(1)
என்லெப்டொப்பில் உனைக்கண்டு
நீபோலும் பசளையானேன் நான்!
உன் மூச்சுக்காற்றில்
என் உயிர்க்காற்று
விரைந்தெழுகிறது
மெய்க்காதல் இதுவென்று!
ஸ்பரிசமில்லாத
லெப்டொப் தொடுகை மட்டுமேகொண்ட
என் கரங்கள்
உன் சிவந்த 'லிப்ஸ்' கண்டு
சுவைத்துக்கொள்கிறது
அருகில் நீயென்று!
எனக்காக பசளையானாய்நீ
உன்னில் நான்
பசளையானேன் பார்!
மின்சாரம் தடைப்பட்டதா?
விரைந்து ஏற்று
விளக்குகளை.....!
உனைப் பத்திரப்படுத்துகின்றன
என் மின்சாரம் இங்கு!
-கலைமகன் பைரூஸ்
(2)
பரீட்சை வினாப்பத்திரங்களை
பத்திரமாய்ப் பார்க்கும்
என் கரங்களுக்குள்ளிருந்து
நழுவிவிடுகிறது
ஆசிரியர் தினத்தில்
மாணாக்கர் பரிசளித்த
அந்த சிவப்புப் பேனா!
என் ஏகபத்தினி
என் இரத்தங்கள்
மெய்ம்மறந்து
சொப்பனத்தில்....!
ஏதோ காலடிச்சத்தம்
என் எண்ண அலைகளை
வீசியடிக்கின்றன!
காலையில்
பள்ளிக்கூடத்தில்
இராமாயணக் கதை சொன்னபோது
இராமனின் வீரமும்
மீசைமுறுக்கிய
குகனின் வீரமும்பற்றி
வீராப்பாய் சொன்னேன்....!
மெல்ல மெல்ல
மேலெழுகிறது சத்தம்...
கூடவே
நாய்களின் பன்றிக்கரைச்சல்
எனையறியாமல்
விடைத்தாள்கள் பறக்கின்றன!
நானே கட்டிச்சொன்ன
பேய்க்கதைகள்
இப்போது எனக்குள் ஆட்டம்காட்டுகின்றன!
கண்களை இறுக்கிக்கொள்கிறேன்
அங்கே....
கறுத்த...
மிகக் கறுத்த உருவம்
என் கழுத்து நெறிப்பதுபோலும்...
மின்விசிறி வேறு
பலமாக அடிக்கிறது
வேறுநாட்களைப் போலில்லாமல்....
மின்சாரம்
அணைவதும் எரிவதுமாக....
பயம் எனை ஆட்கொள்கிறது
நான்
நேற்று முந்நாள்
பாரதியின்
பாடலை மாணாக்கர்
சுவைக்கும்படிச் சொன்னேன்...
இப்போது......
ஆ.... ஆ....
ஆ..... ஆ....!
சொல்லத் தயக்கம்
தாரத்தை எழுப்பத் தயக்கம்
காலடிச் சத்தம் நீள்கிறது
சங்கிலிச் சத்தத்துடன் பிணைந்து....!
ஆந்தைகளின் அலறல்
எங்கேயோ குந்திரிக்கம் மணக்கிறது...
மரணமொன்று நிகழ்ந்திருப்பதாக
உள்ளம் பறைசாற்றுகிறது...
கீழே நழுவிய பேனாவை
எடுக்கத் தயங்குது உள்ளம்...
அந்தப் பேனா மை
எனக்கு
காட்டேறிகளின் இரத்தமாக...
ம்.....ம்....
ம்..... ம்....
கொஞ்சம் உரத்தகுரலில் நான்!
பிள்ளைக்குப் பக்கத்தில்
வந்து அமர்ந்துகொண்டதால்
சத்தம் தாளாமல்
வீறிட்டழுதது குழந்தை....!
பசியாற்ற எழுந்தாள்
என் பத்தினி....
ஆகா! தெம்புபிறந்தது
கொஞ்சம் கோப்பியுடன்
என்னவள்....!
முகத்தை அலசிக்கொண்டு
மீண்டும்
விடைத்தாள்கள் திருத்தும்பணியில்
நான்....!
ஆனால்.....
கீழே இருந்த பேனா மட்டும்
என் கரங்களுக்குள் இல்லை....
ஆ..............!
-கலைமகன் பைரூஸ்
2012/11/26 11:25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக