It கலைமகன் கவிதைகள்: த. விமலேஸ்வரன் ஆசிரியைக்கான வாழ்த்துப் பா!

வெள்ளி, 4 மே, 2018

த. விமலேஸ்வரன் ஆசிரியைக்கான வாழ்த்துப் பா!

இன்று (04.05.2018) தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் த.விமலேஸ்வரன் ஆசிரியையின் பிரிவுபசாரத்தின் போது, அவருக்கு வழங்கப்பட்ட வாழ்த்துக் கவிதை

விண்ணுயர்ந்தே வளர்ந்தோங்கும் பனையன்ன
விடிவிற்காய் வள்ளன்மையொடு தனையீந்த
பொன்மகளார் பைந்தமிழின் பேராளர் வித்துவான்
புலவரையா செல்லையா மகளே வாழ்க!

பைந்தமிழ்க்குப் பால்வார்த்த புலவோர் செறிந்த
பொன்மனங்கொள் சான்றோர்மிக்க
யாழிளவாலையிலே
பைந்தமிழ்க்கு புகழ்கோக்க வந்துதித்த தயாபரணி விமலேஸ்வரனே
பைந்தமிழ்க் கவிதையினால் பூக்கள் தூவினோம் வாழ்க!

சைவத்தில் ஊன்றி சைவப்புலவராய்; வித்துவானாய்
சத்தான சேவைசெய்த பள்ளிமேலாளர் செல்லையா
சைவமே என்குடும்பம் என்றிருக்க நாடோறும்
சீராக வளர்த்தெடுத்த மகேஸ்வரி மகளே வாழ்க!

ஐவருள குடும்பத்து நான்காவ தருஞ்சேயாய்
இத்தரையின்வந்து இதமான கல்விப் பாலருந்தி
மேவியே புகழ்தழைக்க பல்கலையும் நுழைந்து
மென்மேலும் உயர்கல்வி தான்கற்றீர் வாழ்க!

பாங்காகப் பெற்ற கல்வியினாற்றான் புகழ்கோக்கும்
பெரியாரை ஈயுமிளவாலை மெய்கண்டான்
மங்கையரை மேன்மைசெயும் இளவாலை கன்னியர்மடம்
மேலும் பேராதனை பல்கலைக்கழகமும் சிறப்புறுமே!

இளவாலைக் கன்னியர் மடத்து ஐந்தாண்டுகளும்
மெதடிஸ்ட் தமிழ் வித்தியாலயத்து பதினான்காண்டுகளும்
கிளேயர் கல்லூரியில் சாந்தமாய் ஒன்பதாண்டுகளும்
கண்ணாக மாணாக்கரை அரவணைத்தே கல்விப்பாலீந்தீர்!

 பணியெலாம் ஓய்விலாமல் செயும் பானுமதிபோல்
பத்தொடு பதினெட்டாண்டுகள் புத்தாக்கப் பணிசெய்தீர்
பணியினில் நிறைவு கண்டிட்ட போதும்
பைந்தமிழ்க்கு முயிர்ப்பூட்டுவீர் அம்மையே நாளும்!

கணவனும் போற்றிடும் நற்காரிகையே எம்மாசிரியையே
கைகள் கோத்தேயிருந்தோம் களிப்புற்றிருந்தோம்
மணமான உங்கள்சேவை மங்கலச்சேவை
மதித்தே பேற்றினோம் சைவத்தமிழொடு வாழ்க!

நாளெலாம் உங்கட்கு நல்லன நடக்கட்டும்!
நகரும் பொழுதெலாம் நல்லனவாகட்டும்!
நாளும் வழிபடும் தெய்வம் அருள்கிட்டட்டும்!
நன்றிப்பூக்கள் அள்ளிச்சொரிந்தோம் அகங்களில் வாழ்வீர்!

கவியாக்கம் - கலைமகன் பைரூஸ்









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக