முதல் நாம் அணியும் உடைகள் வரையிலும் ஏற்படுத்தப்பட்டு வரும் தாக்கங்கள் எம்மைச் சற்று வேதனைக்குள்ளாக்கியுள்ளது. எமது சில மதக்கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவ்வப்போது அடிவருடுகின்ற அரசியல்வாதிகள் சலுகைகளைப் பெற்றுத் தருவதுதான் அரை அடிமை வாழ்க்கைக்கு சிறந்ததொரு ஆரம்பமாகக் கொள்ளலாம். இந்த மன இறுக்கத்தினால் நான் ‘மேற்கு மனிதன்’ என்ற எனது கவிதை நூலை புதிய பரிமாணங்களுடன் வெளிவரச் செய்தேன்.

இத்தீமைகளை இனங்காட்டக் கூடிய விதமாக நல்லது, கெட்டது என்ற மனித இயல்பின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிக்கும் பன்முகப்பரிமாணங் கொண்ட கதாபாத்திரங்கள் நிறைந்த கவிதைகளை முன்வைக்க நீங்கள் முன்வர வேண்டும். அத்தோடு உங்கள் கவிதைகளில் மனித நேயமும் விரவி நிற்கச் செய்ய வேண்டும்.

காவிய மொழியும், கவிதை மொழியும், கூறறிவும் மற்றும் புலமையும் நிரம்பப் பெற்றவர்களாலேயே சிறந்த கவிதைகளை வடிவமைக்க முடியும். பரிணாம இலக்கியப் பாதையிலே ஹோமரின் கவிதைகளுக்கும் ஒரு இவ்வுலகில் தனியிடம் இருக்கின்றது. ‘கலைமகன் கவிதைகளுக்கும்’ இந்த இடம் கிடைக்க வேண்டுமென்பதுதான் எனது பேரவாவாகும்.

ஆகவே, வாழும் போதே நீங்கள் வரலாறாக வேண்டுமென வாழ்த்துகின்றேன்.


எஸ். ஹுஸைன் மௌலானா
பன்னூலாசிரியர்
தலைவர்,
மிலேனியம் கல்வி ஸ்தாபனம்
5, முதலாம் குறுக்குத் தெரு,
கொழும்பு 11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக